Advertisement

விழிப்புணர்வு லேசில் வருமா?

சமுதாயத்தில் தீங்கு தரும் சில விஷயங்கள் தொடரத் தான் செய்யும். இதை குற்றச் செயல்கள் அல்லது ஏற்கத்தகாதவை என்று, அவரவர் தகுதி அல்லது இருக்கும் சூழ்நிலையை வைத்து முடிவு செய்வது, காலம் காலமாக இருக்கும் அணுகுமுறை. போதை என்பது, எந்த அளவு சீர்கேடு செய்கிறது என்பதை விட, மது என்பது தொடர் வினையாகும். இதனை உடனடியாக சட்டங்களால் எவ்வளவு கட்டுப்படுத்த முடியும்? கல்வி அல்லது நல்ல சுற்றுச்சூழல் அல்லது உடல் நலம் குறித்த அதிகமான விழிப்புணர்வு மட்டும் அல்ல, அதைப் பின்பற்றும் உணர்வு, இளைய சமுதாயத்திடம் ஏற்படுவது, மிகச் சாதாரண காரியம் அல்ல. அழகான குளியல் தொட்டியில், மனம் மகிழ்ந்து நீராடும் ஒருவரிடம், ஒரு சிறு நெருப்பைக் காட்டி, இந்த நெருப்பு சுடும் என்று ஒருவன் இயல்பாக பேசினால், அந்த நெருப்பின் சுடும் தன்மை, அவனுக்குத் தெரியாது.

தமிழக சட்டசபையில், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அளித்த கொள்கை விளக்க குறிப்பு, சமுதாயத்தில், கிட்டத்தட்ட, உணவு, உடை போல முக்கிய அம்சமாக மாறி இருக்கிறதோ என்று எண்ண வைக்கிறது. கடந்த, 16 ஆண்டுகளில், அரசின் வருவாய் இத்துறை மூலம் பட்டியலாக தரப்பட்டிருக்கிறது. 2009 - 2010 ஆண்டு, 12,490 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. அதில் இருந்து தொடர்ச்சியாக, ஆண்டுதோறும் , அதிகரித்த இவ்வருவாய், 2018-2019ம் ஆண்டில், 31,157 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஆயத்தீர்வை வருவாயில் மதிப்புக்கூட்டு வரி சேர்ந்திருப்பதால், இத்தொகை கிடைக்கிறது என்ற வாதம் வேறு விஷயம்.

தமிழகத்தில் உள்ள எட்டு கோடி மக்களில், குறிப்பாக, 18 வயது முதல், 70 வயதுள்ளவர்களில், இப்போது பெண்களும் அதிக அளவில், சேர்ந்து கொண்டிருக்கின்றனர். இதை, சரியான ஆய்வு மூலம், கணக்கிட முடியாது. நாடு முழுவதும், மது அருந்துவோர் எண்ணிக்கை, 16 கோடி என்ற தகவல், பார்லிமென்டில் தரப்பட்டிருக்கிறது. 186 மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சம் குடும்பங்களில் எடுக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையில், அது அமைந்துள்ளது.

ஏற்கனவே பள்ளிகள், மருத்துவமனைகள் அல்லது பொதுமக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் மதுக்கடைகள் இருப்பதற்கு அவ்வப்போது எதிர்ப்புகள், அதன் அடிப்படையில் சில நுாறு மதுக்கடைகள் மூடல் என்று இருந்தாலும், மது மற்றும் கஞ்சா உட்பட போதைப்பொருட்கள் விற்பனை குறித்த, பல்வேறு அரசு நடவடிக்கைகள், தொடரத்தான் செய்கின்றன. இவற்றை தடுக்க, ஏகப்பட்ட சட்டப் பிரிவுகள் உள்ளன.
மதுமட்டும் அல்ல; போதைப் பொருட்கள், அதிலும் கஞ்சா சாக்லெட் வரை, இதன் வளர்ச்சி அதிகமாக உள்ளது. பொதுவாக, 'பால் விற்பனை செய்யும் கடைக்கு விளம்பரம் தேவை; மது, போதை விற்பனைக்கு, விளம்பரம் ஏதும் வேண்டாம்' என்பது நீண்ட கால பழமொழி.மது விற்பனையை அரசு முறைப்படுத்தாவிட்டால், கள்ளச் சாராயம் பலரது உயிரைக் குடித்து விடும் என்பது, சரியான வாதமே. சமீபத்தில் பாண்டிச்சேரியில், சாராய விற்பனை உயர்வுக்கு மக்கள் எதிர்ப்பு எந்த அளவு இருந்தது என்பது, இதன் ஆதிக்கத்திற்கு அடையாளம்.மதுவிற்பனையை அரசு முற்றிலும் நிறுத்தும் பட்சத்தில், தற்போது கிடைக்கும் வரிவருவாய், மற்ற எத்துறையில் கிடைக்கும் என்பது அடுத்த வினா.

மதுவின் பிடியில் இருந்து விலகி திருந்தியவர்கள் பெற்ற அரசு மானியம், வெறும், 5 கோடி ரூபாய் என்பதும், அவர்கள் எண்ணிக்கை வெறும், 1,580 என்ற தகவலையும், அரசு வெளிப்படையாக்கி உள்ளது. அத்துடன் மதுபான விற்பனை கடை பணியாளர்களுக்கு, தற்போது சம்பள உயர்வு தந்திருப்பது கவனிக்கத்தக்கது. ஆனால், இவர்களை அரசு பணியாளர்களாக ஆக்குவது எளிதல்ல. தவிரவும், மது விற்பனையை முற்றிலும் ரத்து செய்வது இயலாதது. ஆனால் இன்று, அரசு காட்டும் புள்ளி விபரத் தகவல், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 5,000 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் குறைந்தால் கூட, ஏற்றுக் கொள்ளலாம் என்பதையே காட்டுகிறது.

எளிய மக்களிடையே, கல்லீரல் சம்பந்தமான சிகிச்சை செலவு அதிகரிக்கும் நிலை உருவாகி விட்டால், அது அபாய அறிகுறி. மது மற்றும் போதைப் பழக்க பாதிப்புகளால், சில நோய்கள் உருவாவது மட்டும் அல்ல; குற்ற வழக்குகளும் அதிகரித்து விடும். ஆகவே, இக்காரணிகளை இணைத்து பார்த்து, ஒரு அணுகுமுறையை உருவாக்கும் சூழலில், நாம் நிற்கிறோம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement