Advertisement

ஆள்வோரின் பொறுப்பு இது!

Share

ஆர்.ஆத்மா, கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தினமலர்' நாளிதழின் ஒருங்கிணைப்பால், பல இடங்களில் நலச்சங்கங்களும், சமூக ஆர்வலர்களும் இணைந்து, நமக்கு நாமே திட்டத்தின் மூலம், நீர்நிலைகளை செப்பனிட்டு வருகின்றனர். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக உரிய உத்தரவுகளை வழங்கினாலும், பொதுப்பணித் துறை பொறியாளர்கள், சில இடங்களில் மராமத்து பணிகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளனர்.

இவற்றை தாண்டி, 'தினமலர்' நாளிதழின் தொடர் முயற்சியால், சென்னை மற்றும் பிற மாவட்ட நீர் நிலைகளுக்கு விடிவு காலம் பிறந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட, கலெக்டர் வேண்டுகோளை ஏற்று, டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், களத்தில் இறங்கியதற்காக, அந்நிறுவனத்தை பாராட்டுவோம். ஓசூர் பகுதியிலுள்ள, கால்வாய்கள் எல்லாம் துார்ந்து போனதோடு, ஆக்கிரமிப்புக்கும் ஆட்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. 20 ஆண்டுகளாக, அவை பராமரிக்கப்படவில்லை என்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. அங்குள்ள ஏரிகளை புனரமைப்பதுடன், வரத்து -கால்வாய்களையும் சீரமைக்க, டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம் முயற்சியை மேற்கொண்டுள்ளது, பாராட்டுக்குரியது.

வறட்சிக்கும், தண்ணீர் பஞ்சத்திற்கும், குறைவாக பெய்த பருவமழையே காரணம். பொதுப் பணித்துறையின் அலட்சியப் போக்கும், இதற்கு அடிப்படை காரணம். அணைகள், ஏரிகளை முறையாக துார் வாரி, கரைகளை செப்பனிடாததும், வரத்து, போக்கு கால்வாய்களை சரியாக பராமரிக்காமல் விட்டதுமே, நீர் பஞ்சத்திற்கு வழி வகுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன், போர்க்கால அடிப்படையில், துார் வாரும் பணிகளை செய்து முடிக்க வேண்டும்.

மக்கள் நலனில் அக்கறையுள்ள, நல்ல பொறியாளர்களை, இப்பணியில், கலெக்டர்கள் ஈடுபடுத்துவதுடன், இடைஞ்சலாக இருப்போரையும், பாரபட்சம் இன்றி, பணியிட மாற்றத்துக்கு உட்படுத்தி, பொதுப்பணி துறையை புனரமைக்க வேண்டும்! சுய நலமிக்க ஒரு சில அதிகாரிகளால், மராமத்து பணிகள் தடைபடாமல் பார்த்து கொள்ள வேண்டியது, இங்கு ஆள்வோரின் பொறுப்பு!

***

என்ன பாவம் செய்தது போக்குவரத்து துறை?வ.வேதாந்த தேசிகன், வாலாஜாபாத், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, மூன்று ஆண்டுகளாக, டி.ஏ., உயர்த்தப்படாததால், ஓய்வூதியத்தில் உயர்வு இல்லை. பல பேருக்கு, குற்றம், தண்டனைகளை காரணம் காட்டி, அலைய வைத்து, பென்ஷன் வழங்காமல் இழுத்தடித்து பிரச்னை செய்கிறது, போக்குவரத்து நிர்வாகங்கள். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, ௨௦௧௮, ஏப்., முதல், கிராஜுவிடி உள்ளிட்ட எதுவுமே வழங்கப்படவில்லை. ஓய்வு பெறும் தேதியில், தொழிலாளியின் இருப்பில் உள்ள, பி.எப்., பணம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அதுவும், கடந்த ஆறு மாதமாக வழங்கப்படாமல், வெறும் கையோடு அனுப்புகிறது, நிர்வாகம்.

'செட்டில்மென்ட்' தொகை கிடைக்காததால், மருத்துவச் செலவு, குடும்பச் செலவு, பிள்ளைகளின் திருமணச் செலவு, கல்விச் செலவு என, எதையும் செய்ய பணம் இல்லாமல், ஓய்வு பெற்றோர் தவிக்கின்றனர். பணியில் உள்ள தொழிலாளர்களுக்கான, டி.ஏ., அரியர், இ.எல்., சரண்டர், ஒன்றரை ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இன்னும் கொடுக்க வேண்டிய பலவற்றை, நிறுத்தி வைத்து உள்ளனர். ஆள் பற்றாக்குறை, கடும் தண்டனை, சலுகை பறிப்பு, தொடர் பணி, மன உளைச்சல், விடுப்பு எடுக்க தடை, தொழிலாளியிடமே லஞ்சம் போன்ற காரணங்களால், விருப்ப ஓய்வு, ராஜினாமா என, தொழிலாளர்கள் வெளியேறுகின்றனர்.

தொழிலாளர்களிடமே லஞ்சம் பெற்று, அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து முறைகேடு செய்யும் கட்சி சங்கங்கள், கொள்கை ரீதியாக மோதலை தொடர்வது, வாடிக்கையாக உள்ளது. கடந்த ஆண்டுகளில் நடந்த, போக்குவரத்து மானியக் கோரிக்கை விவாதத்தில், புதிய பேருந்து அறிவிப்பு, பேட்டரி பஸ் என, சொல்லி முடித்து விட்டனர். தொழிலாளர் நிலை பற்றி வாய் திறக்கவில்லை. இந்த மாதத்தில், சட்டசபையில் நடக்கும் மானியக் கோரிக்கை மீதான விவாதித்திலாவது, பழைய நிலை நீடிக்காமல், தொழிலாளர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வை வழங்க வேண்டும். எல்லா அரசு துறைகளிலும், ஓய்வு பெறும் நாளன்றே, ஊழியர்களுக்கு அனைத்து பலன்களும் வழங்கப்படுகின்றன. போக்குவரத்துத் துறையிலும், இந்த நடைமுறை அமலுக்கு வர வேண்டும்!

***

மதுரை மக்களை ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளுமா?ஜெ.மனோகரன், விளாங்குடி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பல ஆண்டுகளாக, சென்னை- - குருவாயூர் இடையே, இரு மார்க்கங்களிலும், பயணியர் ரயில் இயக்கப்படுகிறது. அந்த ரயிலில், பொதுப் பெட்டி, டிக்கெட் முன்பதிவு பெட்டிகள் நிரம்பி வழிகின்றன. இதனால், பொதுப் பெட்டியில் பயணிக்கும் பயணியர், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கூடுதல் பெட்டிகள் இணைப்பு அல்லது இருமார்க்கங்களிலும் இன்னொரு புதிய ரயில் என, சேவையை விரிவுப்படுத்த வேண்டும்.

திருச்சியில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தினசரி ரயில் சேவையை, காலை, 6:10 மணிக்கு, மதுரையிலிருந்து புறப்படும்படி நீட்டிப்பு செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக, மதுரை - வேளாங்கண்ணி இடையே, தினசரி ரயில் சேவை கேட்டு கோரிக்கை வைத்தும், தெற்கு ரயில்வே இயக்கவில்லை; அந்த நம்பிக்கையும் இதுவரை பலிக்கவில்லை.

மதுரை- - பெங்களூரு இடையே, தினசரி ரயில் சேவை கேட்டு, அதுவும் நிலுவையில் உள்ளது. வடமாநிலத்தவர், விதவிதமான பெயர்களில், ராஜதானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்க முடிகிறது. இந்த முறைகேடுகளை களைய, எந்த ஒரு நடவடிக்கையையும், ரயில்வே நிர்வாகம் எடுப்பதில்லை. மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம், அதிக வருவாய் ஈட்டுகிறது. ஆனால், பயணியரைப் பற்றி கவலைப்படுவதில்லை.

மதுரை கூடல் நகர் ரயில்வே ஸ்டேஷனை, மதுரையின் இரண்டாவது ரயில்வே, 'டெர்மினல்' ஆக்க வேண்டும். இந்த கோரிக்கையை, பல ஆண்டுகளாக பயணியர் விடுத்தும், ரயில்வே நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. மதுரை நகர மக்களை கண்டுகொள்ளுமா?

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Krish - Chennai ,இந்தியா

    தினமலரில், இந்த செய்தியை முதலில் எதிர் பார்த்தேன். பாண்டிச்சேரியில்,. அப்பாவின் ஒன்றரை கோடி ரூபாய் வீட்டை விட்டு துரத்திய மகனின் பத்திரம் கான்செல் செய்யப்பட்டது. நல்ல செய்தி..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement