Advertisement

கணவன் அமைவதெல்லாம் மனைவி கொடுத்த வரம்!

தாமரைப் பூ போன்ற இல்லற வாழ்க்கையில் தண்ணீராக மனைவியும், இலையாக கணவனும் இருப்பதுண்டு. வெளியே இருந்து பார்க்க தாமரை இலையில் தண்ணீர் எப்படி ஒட்டுவதில்லையோ, அதுபோல் ஒட்டியும் ஒட்டாமலும் குடும்பத்தை நடத்திச் செல்லும் பெருமை கணவன், மனைவிக்கு உண்டு.மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம் என்றால், கணவன் அமைவது மனைவி கொடுத்த வரமாகும். ஒவ்வொரு மனைவிக்கும் தன் கணவனே ஒரு வரம்தான். கணவன் சரியில்லை என்று வெளியே மனைவிகள் சொன்னாலும் கூட, ஏழு ஜென்மங்களுக்கு தனக்கு இதே கணவர்தான் வரவேண்டும் என்ற ஆசை உள்மனதில் இருக்கும்.கணவன் மேல் உள்ள பிரியத்தை, பெரும்பாலான பெண்கள் வெளிக்காட்டுவது இல்லை. அவர்கள் கணவருக்கு தன்மேல் பாசம் இல்லையோ என தவறாக எடுத்துக் கொண்டு சிறு பிரச்னைகளை கூட பூதாகரமாக்கி விடுவதுண்டு. இதுபோன்ற பிரச்னைகள் குடும்பத்தில் ஏற்படுவதை தவிர்க்க கணவன்மார்கள் 'நடிகர் திலகமாகவே' மாறி தங்கள் பாசத்தை, அன்பை, காதலை மனைவியிடம் அடிக்கடி காட்டுவதுண்டு.

வீட்டில் பிரச்னைஒரு கணவனுக்கு வீட்டில் ஏகப்பட்ட பிரச்னை. மனைவி சண்டை போடுவார். அவனுக்கு நிம்மதி குறைந்தது. சரி, எப்படியாவது இதிலிருந்து விடுபடலாம் என்ற எண்ணத்தில், அந்த ஊருக்கு வந்திருந்த சாமியாரை பார்த்து, 'வீட்டில் நிம்மதியே இல்லை. என்னை சுற்றி பிரச்னையாக உள்ளது. இதிலிருந்து எப்படி விடுபடுவது…' என்று கேட்க அவர், ''வீட்டுக்குள் நுழைந்ததும் பிரச்னை எதுவென்று கருதுகிறாயோ, கற்பனையாக அதை ஒன்று சேர்த்து கைகளில் பிடித்து துாக்கி, கண்களை மூடி, ஆனந்தமாக வீட்டை மூன்று முறை சுற்றி வா. உனக்கு பிடித்த பாடலை சந்தோஷமாக பாடு” என்றார்.வீட்டுக்கு சென்ற அவன் நுழைந்ததும் தென்பட்ட மனைவியை இரண்டு கைகளாலும் துாக்கி, வீட்டை மூன்று முறை சுற்றி, ஒரு காதல் பாட்டை பாடினான். அவன் மனைவிக்கு வெட்கம் தாளவில்லை. “கணவனுக்கு தன் மீது இவ்வளவு அன்பா” என மகிழ்ந்து பழைய கோபத்தையெல்லாம் மறந்து கணவனிடம் பிரியமாக இருக்க ஆரம்பித்துவிட்டாள்.பெரும்பாலும் கணவர்கள் பொறுமைசாலியாகவே இருக்கின்றனர். வெளிஇடங்களில் தனியாக பொறுமையாக நிற்க முடியாதவர்கள் கூட தனது மனைவிக்காக அவர்கள் புடவை வாங்கும் வரை முகம் கோணாமல், காத்திருப்பதற்கே பிறந்தவர் போல சிரித்துக் கொண்டே நிற்பதுண்டு.

குடும்பம் என்னும் சக்கரம்குடும்பம் என்னும் சக்கரத்தை நகர்த்தி செல்வதில் கணவன் எந்த பாரபட்சமும் பார்க்காதவர். அனைத்து குடும்ப உறுப்பினரையும் சமமாக எண்ணுவதுண்டு. கணவரின் தங்கை, வீட்டிற்கு வந்தால் முகத்தை மனைவி அந்தப்பக்கம் திருப்பிக் கொள்ளும் போது, கணவரோ நேர்மாறாக மனைவியின் தங்கை வீட்டிற்கு வரும் போது முகத்தை ஒரு நாளும் திருப்பிக் கொண்டதில்லை. முகத்தில் புன்னகை பூக்க கொழுந்தியாளை வரவேற்பதுண்டு. மனைவியை விட அவரது அக்கா, தங்கை மேல் கூடுதல் பிரியம் வைத்திருப்பதை கூட சில மனைவியர் புரிந்துக் கொள்ளாமல் சந்தேகப்படுவதுண்டு.மனைவி என்ன சமைத்துப் போட்டாலும் குறை சொல்லாமல் சாப்பிடுவோர் கணவன்மார்கள். ஊரே பிரியாணி சாப்பிடும் போது கோபத்தில் மனைவி ரவா உப்புமா செய்தாலும் ரசித்த முகத்துடன் சாப்பிடுவது கணவர் குணம். மனைவிக்கு கிச்சனில் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எல்லா கணவருக்கும் உண்டு. காய்கறி வாங்கித் தரலாமே என கிச்சனுக்கு சென்றால் ஏதாவது திட்டி அனுப்புவது மனைவி வழக்கம்.

சமையலறையில்இப்படித்தான் சமையலறையில் மனைவிக்கு உதவ எண்ணிய ஒருவர் மனைவியிடம் “என்னடி, இது சப்போட்டா... பழுக்கவே மாட்டேங்குது. நானும் ஒரு வாரமா பார்த்துக்கிட்டிருக்கேன்” என்று சொல்ல, கோபமாகி முகம் சிவந்த மனைவி “உங்களை யாரு உள்ளே வரச் சொன்னா. இது சப்போட்டா இல்லை, உருளைக்கிழங்கு. பூரி போடறத்துக்காக வச்சு இருக்கேன்,” என திட்ட ஆரம்பித்துவிட்டாள்.சமையலில் உதவ கிச்சனுக்கு வரும் கணவரை அவமானப்படுத்தி அனுப்பாமல் சமையல் சொல்லித்தர வேண்டியது மனைவியர் கடமை. எந்தவித உரிமையும் சமையல் அறையில் கொடுக்காமல், கற்றுக் கொடுக்காமல் கணவர் தனக்கு உதவுவது இல்லை என்று குறைபாடுவதே மனைவியர் வழக்கம். இருந்தாலும் மனம் தளராமல் உதவப் போய் அடிக்கடி கணவர் வாங்கிக்கட்டிக் கொள்வதுண்டு.

கரடிக்கதைகணவர் தன்னிடம் பிரியமாக இல்லை என புலம்பிய மனைவி, ஒரு சாமியாரைப் பார்க்க சென்றாள். கணவர் பிரியமாக இருக்க ஏதாவது தாயத்து செய்து தாருங்கள் எனக் கேட்க அந்த சாமியாரும், “ஒரு தாயத்து செய்து தருகிறேன், அதற்கு ஒரு கரடி நகம் வேண்டும். நீ கொண்டு வந்தால் மந்தரித்து தாயத்து தருகிறேன். அதனை அவனுக்கு கட்டிவிட்டால் உன்னையே சுற்றி சுற்றி வருவான்” என்றார்.சரி என்று கிளம்பிய அவள் காட்டுக்கு சென்று, ஒரு கரடியை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக அதனுடன் அன்பாக பழகி, சாப்பிட உணவு எல்லாம் அடிக்கடி கொடுத்து நட்பாக்கிக் கொண்டாள். ஒரு கட்டத்தில் இவள் சொல்வதையெல்லாம் கேட்குமளவு கரடி மாறிவிட்டது. அப்படியே நகத்தை வெட்டி எடுக்க சம்மதித்தது.நகத்தை எடுத்துக்கொண்டு சாமியாரிடம் கொடுத்தாள். அப்பொழுது அந்த சாமியார், 'ஒரு மாதமாக நீ அந்த முரட்டு கரடியிடம் காட்டிய அன்பை, அட்லீஸ்ட் ஒரு நாள் உன் அப்பாவி கணவரிடம் காட்டினால் போதும். இந்த தாயத்து இல்லாமலே அவன் உன்னை சுற்றி வருவான். இதை நீ புரிந்து கொள்ளத்தான் தாயத்து செய்ய நகம் வேண்டும் என கரடியிடம் அனுப்பினேன்' என்றார். அவள் புரிந்து கொண்டு நன்றி சொன்னாள்.திருமணத்துக்கு பின்பு கணவர்கள் மிகவும் பக்குவமாகிவிடுகின்றனர். குழந்தை பருவத்தில் அப்பா, பள்ளிக் கூடத்தில் ஆசிரியர், கல்லுாரியில் பிரின்சிபால், ஆபீசில் மேனேஜர். இவர்களையெல்லாம் பயங்கரமானவர்களாக நினைத்து பயந்தது தப்பு. இவர்களை விட கண்டிப்பானவர்கள் உண்டு என ஆண்களுக்கு தங்கள் திருமணத்துக்கு பின்புதான் தெரிய வருகிறது. அதையும் சமாளித்து வாழ்க்கை சக்கரத்தை ஓட்டி விடுகிறார்கள்.

குரங்கு கதைதான் நன்றாக நடந்துக் கொண்டாலும் தன் மனைவி திட்டிக் கொண்டே இருக்கிறாளே என்று ரொம்ப நாளாக எனது நண்பருக்கு கவலை. சந்தேகத்தை நிவர்த்தி செய்ய ஒரு ஞானியை பார்க்க சென்றான். அவரை பார்த்து ஆதங்கத்தைச் சொன்னார். அதைக் கேட்டவாறே ஞானியும் தன் கையில் இருந்த கம்பை எடுத்து அருகில் அமைதியாக உட்கார்ந்திருந்த குரங்கை ஒரு அடி அடித்தார். இவ்வாறு அடிக்கடி கம்பை எடுத்து தன் அருகில் சும்மா உட்கார்ந்திருந்த குரங்கை திரும்ப திரும்ப அடித்தார்.
இதை பார்த்து பாவப்பட்ட அவன் “இந்த குரங்கு அதுபாட்டுக்கு அமைதியாகத் தானே இருக்கிறது. நீங்கள் ஏன் அதை அடித்துக் கொண்டே இருக்கிறீர்கள்” என்று கேட்டுவிட்டான். அதற்கு அந்த ஞானி “அப்படியா, கொஞ்சம் இரு” என கம்பை ஓரமாக வைத்து விட்டு கையை கட்டிக் கொண்டு அமர்ந்தார். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த குரங்கு மெதுவாக நகர்ந்து, குருவின் மடியில் காலை வைத்து ஏறி இறங்கியது.முன்னாடி தட்டில் வைத்திருந்த வாழைப்பழத்தை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு பூவை அங்கும் இங்கும் பிய்த்து போட்டது. தட்டை தலைகீழாக கவிழ்த்தியது. ஓரமாக வைத்த கம்பை மறுபடியும் ஞானி எடுத்து அந்த குரங்கை பழையபடி ஒரு போடுபோட்டார். அது அமைதியாக பழைய இடத்தில் உட்கார்ந்து கொண்டது.

வாழ்க்கை தத்துவம்இப்போது சொன்னார், “உன் கேள்விக்கு பதில் தெரிந்துவிட்டதா? ஒவ்வொரு மனைவிக்கும் தனது கணவன் ஒரு குரங்கு மாதிரி. அவள் திட்டாமலிருந்தால் கணவன்மார்கள் தலைக்கு மேல் ஏறிவிடுவார்கள், தப்பு செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதனால்தான் எல்லா மனைவிகளும் சும்மாவாயினும் கணவன்மார்களை திட்டிக்கொண்டே இருக்கிறார்கள், என்றார். அவனுக்கு வாழ்க்கைத் தத்துவம் புரிய ஆரம்பித்தது.ஆம். கணவன் மனைவி உறவு அற்புதமானது. ஒருவருக்கு ஒருவர் அடிக்கடி பேசிக்கொண்டே இருங்கள். சண்டை இருந்தால்தான் சமாதானமும் புரிதலும் வரும். நமது பிள்ளைகளும் பெற்றோர்களும் கூட நம்மை விட்டு ஒரு காலத்தில் பிரிந்து போவார்கள். ஆனால் கணவன், மனைவி உறவு எப்போதும் மகிழ்ச்சியாக, பிரியாமல் ரயில் தண்டவாளம் போல் இணைந்தே இருக்கும். சின்னச் சின்ன ஊடல்களும் கூடல்களும் உங்கள் இல்லற வாழ்க்கையை இன்னும் இன்பமாக்கும்.

- டாக்டர். ஜெ.ஜெயவெங்கடேஷ்
மருத்துவ எழுத்தாளர், மதுரை
98421 67567

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

    ரிஷிகேஷில் இருந்து இருபது கிலோமீட்டர் தூரத்தில் ஹரித்வார் ....ஹரிதுவாரில் கங்கை கரையில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் தான் நான் வசிக்கிறேன். அப்படி எதுவும் வெள்ளம் இதுவரை இல்லையே..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement