Advertisement

மணல் தாதாவின் அழைப்பால் அலறும் அதிகாரிகள்!

''தமிழகத்துலயும், ஒரு செயல் தலைவரை நியமிக்கலாமான்னு யோசிக்கறா ஓய்...'' என்றவாறே, பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.

''எந்தக் கட்சியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''பா.ஜ.,வுல, தேசிய அளவுல, ஜே.பி. நட்டாவை, செயல் தலைவரா நியமிச்சிருக்காளோல்லியோ... தமிழகத்துல, தேர்தல் தோல்வியால, பா.ஜ., கட்சிக்காராள்லாம் சோர்ந்து போய் இருக்கா ஓய்... ''அதனால, உள்கட்சி தேர்தலை நடத்தி, புதிய நிர்வாகிகளை நியமிக்க, முடிவு பண்ணியிருக்கா... அப்படியே, துடிப்பான ஒருத்தரை, செயல் தலைவரா போட்டு, கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சவும், அகில இந்திய தலைமை யோசனை பண்ணிண்டு இருக்கு ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''ஆய்வுக்கு போன பெண் அதிகாரியை, தரக்குறைவா திட்டி அனுப்பிட்டாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு சென்றார், அன்வர்பாய்.

''எந்த துறையில வே...'' என, விசாரித்தார் அண்ணாச்சி.

''காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவுல, ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகள், ஆறு இருக்கு... இந்த விடுதிகள்ல, ஸ்ரீபெரும்புதுார் தனி தாசில்தார் சித்ரா, சமீபத்துல, திடீர் ஆய்வு நடத்தினாங்க பா... ''அப்ப, சில விடுதிகள்ல, மாணவர்களே இல்லாம, விடுதி காப்பாளர்கள், போலி கணக்கு காட்டிட்டு இருக்கிறது தெரிஞ்சது... அவங்களை கண்டிச்சதோட, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்ப போறதா, தாசில்தார் சொன்னாங்க பா...

''கடுப்பான விடுதி காப்பாளர்கள், தாசில்தாரை தரக்குறைவா திட்டியிருக்காங்க... இதுல, மன உளைச்சலான தாசில்தார், லீவுல போயிட்டாங்க பா... இதை, சிலர் மொபைல் போன்ல, வீடியோவும் எடுத்திருக்காங்க... ''இந்த வீடியோ, உயர் அதிகாரிகள் பார்வைக்கு போயும், விடுதி காப்பாளர்கள் மேல, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கலை... இதனால, வருவாய் துறை ஊழியர்கள், போராட்டம் நடத்த தயாராகிட்டு இருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''மணல் தாதா போன் வந்தாலே, அலறுதாவ வே...'' என, கடைசி தகவலுக்கு வந்த அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''புதுக்கோட்டை மாவட்டத்துல, மணல் கடத்தல் ஜரூரா நடக்கு... இந்த மாவட்டத்தைச் சேர்ந்த, பிரபல மணல் தாதாவின் உறவினர் ஒருத்தர், போலீசார், வருவாய் துறை அதிகாரிகளை, கைக்குள்ள வச்சிருக்காரு வே... அந்த தாதா, அ.தி.மு.க., நலம் விரும்பியான, சேகர் ரெட்டிக்கு வேண்டப்பட்டவரு... ''தங்களை தவிர, வேற யார், மணல் கடத்தல்ல ஈடுபட்டாலும், அவங்களை உடனே பிடிக்க சொல்லி, அதிகாரிகளுக்கு போன் போடுதாரு... அவர் பேச்சை கேட்காத அதிகாரிகளுக்கு, பல விதங்கள்லயும் நெருக்கடி வருது வே...

''இதனால, அவர்ட்ட இருந்து போன் வந்தாலே, அதிகாரிகள் நடுங்குதாவ... நேர்மையான சில அதிகாரிகள், 'இவர் தொல்லையே வேண்டாம்'னு, வெளியூருக்கு இடமாறுதல் கேட்டுட்டு இருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.

அரட்டை முடிந்து, அனைவரும் கிளம்ப, எதிரில் வந்த வாலிபரிடம், ''கார்த்திக்... ஊர்ல இருந்து எப்ப வந்தீங்க... அப்பா, அம்மா சவுக்கியமா...'' என, அந்தோணிசாமி நலம் விசாரிக்க, மற்றவர்கள் நடையைக் கட்டினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • A R J U N - PHOENIX ....ARIZONA..,யூ.எஸ்.ஏ

    ................கார்த்திக்... ஊர்ல இருந்து எப்ப வந்தீங்க...சேகர் ரெட்டிக்கு வேண்டியவர்,இப்படியே..இந்த அரசும் மூன்று வருடங்களை கழிந்துவிட்டது.சுகாதார மந்திரி/தளவாய்-சுந்தரம் ஒரு SLIP ஐ வெளியே எறிகிறார்,கட்டுக்கட்டாக பணம் ஆக்கப்படுகிறது இருந்தும் "இதுவரை" எந்த ACTION நும் இல்லை."எள்ளோடுமே" லஞ்சப்பேர்வழிகள்" தானா.யாரை நம்புவது?..உயர் நீதிமன்றம் தான் பதில்சொல்லவேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement