Advertisement

காங்., மாவட்ட தலைவர்களுக்கு அழகிரி பரீட்சை!

காங்., மாவட்ட தலைவர்களுக்கு அழகிரி பரீட்சை!

''கேஷியரா இருக்கிறவங்க, அட்டகாசம் தாங்க முடியலை பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அன்வர் பாய்.


''யாருவே அது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.


''தமிழகத்தின் மத்தியில இருக்கிற, மாவட்ட, பி.ஆர்.ஓ., அலுவலகத்துல, ஒரு லேடி வேலை பார்க்குறாங்க... இவங்க, முக்கிய அதிகாரி போல,

அதிகார தோரணையில வலம் வராங்க பா...


''இங்க, போட்டோகிராபரா இருந்தவருக்கும், அவங்களுக்கும் ஆகாம போயிடுச்சு... அதனால, அவரைப் பத்தி, பி.ஆர்.ஓ.,விடம் இல்லாததும்,

பொல்லாததுமா சொல்லி, அவருக்கு, போன மாச சம்பளத்தை நிறுத்தி வச்சுட்டாங்க பா...


''இது, கலெக்டருக்கு தெரியவர, அவர், பி.ஆர்.ஓ.,விடம் பேசி, சம்பளத்தை குடுக்க வச்சிருக்கார்... இதனால, வெறுத்து போன போட்டோகிராபர்,

சென்னைக்கு இடமாறுதல் வாங்கிட்டு போயிட்டார்...


''பெண் ஊழியரின் அடாவடியை, பி.ஆர்.ஓ.,வும் கண்டுக்க மாட்டேங்கிறாரு பா...'' என்ற அன்வர்பாய், ஒலித்த மொபைல் போனை எடுத்து, ''மும்தாஜ்

பேகமா... திருச்சிக்கு பேசிட்டு, அரை மணி நேரத்துல, நானே கூப்பிடுறேன்...'' எனக் கூறி, வைத்தார்.


''கிரிமினல் வழக்குகள் இருக்கிறவரை, பகுதி செயலரா நியமிக்க, கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கு ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு சென்ற

குப்பண்ணாவே தொடர்ந்தார்...


''சென்னை வேளச்சேரி பகுதி, அ.தி.மு.க., செயலர் பதவி, ரெண்டு வருஷமாவே காலியா கிடக்கு... இந்த பதவியை பிடிக்க, பலரும் முட்டி மோதிண்டு

இருந்தா ஓய்...


''அந்தப் பதவியை, 178வது வார்டு, முன்னாள் கவுன்சிலரும், அதே வார்டு செயலருமான, மூர்த்திக்கு குடுக்க முடிவு பண்ணியிருக்கா... இவர் மேல

ஏகப்பட்ட, கிரிமினல் வழக்குகள் நிலுவையில இருக்கு ஓய்... தனியார் நிலங்களை ஆக்கிரமிச்சு, கட்டப் பஞ்சாயத்து பண்ணினதாவும் புகார்கள்

இருக்கு... ரயில்வே இடத்தையும் ஆக்கிரமிச்சிருக்கார்னு சொல்றா...


''இவருக்கு பதவி குடுத்தா, கட்சிக்கு தான் கெட்ட பேர்னு, தலைமைக்கு, அ.தி.மு.க.,வினர் மனுக்களை அனுப்பிண்டு இருக்கா ஓய்...'' என்றார்
குப்பண்ணா.


''மாவட்ட தலைவர்களுக்கு பரீட்சை வச்சிருக்காருங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்தார், அந்தோணிசாமி.


''எந்தக் கட்சியில ஓய்...'' என, விசாரித்தார் குப்பண்ணா.


''தமிழக காங்கிரஸ் கட்சியில, 72 மாவட்டத் தலைவர்கள் இருக்காங்க... இதுல, யாரெல்லாம் நல்லா செயல்படுறாங்களோ, அவங்களை, மறுபடியும்

மாவட்ட தலைவர்களா நீடிக்க வைக்க, மாநில தலைவர் அழகிரி முடிவு பண்ணியிருக்காருங்க...


''இதுக்காக, மாவட்டத் தலைவர்களுக்கு, மூணு விதமான தேர்வுகள் வைக்கப் போறார்... முதல் தேர்வா, மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டங்களை

நடத்த, மாவட்டத் தலைவர்களுக்கு உத்தரவு போட்டிருக்காருங்க... இதை, எந்த குற்றம், குறையும் இல்லாம, எல்லா கோஷ்டியினரும் பங்கேற்கிற

மாதிரி நடத்தி முடிச்சா, முதல் கட்ட தேர்வுல ஜெயிச்சதா அர்த்தமாம்... அதுக்கப்புறம், அடுத்த கட்ட தேர்வுகளை அறிவிக்க இருக்காருங்க...'' என்றார்

அந்தோணிசாமி.


''ரொம்பவும் கஷ்டமான தேர்வு தான்... இதுல, காப்பி கூட அடிக்க முடியாதுல்லா...'' என, சிரித்தபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

சார் - பதிவாளர் இடமாறுதலுக்கு ரூ.65 லட்சம் பேரம்!

''சத்தமில்லாம, சர்ச்சையை அமுக்கி போட்டாங்கல்லா...'' என, மசால் வடையை கடித்தபடியே, மேட்டரை ஆரம்பித்தார், அண்ணாச்சி.


''எங்க ஓய்...'' என, விசாரித்தார் குப்பண்ணா.


''மதுரை, சி.இ.ஓ., அலுவலகத்துல, மண்டல தணிக்கை அலுவலகம் இருக்கு... இங்க, 18 மாவட்டங்களைச் சேர்ந்த, அரசு பள்ளிகளின் நியமனங்கள்,

செலவினங்களை தணிக்கை செய்வாவ வே...


''இந்த மண்டல கணக்கு அலுவலர் பணியிடம், காலியா கிடக்கு... இந்தப் பொறுப்பை, சி.இ.ஓ., தான் கூடுதலாக கவனிச்சுட்டு இருக்காவ வே...


''இங்க, பணியில இருக்கிற சிலர், மே கடைசியில, ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், 20க்கும் மேற்பட்டோருக்கு, சி.இ.ஓ., ஒப்புதல்

இல்லாம, 'சி.இ.ஓ., சார்பாக'ன்னு குறிப்பிட்டு, 'ஆடிட் அப்ஜெக்ஷன் இல்லை'ங்கிறா மாதிரி, என்.ஓ.சி., சான்றிதழ்கள் குடுத்துட்டாவ வே...


''இதுல, பெரும் தொகை கைமாறிட்டதா சர்ச்சை எழுந்துச்சு... அப்ப, சி.இ.ஓ.,வா இருந்த பெண் அதிகாரி, விசாரணைக்கு உத்தரவு போட்டாங்க... ஆனா,

தணிக்கை துறையின் மேல்மட்ட அதிகாரிகளை, ஊழியர்கள், சத்தமில்லாம சமரசம் பண்ணி, விவகாரத்தை கிடப்புல போட்டுட்டாவ வே...'' என்றார்

அண்ணாச்சி.


''பிரிஞ்சு போனவங்களிடம் துாது விட்டுட்டு இருக்காரு பா...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார், அன்வர்பாய்.


''யாரை சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.


''தினகரன், தன் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம், கார்டு அச்சிடுதல் பணிகளை, 'மாஜி' அமைச்சர் செந்தில் பாலாஜியிடம்

ஒப்படைச்சிருந்தார்... அவர், தி.மு.க., வுக்கு போயிட்டதால, அந்த பணிகளை, தங்க தமிழ்செல்வனிடம் குடுத்தாரு பா...


''என்ன ராசியோ, அவரும், தி.மு.க.,வுல ஐக்கியமாகிட்டார்... இப்ப, அந்த ரெண்டு பேரிடமும் இருக்கிற உறுப்பினர் சேர்க்கை தொடர்பான விபரங்களை

வாங்கிட்டு வாங்கன்னு, தன் ஆதரவாளர்களிடம், தினகரன் கேட்டுட்டு இருக்காரு பா...'' என்றார் அன்வர்பாய்.


''இடமாறுதலுக்கு, 65 லட்சம் ரூபாய் பேரம் பேசுறாங்க...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார், அந்தோணிசாமி.


''அந்த அளவுக்கு, 'காஸ்ட்லி'யான பதவி, எங்க ஓய் இருக்கு...'' எனக் கேட்டார், குப்பண்ணா.


''பதிவுத்துறையில பணியாளர்கள், அதிகாரிகளுக்கான பொது மாறுதல் நடந்துட்டு இருக்குங்க... லஞ்ச வழக்குல சிக்குன சில அதிகாரிகள்,

மறுபடியும், 'வளமான' இடத்தைப் பிடிக்க போட்டி போடுறாங்க...


''சில வருஷங்களுக்கு முன்னாடி, சென்னையில, ஒரு சார் - பதிவாளர், லஞ்ச வழக்குல சிக்கினார்... மேலதிகாரிகளை பிடிச்சி, லஞ்ச வழக்குல

இருந்து தப்பி, மாவட்ட பதிவாளரா, 'புரமோஷன்' வாங்கிட்டு, வெளியூருக்கு போயிட்டாருங்க...


''இப்ப நடக்குற பொது மாறுதல்ல, சென்னையில, 'போஸ்டிங்' வாங்க, களத்துல குதிச்சிருக்கார்... ஒரு முறை பதிவு பணியில இருந்தா, அடுத்த முறை,

வேற பணிக்கு போகணும்கிறது விதி... இதை மீறி, அவருக்கு, 'டிரான்ஸ்பர்' கொடுக்க, 65 லட்சம் ரூபாய் வரை பேரம் நடக்குதுங்க...'' என, முடித்தார்
அந்தோணிசாமி.


''நேத்து, 'டிவி'யில, ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் படம் போட்டான்... பார்த்தீயளா... என்ன அருமையான படம்...'' என, சிலாகித்தபடியே அண்ணாச்சி எழ,

பேசியபடியே பெரியவர்கள் கிளம்பினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • A R J U N - sennai ,யூ.எஸ்.ஏ

    பதிவு துறை IG எதையும் கண்டுகொள்வதில்லை. சைதையில் ஒருமுறை, லஞ்சம் வாங்குவதை CMCELL வரை சென்று புகார் அளித்ததில் ஒரு சிறு ஊழியரை மாற்றம் செய்தனர். என்னை நேரில் வரச்சொல்லி "விசாரணை" கு என்று கடிதம் வந்தது."அவர்கள்" இடத்துக்கு சென்றால் என்னவாகும்" என்பதை மீண்டும் cmcell கு எழுதி...அது அமுக்கப்பட்டுள்ளது நான் கொடுத்த ரூ 4000 அம்போ..மீண்டும் கிரயப்பத்திரம் வாங்க பல்லாவரம் சென்றால் அங்கும் ரூ 2000 ..எங்கு பொய் முட்டி கொள்ள..ஆக சொல்ல வந்தது என்ன வென்றால் IG அந்தஸ்துள்ள அதிகாரிகளே "லஞ்சப்பேர்வழிகள்".அதுவரிசையில் ஹன்ராஜ்.... சொல்லவும் வேண்டுமோ...இந்த அழகில் இவர் பெயர் CHIEF SECRETARY post கு பரிந்துரையில் இருந்துள்ளார்..இன்னமும் வேண்டுமா.. அடுக்குகிறேன்..

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    லஞ்சமே 65 லட்சம் கொடுக்கத் தயாராக இருப்பவர் முன்னால் எத்தனை கோடிகள் சேர்த்திருப்பார்? இந்த டீல் மூலம் கிடைக்கும் மாற்றலில் குறைந்தது பத்து கோடியாவது கிடைக்கும் என்ற எஸ்டிமேட்டில் தானே இதற்கு செலவிடுகிறார்? இவர்களெல்லாம் எந்த ரைடுக்கும் அஞ்சமாட்டார்கள் இவர்கள் உள்ளவரை இந்த நாட்டுக்கு கதிமோட்சமே கிடையாது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement