Advertisement

மனங்களை வளர்ப்போம்

னம் போல் வாழ்வு' என்று வாழ்த்துவது நம் பண்பாடு. மனம் என்றால் என்ன? மனம் எங்கே உள்ளது? என்பதற்கு விஞ்ஞானத்திலும், மெய்ஞானத்திலும் பல விளக்கங்கள் இருப்பினும் அம்மனதின் இருப்பிடத்தை இறைவனே அன்றி யாராலும் கண்டறிய முடியாது.

பகுத்தறிவுள்ள மனம், இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட வரம். அதனால் தான் அனைத்து சக்திகளும் பிறக்குமிடம் மனமாகும். மனம் செம்மையுற வேண்டுமெனில் தகுந்த வழிகாட்டுதலும், வழிநடத்துதலும் அவசியம். நேற்றைய தினம் போய் விட்டது. நாளைய தினம் நிச்சயமற்றது. இன்றைய தினத்தில் மனமகிழ்வோடு வாழ சக்தி வேண்டும்.மனதின் சக்திகள்நல்லவற்றை நாடும் சக்தி, தீயவற்றை தேடும் சக்தி என்று இரு வகையாக பிரிக்கப்படுகிறது. உள்ளத்தின் உயர் சக்தி நல்லவற்றையே நாடும். உள்ளம் செம்மையோடு இருந்தால், உடல் வலுப்பெறும். உடல்நலமோடு இருந்தால், உள்ளம் வளமோடு இருக்கும். இதையே 'உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்,' என திருமந்திரம் வலியுறுத்துகிறது. மனம் நல்லவற்றை நாடும் போது தடைகள் தானே வரும். உறுதியான வேருடைய மரங்கள் சாய்க்கப்பட்டாலும், உயர்ந்து நிற்கும் மலைகள் தகர்க்கப்பட்டாலும், உயர்ந்த குறிக்கோளுடைய வலிமையுள்ள மனம் மட்டும் என்றும் சிதைக்கப்படுவதில்லை. அதற்கு சிறந்த எடுத்து காட்டு ஆங்கிலேய ஆட்சியின் போது சுதந்திர வேட்கையுடன் விடாது இடையூறுகள் தொடரினும் வலிமையோடு, நெஞ்சில் உறுதியோடு, நல்லவற்றை நாடும் உயர் சக்தியாக என்றும் அழியாத, மனதை விட்டு நீங்காத பாடல்களை தந்தார் பாரதியார். கூனியால் கைகேயியின் மனம் மாற்றப்பட்டு ராமர் காட்டுக்கு சென்றார். சகுனியால் கவுரவர்களின் மனம் மாற்றப்பட்டு பாண்டவர்கள் காட்டுக்கு சென்றார்கள். சகுனியும்,கூனியும், தீய சக்திகளாக தீய எண்ணங்களை விதைத்ததால் தீராப்பழியை ஏற்று கொண்டார்கள். மனநலம் உடையோரே நல்லவற்றை நாடுவர். மனநலம் என்பது தனக்கும், மற்றவர்களுக்கும், நிறைவான இசைவான செயற்பாட்டை அளிப்பது என மனநல வல்லுனர் ேஹட்பீல்டு கூறுகிறார். நல்லவற்றை நாடுவதற்கும், தீயவற்றை தேடுவதற்கும் பல காரணிகள் உண்டு என உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

அதில் முக்கியமான இரு காரணிகள் மரபு மற்றும் சூழல்.மரபுமரபு என்பது பிறப்பால் பெற்றோர்களிடமிருந்து உடற்கூறு பண்புகளான தோலின் நிறம், உடலமைப்பு மற்றும் உளக்கூறு பண்புகளான மனநிலை, நுண்ணறிவு போன்றவற்றை பரம்பரையாக பெறுதலே ஆகும். உடல் நோய்க்கும், மனநோய்க்கும் மரபு முக்கிய காரணி ஆகும்.'நலத்தின் கண் நாரின்மை தோன்றின் அவனைக்குலத்தின் கண் ஐயப்படும்'உடல் நலம், மன நலம் இவற்றின் மீது ஐயப்பாடு தோன்றின் அது குலத்தின் கண் ஆராயப்படும் என்று மரபைப் பற்றி திருவள்ளுவர் கூறியுள்ளார். இல்லத்தில் உருவாகும் சூழல்களால் மனநலம் பாதிக்கப்படும்.

முக்கியமாக குழந்தைகளுக்கு ஏழு வயது வரை மனதில் எதை விதைக்கிறோமோ அதைத் தான் எதிர்காலத்தில் அறுவடை செய்ய முடியும். வீரசிவாஜியின் குழந்தைபருவத்தில் கூறப்பட்ட வீரமுள்ள கதைகள் எதிர்காலத்தில் உறுதியுள்ள, மனவலிமையுள்ள சத்ரபதி சிவாஜியாக மாற்ற உதவியது. தகுந்த நேரத்தில் கருத்து பரிமாற்றமின்மையால் இன்றைய காலகட்டத்தில் மன அளவில் பெற்றோர்களும், குழந்தைகளும் துயரத்திற்கு ஆளாகின்றனர். காலம் கடந்து யோசிக்கும் போது வாழ்வு கழிந்து விடும். குழந்தைகளின் மன நல பாதிப்புக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

அளவுக்கு அதிகமான பாதுகாப்பு அல்லது பாதுகாப்பின்மை, ஒப்பீடு, தவறாக மதிப்பிடுதல், எதிர்மறை எண்ணங்களை விதைத்தல், அளவுக்கு அதிகமான தண்டனை, கருத்துப் பரிமாற்ற மின்மை, மணமுறிவு, நாகரிக மாற்றங்கள். இவை அனைத்தும் குழந்தைகளின் மனநல மின்மைக்கு காரணிகளாக செயல்படுகின்றன.சூழல்இதமான மனமே மகிழ்வான வாழ்வை பெறும். இதமான மனதை உருவாக்குவது சுகமான சூழலே.

அன்பான மனிதர்கள், அக்கறை காட்டும் உறவு, பரிவான உள்ளம், கூடிவாழும் ஒருமைப்பாடு, இயற்கையின் அரவணைப்பு, நலம் தரும் புத்தகங்கள், சுகம் தரும் இசை இவை அனைத்தும் மனிதனுக்கு மன நலத்தை உருவாக்கும். தெளிவான சூழல் இருப்பின் மனவாயிலில் வசந்தம் வந்து நிற்கும்.'மனதில் உறுதி வேண்டும். வாக்கினிலே இனிமை வேண்டும், நினைவு நல்லது வேண்டும், கனவு மெய்யப்பட வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும், காரியத்தில் உறுதி வேண்டும், மண் பயனுற வேண்டும், உண்மை நின்றிட வேண்டும்' என்ற மகாகவி பாரதி கூற்றின்படி மனதில் உறுதி இருப்பின் மனநலம் தானே வரும். மனநலம் பேணுதல் என்பது எளிதான காரியம் அல்ல. உடல்நலமின்றி இருப்பின் எளிதில் கண்டறியலாம். ஆனால் மனநோயை எளிதில் கண்டறிய முடியாது. தகுந்த கண்காணிப்பால் மட்டுமே அறிய முடியும். மனநோயாளிகள் சமூகத்திற்கு பயந்து மனநல வல்லுனரை உடனே நாடுவதில்லை. மனநோயை தகுந்த நேரத்தில் கண்டறிந்து உடனே டாக்டரை நாடினால் மனநலத்தை எளிதில் அடையலாம்.மனநலம் பேணும் வழிகள்மனநலத்தை பேண பல வழிகள் உண்டு. வளமான விதைகளை பொறுத்து பயிர்கள் விளைவது போல், மனதில் அனுமதிக்கும் நலமான எண்ணங்களை பொறுத்தே விளைவுகள் அமையும். பிறரை ஈர்க்க கூடிய மாற்றக்கூடிய பேராற்றல் உடைய ஒரே சக்தி மன சக்தி. உன்னால் முடியும் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு உள்ளத்திலும் உருவேற்றுங்கள்.


அந்நம்பிக்கை எத்தகைய தடைகளையும் தாண்டி செல்லும் என்று டாக்டர் உதயமூர்த்தி கூறுகிறார்.மனம் எப்போதும் விழிப்புணர்வோடும், தெளிவோடும் இருந்தால், சிக்கல்களில் இருந்து எளிதில் விடுபட முடியும். நம் கண் முன்னே இருக்கும் பொருளை பல நேரங்களில் காணவில்லை என தேடுவோம். மனக்குழப்பமும், பதட்டமும் இருந்தால் தன்னிலையில் இருந்து மனம் மாறி விடும். இதற்கு மாவீரன் நெப்போலியனின் செயல் எடுத்து காட்டு. நெப்போலியன் பிரிட்டனிடம் தோல்வியுற்று தனிச்சிறையில் தனிமைப்படுத்தப்பட்டபோது, நெப்போலியனை காண வந்த நண்பர், ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து, ''சிந்தனையை சிதற விடாது உன்னிப்பாக இதை கவனித்தால் தனிமை நீங்கும்,'' என கூறிச்சென்றார்.


மன அமைதி குன்றிய நிலையில் இருந்த நெப்போலியனின் மனச்சிந்தனை செயல்படவில்லை. பின்னர் இறந்தும் போனார். பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட ஆய்வு செய்த போது, அந்த அட்டையின் நடுவில் சிறிய அளவில் சிறையில் இருந்து தப்பிப்பதற்கான குறிப்பு இருந்தது.மாற்றங்களை ஏற்கும் மனம்தோற்றமும், மாற்றமும், ஏமாற்றமும் வாழ்வில் அனைவருமே எதிர்கொள்ள வேண்டிய நிகழ்வு. அந்நிகழ்வை மன அமைதியோடு, நம்பிக்கையோடு, எதிர்கொண்டு மனநலத்தை உருவாக்க வேண்டும்.

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை. நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை. வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டும் என கவியரசர் கண்ணதாசன் வாழ்வின் நிலை பற்றி உணர்ந்து பாடியுள்ளார். சிறுவிதையே தனது முயற்சியால் மேல் தோலையும், கடினமான ஓட்டையும் தாண்டி, பாரமான பாறையும் விலக்கி, தன்முகம் காட்டும் போது ஆறறிவு கொண்ட மனிதனால் மனவலிமையோடு, நம்பிக்கையோடு, நேர்மறை எண்ணத்தோடு, தடைகளை தாண்டி, வெற்றியை காண முடியும்.


இதுவும் கடந்து போகும் என்பதை நினைவு கூர்ந்து வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை மனதால் ஏற்றுக் கொள்ள தயாராக வேண்டும்.விழிப்புணர்வோடு மனங்களை வளர்ப்போம். மனநலம் பேணுவோம். மன நலம் என்பது நம் கையிலும், நம்பிக்கையிலும் தான் உள்ளது. வாழ்க மனநலத்துடன்...-முனைவர் ச.சுடர்க்கொடிகல்வியாளர், காரைக்குடி94433 63865

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement