Advertisement

புரோக்கர் பிடியில் சார் - பதிவாளர் அலுவலகம்!

Share

எம்.அருள்மொழிகுமார், வழக்கறிஞர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில், அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் துறைகளில் முதன்மையானது, பதிவுத் துறை. ஆனால், இத்துறையில் நடக்கும் முறைகேடுகள், அளவற்றவை. 'அரசு ஊழியர்கள், மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஒரு இடத்தில் பணியாற்றக் கூடாது' என, அரசாணை உள்ளது. ஆனால், அதை மீறி, இத்துறையில், பல ஆண்டுகளாக, பலர் ஒரே இடத்தில் பணிபுரிகின்றனர். இதற்கு காரணம், மாவட்ட பதிவாளர்களின் கருணை.

தங்களுக்கு வேண்டிய ஆட்களுக்கு, பணி நீட்டிப்பு செய்து தருகின்றனர். அதுமட்டுமின்றி, ஒரே வளாகத்தில் உள்ள இரு அலுவலகங்களுக்குள், பகராண்மை என்ற பெயரில் நியமனம் செய்கின்றனர். இதனால், லஞ்சம் அதிகமாக நடைபெறுகிறது. சில சார் - பதிவாளர் அலுவலகங்களில், கொடிநாள் என்ற பெயரில் பணம் வசூலித்து, ரசீது தருவதில்லை. அலுவலக கோப்புகளை வெளியில் எடுத்துச் செல்வது சட்டப்படி குற்றம். ஆனால், பலரும் அவற்றை வெளியில் எடுத்துச் சென்று, நகல் எடுத்து தருகின்றனர்; சார் - பதிவாளர் அலுவலகங்களில், பார்வையாளர்கள் நோட்டு பராமரிக்கப்படுவதில்லை. இதனால், மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

சார் - பதிவாளர் அலுவலகங்களில், குடிநீர் வசதி செய்து தருவதில்லை. பொதுமக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. இருக்கும் அறைகளையும், பூட்டி விடுகின்றனர். இதனால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். சரியான இருக்கை வசதி இல்லை; மின்விசிறிகள் இயங்குவதில்லை. ஆவண எழுத்தாளர்கள், இடைத்தரகர்கள், புரோக்கர்கள் அதிக அளவில் நடமாடுகின்றனர். இவர்கள் கட்டுப்பாட்டில் தான், அலுவலர்கள் உள்ளனர். இதை, அரசு முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும். அலுவலகங்களில், அடையாள அட்டை இல்லாமல் பணிபுரியும், தனியார் நபர்களை உடனே நிறுத்த வேண்டும்.

சார் - பதிவாளர்கள், பியூன்கள், பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர். பதிவுத்துறை மேலிடம், கண்காணிப்பு கேமரா மூலம் குற்றங்களை தடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி, மேற்படி குறைகளை உடனே, அரசு நிவர்த்தி செய்ய வேண்டும்!


****

55 திட்டங்கள் கானல் நீராகி விடுமோ?வி.எம்.சந்தோஷம், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: ஒவ்வொரு ஆண்டும், அரசு, பாதாள சாக்கடைத் திட்டங்களுக்கு அனுமதி அளித்து, கஜானா பணமும் கோடிக்கணக்கில் செலவாகிறது. ஆனால், 2018ல் அனுமதிக்கப்பட்ட, 55 பாதாள சாக்கடைத் திட்டங்களில், ஒன்று கூட முழுமையாக நிறைவேற்றப்பட்டு, செயல்பாட்டுக்கு வரவில்லை. 'பாதாள சாக்கடைத் திட்டம், பெரும் சவாலாக உள்ளது' என்று, சம்பந்தப்பட்ட தமிழக அமைச்சர், சட்டசபையில் கூறியுள்ளார்.

கடலுாரில், 40 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடைத் திட்டம், 2013 - 14ல் துவக்கப்பட்டது. எந்த சாக்கடையும், எதிலும், இணைப்பு பெறாமல், ஆங்காங்கே தேங்கிக் கிடக்கின்றன. நியாயமாக, அந்த சாக்கடையை உப்பனாற்றில் கலக்கும் முன், சுத்திகரிப்பு செய்து, மீண்டும் பயன்படுத்த, தேவையான இடமும் தாராளமாக இருக்கிறது; தேவையான அதை கூட செய்யாமல் பாதியிலேயே திட்டம் நின்று விட்டது. இதை விட பெரிய கூத்து, பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ், பங்களாக்களுக்கு மட்டுமே, இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வீடுகள் நெருக்கமாக இருக்கும், பல நகர்களில், அனுமதி பெற்ற நிலையிலேயே திட்டம் உள்ளது. இன்னும், ௪௦ கோடி ரூபாய் நிதியை ஒதுக்கினாலும், அத்திட்டம் முழுமையாக நிறைவேறாது.

இதுபோன்று, பல நகரங்களில் துவங்கியும், துவங்காமலும் பாதியிலேயே திட்டங்கள் பரிதாபமாக இருக்கின்றன. அவற்றில் தண்ணீர் தேங்கி, கொசு உற்பத்தியை பெருக்குகிறது. ஏன் முடிக்க முடியவில்லை என அதிகாரிகளும் கவலைப்படவில்லை; தட்டி கேட்க வேண்டிய மக்களும் கை கட்டி வேடிக்கை பார்க்கின்றனர். இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் பாதாள சாக்கடைத் திட்டம், கானல் நீராகி விடும்!

***

அரசு விடுதிகளுக்கு விடியலை ஏற்படுத்தணும்!எஸ்.ராமையா, திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட சிறுபான்மை, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் என, பல பிரிவுகளில் பள்ளி கல்லுாரி மாணவ - மாணவியருக்கு, இலவச விடுதிகளை நடத்தி வருகிறது, தமிழக அரசு. பல அரசு விடுதிகளில், விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன; வெளியாட்கள் புழக்கமும் அதிகமாக இருக்கிறது. அரசு விடுதி சிறப்பாக, ஒழுக்கத்துடன் நடைபெற, விடுதி காப்பாளர்கள் பொறுப்பு வகிக்க வேண்டும். விடுதியில், காப்பாளர்கள் தங்கி பணியாற்றினால் தான், மாணவ - மாணவியரின் கல்வி, பழக்க வழக்கம், ஒழுக்கம், கடமை தவறாமை போன்றவற்றை கண்காணித்து, திருத்த முடியும்.

விடுதியை சமையலரிடம் ஒப்படைத்து, பொறுப்பு இன்றி, விருப்பம் போல், காப்பாளர்கள் சென்று வந்தால், அந்த விடுதி சிறப்பாக இயங்க முடியாது. விடுதியில் பெயர் இருந்தும், தங்காமல் உள்ளோருக்கு ஒதுக்கப்படும் உணவு மானியம், பொருட்கள், வழிகாட்டி நுால்கள், கையேடுகள் உள்ளிட்டவை, பல்வேறு வழிகளில் விரயமாகின்றன. விருப்பம் இன்றி சிலர் காப்பாளர்களாக விடுதிகளில் பணியாற்றுகின்றனர். சிலர் பணம் செலவிட்டு, விடுதி காப்பாளர் பணியை பெறுகின்றனர். அப்படிப்பட்ட நபர்கள் தான், விடுதியில் குற்றச் செயல்கள் நடைபெற காரணமாகி விடுகின்றனர்.

விடுதியில், எந்நேரமும் காப்பாளர், சமையல்காரர், காவலர், உதவியாளர்கள் இருப்பதை, மாணவ - மாணவியர் உறுதிப்படுத்த வேண்டும். விடுதியில் ஏற்படும் இழப்புகளை குறைக்க, நடவடிக்கைகள் மேம்பட, நம்பிக்கை ஏற்படும் விதமாக, பயோ மெட்ரிக் வருகைப்பதிவு கருவியை பொருத்தி, கண்காணிக்க வேண்டும். பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட நலத்துறையின் கீழ் செயல்படும், விடுதியில் சிறப்பாக பணியாற்றிய, காப்பாளர்கள் மூன்று பேருக்கு, சமூக நலத்துறை அமைச்சர், சமீபத்தில் விருதுகள், பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். காப்பாளர்களை நம்பி, விடுதியில் பிள்ளைகளை பெற்றோர் சேர்க்கின்றனர். அவர்களின் வாழ்க்கைக்கு விடியலை ஏற்படுத்த வேண்டும். மாறாக, இருட்டு வாழ்க்கைக்கு அழைத்து சென்று விடக் கூடாது!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement