Advertisement

பழநி கோவில் முறைகேட்டில் தப்பிய அதிகாரிகள்!

''நாயரே, சூடா சுக்கு காபி குடும்... தொண்டை, 'நமநம'ன்னு இருக்கு...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்த குப்பண்ணா, ''வீடியோ கேம்ஸ் சொல்லி கொடுத்து, 'டபுள் புரமோஷன்' வாங்கிட்டார் ஓய்...'' என, விஷயத்திற்கு வந்தார். ''எந்த துறையில, யாரு பா...'' எனக் கேட்டார், அன்வர் பாய்.

''பதிவுத்துறையில தான்... இங்க, உதவியாளரா வேலை பார்க்கற சிலர், உயர் அதிகாரிகளை, 'ஐஸ்' வச்சு, மளமளன்னு பதவி உயர்வுகளை வாங்கிடறா... சில வருஷங்களுக்கு முன்ன, ஐ.ஜி., யா இருந்த மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகிட்ட ஒரு உதவியாளர், ரொம்பவே நெருக்கமாகிட்டார் ஓய்... ''அப்படியே, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆத்துக்குப் போய், அவரது குழந்தைகளுக்கு வீடியோ கேம்ஸ் சொல்லி கொடுத்து, நல்ல பேர் எடுத்துட்டார்... இதை பயன்படுத்தி, 'டபுள் புரமோஷன்' வாங்கி, இப்ப கணினி பிரிவு உதவி, ஐ.ஜி.,யா ஆயிட்டார்னா பார்த்துக்கும்... ''ஆனா அவருக்கு, கணினி பத்தி எந்த தொழில்நுட்பமும் தெரியாதாம்... இதனால, அங்க இருக்கற அனுபவசாலி அதிகாரிகள் புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''வாங்க லட்சு மணன்... வீட்டுல எல்லாரும் சவுக்கியமா...'' என, நண்பரிடம் நலம் விசாரித்தபடி, ''மறுபடியும் மூக்கை நுழைக்கிறாங்க...'' என, அடுத்த தகவலுக்கு தாவிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்... ''மின் வாரியத்துல, தலைமை பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் பதவிகள்ல இருந்து, 'ரிடையர்' ஆனவங்க, 'ஆபீசர் ஆன் ஸ்பெஷல் டியூட்டி'ங்கிற பேர்ல, மறுபடியும் வாரியத்துல, வேலைக்கு சேர்க்கப்பட்டாங்க... ''இவங்களுக்கு, வழக்கமான ஓய்வூதியம் போக, மாசம், 75 ஆயிரம் ரூபாய் சம்பளம், 'ஏசி' அறை, கார், உதவியாளர்கள்னு, பல சலுகைகள் குடுத்தாங்க... இவங்களால, வாரியத்துக்கு எந்த பலனும் இல்லைன்னு தெரிஞ்ச மின்வாரியத்தின் முன்னாள் தலைவர் சாய்குமார், 'ரிடையர்' அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிட்டாருங்க...

''ஆனா, இப்ப, ஓய்வு பெற்ற இரண்டு தலைமை பொறியாளர்களுக்கு, மின் திட்டங்கள் பிரிவுலயும், மத்திய அரசுல பணிபுரிந்து, ஓய்வு பெற்ற ஒரு அதிகாரிக்கு, சுரங்க பிரிவுலயும், மறுபடியும் வேலை குடுத்திருக்காங்க... இது தெரிஞ்சதும், ஓய்வு பெற்ற பலர், மறுபடியும் வாரியத்துல வேலை வாங்க, சிபாரிசுகளை தேடி ஓடிட்டு இருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''ஊழியர்களை மட்டும் பலிகடா ஆக்குறதான்னு குமுறிட்டு இருக்காவ வே...'' என, கடைசி மேட்டரை ஆரம்பித்தார், அண்ணாச்சி.

''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர் பாய்.

'பழநி முருகன் கோவிலுக்கு வர்ற பக்தர்களிடம், வரிசையில நிற்காம, சீக்கிரமா தரிசனம் செய்ய ஏற்பாடு பண்றதா, ஒரு கும்பல் பணம் வசூலிச்சிட்டு இருந்துச்சு... இப்படி முறைகேட்டுல ஈடுபட்டதா, 12 ஊழியர்களை, 'சஸ்பெண்ட்' பண்ணிட்டாவ வே... ''இவங்க, சென்னை அறநிலைய துறை ஆணையர் அலுவலகத்துக்கு ஒரு புகார் அனுப்பியிருக்காவ... ''அதுல, 'நாங்க வசூலிச்ச பணத்துல, மலை கோவில்ல இருக்கிற ஒரு பெண் அதிகாரி உட்பட, அஞ்சு பேருக்கு, தினமும், அஞ்சுல இருந்து, 10 ஆயிரம் ரூபாய் வரைக்கும், கப்பம் கட்டினோம்... அவங்களை விட்டுட்டு, எங்களை மட்டும் தண்டிச்சிருக்கிறது நியாயமா'ன்னு கேட்டிருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.

அனைவரும் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

    \\அவருக்கு, கணினி பத்தி எந்த தொழில்நுட்பமும் தெரியாதாம்........\\ அதனாலென்ன, போயிட்டு போறது ....... கணினியைப் பற்றித் தெரிஞ்சிருந்தா, போர்னோ தளங்களை பார்த்திட்டு இருந்திருப்பாரு ......... இப்போ அவராலே வெறும் வீடியோகேம் மட்டும்தானே விளையாடமுடியும் ?? .........

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

    இந்த ஊழியர்கள் தங்களோட சேர்த்து மேல் அதிகாரிகளையும் தண்டிக்கணும்னு சொல்றாங்களா, இல்லே தங்களையும் தண்டிக்கக்கூடாதுனு சொல்றாங்களா அப்படீன்னு எனக்கு ஒரு டவுட் வந்திருக்கு .......

  • A R J U N - PHOENIX ....ARIZONA..,யூ.எஸ்.ஏ

    ........வரிசையில நிற்காம, சீக்கிரமா தரிசனம் ............இது என்னமோ இன்னிக்கி நேத்திக்கி நடக்கற விஷயமா சொல்றீங்க..காலாகாலமாக நடக்கறது தான். ரூ 2000 கொடுத்தீங்கனா கடைகளில் பூ, புஷ்பம் என்று ஒரு லிஸ்ட் போட்டதையே பல தினுசுகளில் போட்டு பால் என்கிற பெயரில் ஒரு தண்ணி பால் கலரில்... பாவம் அந்த "முருகர்"..அதிகாரிகளின் அட்டூழியம் சொல்லி மாளாது..அத்தனையும் ஊழல் CORRUPTION

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement