Advertisement

இதற்கு ஏன் இவ்வளவு கூப்பாடு?

Share

பத்மினி தேசிகன், விழுப்புரத்திலிருந்து எழுதுகிறார்: காஷ்மீர் மாநிலத்தில், தங்கள் பிள்ளைகளை, வெளி நாட்டில் தரமான பள்ளியில் படிக்க வைக்கின்றனர், பயங்கரவாத தலைவர்கள். ஆனால், பிற குழந்தைகளை பள்ளிக்கு செல்ல விடாமல், மூளை சலவை செய்து, பயங்கரவாத செயலுக்கு துாண்டி விடுகின்றனர். தங்கள் வீட்டு பிள்ளைகளை, ஹிந்தியை படிக்க வைத்து, ஏழை வீட்டு பிள்ளைகளை, அம்மொழியை கற்க விடாமல் தடுக்கின்றனர், தமிழக அரசியல்வாதிகள். ஒவ்வொரு மாநிலத்திலும், மத்தியிலும், மற்ற சமூகத்தில் பிறந்தோர், இட ஒதுக்கீட்டால் பயன்பெறுகின்றனர். உயர் ஜாதியில் பிறந்தோர் பயன்படும் வகையில், 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால், சுனாமி வந்தது போல், தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கதறுகிறார்.

நாடு முழுக்க, பழங்குடியினர், சீர்மரபினர், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர்களின் வாழ்வில் ஒளி ஏற்றவே, 69 சதவீதம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தந்த ஜாதியில் உள்ள, பணக்கார வீட்டு பிள்ளைகள் தான், ஒதுக்கீட்டால் பயன் அடைந்து உள்ளனர்; வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர், எத்தனை பேர் பயன் அடைந்து உள்ளனர் என, விவரம் தெரியவில்லை. காமராஜரை போல் உள்ளோர், 69 சதவீத ஒதுக்கீட்டின் பயனால், நன்மை அடைந்தால் பாராட்டலாம். உயர் ஜாதி வகுப்பில் உள்ள பணக்கார வீட்டு பிள்ளைகளுக்கு, மத்திய அரசு, 10 சதவீத இடங்களை ஒதுக்கவில்லை; அது, ஏழை வீட்டு பிள்ளைகளுக்கு என்பதையே, உணர வேண்டும்.

பொருளாதாரத்தில் நலிவடைந்த, உயர் ஜாதியினரின் பிள்ளைகளுக்கு, ௧௦ சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் பட்சத்தில், தமிழகத்துக்கு கூடுதலாக, 1,000 எம்.பி.பி.எஸ்., 'சீட்' கிடைக்கும். அதில், 15 சதவீதம் மத்திய ஒதுக்கீட்டின் படி, வெளிமாநில மாணவர்களுக்கு கூடுதலாக கிடைக்கும். ஆனால், 69 சதவீத இடஒதுக்கீட்டின்படி, 586 இடங்கள் ஒதுக்கப்பட்ட பின், வெறும், 264 இடங்கள் தான் உயர் ஜாதியில் பிறந்து, வறுமைக்கோட்டிலுள்ள பிள்ளைகளுக்கு பயன் தரும். இதற்கு ஏன் இவ்வளவு கூப்பாடு?

***

எங்களை தடுக்காதீர்கள் அரசியல்வாதிகளே!கே. கந்தசாமி, கோவையிலிருந்து எழுதுகிறார்: கிராமங்களில், 'வேண்டாத பொண்டாட்டி கால் பட்டால் குற்றம்; கைபட்டால் குற்றம்' என்ற சொலவடை உண்டு. அதைப் போல், நின்றால், உட்கார்ந்தால், படுத்தால், நடந்தால், குற்றம் என சொன்னால், எப்படி தமிழர்கள் வாழ்வது?தொட்டதற்கு எல்லாம் குற்றம் கண்டு, 'குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும்' அரசியல் வியாபாரிகள் தான் இங்கு உள்ளனர்.

'தமிழக மக்கள், ஹிந்தி கற்கக் கூடாது; 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்; ஏழை மாணவ - மாணவியர், இலவசமாக உயர் தரமான வசதிகளுடன் படிக்கக்கூடிய, 'நவோதயா' பள்ளிகளை, தமிழகத்தில் கொண்டு வரகூடாது' என, வயிற்றுப் பிழைப்புக்காக, அரசியல் வியாபாரிகள் பேரம் பேசுகின்றனர். பெற்றோரும், மாணவ - மாணவியரும் முழு மனதுடன், 'நீட்' தேர்வை ஏற்று, பல ஆண்டுகளாகி விட்டன.

ஹிந்தியை கற்றுக் கொள்ள அனுமதிக்காமல், அரசு பள்ளிகளுக்கு அனுப்பி, தமிழிலேயே படிக்க வைத்து, தமிழ் பண்டிட் ஆக்குங்களேன். 'தமிழ் எங்கள் உயிர் மூச்சு' என்று தம்பட்டம் அடிப்போரே... ஒரு போஸ்ட் கார்டு அளவு உள்ள ஒரு தாளில் தமிழில் பிழையில்லாமல் எழுத, உங்களில் யாருக்காவது திராணி இருக்கிறதா?

தேசிய மொழியாக இருக்கும், ஹிந்தியை மட்டும், படிக்கக் கூடாது என, மக்களை உசுப்பி விட்டு, குத்தாட்டம் போட்டு குளிர் காய்கிறீர்களே...! வாழ்க்கை மற்றும் நாட்டின் பொருளாதார மாற்றத்துக்கு, தமிழக மக்கள் தயாராகி விட்டனர். இதை, ஏன் அரசியல்வாதிகள் தடுக்கிறீர்கள்? 'தமிழக மக்களுக்கு நல்லது செய்கிறோம்' என்ற வில்வித்தைகளை காட்டி, மக்களை ஏமாற்றி, பிழைப்பு நடத்த வேண்டாம். வளம் காணப் போகும் தமிழகத்தை, சுயநல அரசியல் வியாபாரத்தால், பாலைவனமாக்கி நாசமாக்கி விடாதீர். தொட்டதற்கு எல்லாம் கண்ணை மூடி, எதிர்ப்பு, ஆர்ப்பாட்டம் என்ற குப்பையை துாக்கி வீசுங்கள்; வளமாக வாழ எங்களுக்கு வழி விடுங்கள்!

***

சிங்கப்பூர் போன்று சுபிட்சமாக மக்கள் இங்கும் வாழலாம்!சொ.பீமன், விருதுநகரிலிருந்து எழுதுகிறார்: 'தண்ணீர் நிர்வாகத்தில், கெட்டிக்கார குட்டித் தீவு' என்ற தலைப்பில், 2019 ஜூலை, 1ல், 'தினமலர் பட்டம்' இதழில், வெளியான கட்டுரையை படித்து, மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். சிங்கப்பூர் நீர் நிர்வாகத்தை, நேரில் பார்த்தது போன்ற திருப்தி ஏற்பட்டது. சிங்கப்பூரில், இயற்கை நீர் ஆதாரங்களான, ஆறுகள் எதுவும் இல்லை. காலியாக கிடந்த பல குளங்கள், பிரமாண்ட மழை நீர் பிடிப்பு பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. சிங்கப்பூர் முழுவதும், ௧௭ நீர்த் தேக்கங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன; இது, வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

சிங்கப்பூரில், உருவாக்கப்பட்டு உள்ள செயற்கை நீர்த்தேக்கம் ஒன்று, 'தினமலர் பட்டம்' இதழில், படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது. அந்த செயற்கை நீர்த்தேக்கம், கடல் போல் காட்சி அளிக்கிறது. தமிழகத்தில், எத்தனையோ இயற்கை ஆறுகள் உள்ளன. அவை, கோடை காலங்களில் வறண்டும், மழைக் காலங்களில், வெள்ளம் கரை புரண்டும் ஓடி, வீணாக கடலில் கலக்கின்றன. மழைக் காலங்களில் எவ்வளவு தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது என்பதை, அரசே, புள்ளி விவரங்கள் அளிக்கிறது. உபரி நீரை தடுத்து, காலியாக கிடக்கும் பல இடங்களில், செயற்கை நீர் தேக்கங்கள் ஏற்படுத்தப்பட்டு, தண்ணீரை சேமிக்கலாம்.

'சென்னை குடிநீர் தேவைக்கு, ஜோலார் பேட்டையில் இருந்து ரயில் மூலம், குடிநீர் கொண்டு வரப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது. முன்னாள் பொதுப் பணித் துறை அமைச்சர், துரைமுருகன், 'ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர், ரயில் மூலம் சென்னைக்கு எடுத்து வரப்பட்டால், போராட்டம் வெடிக்கும்' என்கிறார். அவரது கட்சித் தலைவர், ஸ்டாலின் வாழும், சென்னைக்கு, குடிநீர் எடுத்து வர மறுக்கும் அவருக்கு, எப்படி கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கொண்டு வர, வாதாடும் உரிமை உள்ளது? இதுபோன்று, குறுகிய மனப்பான்மை உடைய அரசியல்வாதிகளால், நாடு முன்னேற்ற பாதையில் செல்லாது. சிங்கப்பூர் போன்று, சுபிட்சமாக தமிழக மக்கள் வாழலாம் என்பதை, ஆட்சியாளர்கள் உணர வேண்டும்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Krish - Chennai ,இந்தியா

    தமக்கு ரெண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை , அடுத்தவர்க்கு ஒரு கண் போக வேண்டும் என்று நினைப்பவர்கள் பத்து சதவீதத்தை எதிர்ப்பவர். 690 வருவது தெரிவதில்லை, 100 போவது தெரிகிறது. (மிகுதி பொது ) - 1,000 எம்.பி.பி.எஸ்., 'சீட்' கிடைக்கும். அதில், 15 சதவீதம் மத்திய ஒதுக்கீட்டின் படி, வெளிமாநில மாணவர்களுக்கு கூடுதலாக கிடைக்கும். ஆனால், 69 சதவீத இடஒதுக்கீட்டின்படி, 586 இடங்கள் ஒதுக்கப்பட்ட பின், வெறும், 264 இடங்கள் தான் உயர் ஜாதியில் பிறந்து, வறுமைக்கோட்டிலுள்ள பிள்ளைகளுக்கு பயன் தரும். இதற்கு ஏன் இவ்வளவு கூப்பாடு?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement