Advertisement

கூட்டுக் குடும்பங்கள் சாத்தியமா

ந்திய சமூகசேவகி, மென்பொருள் தயாரிக்கும் பெரியநிறுவனத்தின் தலைவர், எழுத்தாளர், ஒருவருடைய கட்டுரையை அண்மையில் படிக்க நேர்ந்தது. அதில் தன்னுடைய மகனும், மகளும் திருமணத்திற்கு முன்பு தனக்கு கொடுத்த முக்கியத்துவமும், திருமணத்திற்கு பிறகு மாறியதையும் குறிப்பிட்டு இருந்தார்.

தன் சமையலின் ருசிக்காக ஏங்கிய மகன் உள்ளூரிலிருந்து கொண்டே, சமைத்து வைத்து ஆசையாக அழைத்தாலும், ஏதாவது காரணம் சொல்லி வராமல் இருந்ததும், மனதளவில் பெரிதாக பாதித்ததாக எழுதியிருந்தார். அதிலிருந்து மீள்வதற்காக தியான வகுப்புகள், கோவில்களுக்கு சென்று வந்ததாகவும், மாமியாருக்கு எதை தான் கொடுத்தேனோ அதுவே தன்னுடைய குழந்தைகள் மூலம் தனக்கு கிடைத்ததாக எழுதியிருந்தார்.

விதவை தாய்:
மகனுக்கு ஒரு வயது ஆகும் போது கணவனை இழந்த பெண், ஒரே மகனை கஷ்டப்பட்டு படிக்க வைத்து, வேலைக்கும் அனுப்பி வைத்தார். மகன் அயல்நாட்டில் வாழும் தமிழ் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய ஆசைப்பட்டான். சரியென்று உடனே அவர்களுக்கு திருமணம் நிச்சயம் செய்தார். ஆனால் என்று நிச்சயம் செய்தாரோ அன்றிலிருந்து அவருடைய நெருங்கிய உறவினர்கள் 'நீ பாவம். உன்னை விட்டு மகன் வெளிநாடு போகப் போகிறான். நீ தனியாக இங்கு என்ன செய்ய போகிறாய்' என்று சொல்லிசொல்லி அந்த தாய்க்கு மன அழுத்தத்தை அதிகரித்து விட்டனர்.

திருமணத்தன்று மணக்கோலத்தில் இருந்த மகனை பார்த்தவுடன் தாய்க்கு மன அழுத்தம் அதிகமாகி, தாலி கட்டப் போகும் நேரத்தில் மகனுடைய பட்டு சட்டை, வேட்டியை கிழித்து, மாலையை பிய்த்து எறிந்து 'என்னை மட்டும் தனியா விட்டுவிட்டு நீ மட்டும் வெளிநாடு போகப் போறியா' என்று கத்திக் கொண்டே பைத்தியமாகிவிட்டார். ஆனால் திருமணமாகி பதினைந்து வருடம் ஆகிவிட்ட நிலையிலும் அந்த மகன் இன்னும் தாயை தன்னுடன் வைத்து நன்றாக பராமரித்து வருகிறார்.

விவசாய தம்பதிகள்:
பக்கத்து வீட்டு பெண்ணுக்கு தேனி அருகில் கிராமத்தில் வளைகாப்பு. நானும் அந்த விசேஷத்திற்காக சென்றிருந்தேன். பெரிய மண்டபத்தில் விசேஷம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒரு கார் மண்டபத்தின் வாசலில் வந்து நின்றது. அவ்வளவு தான் அந்த விசேஷ வீடே பரபரப்பானது 'அய்யா வந்துட்டாரு', 'அம்மா வந்துட்டாங்கன்னும்' ஒரு கூட்டம் உற்சாகமாக ஓடிப் போய் கார் கதவை திறந்து விட்டார்கள்.

காரிலிருந்து சிவன், பார்வதி போல 86 வயது ஒரு தாத்தாவும், 80 வயது ஒரு பாட்டியும் இறங்கி வந்தார்கள். குடும்பம், குடும்பமாக அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார்கள். 'அய்யாவை பார்த்து கூட்டிட்டு போ, அம்மாவை நீ கவனிச்சுக்கோ என்றும் நீ அய்யாவையும், அம்மாவையும் சாப்பிட கூட்டிட்டு போ... அய்யாவுக்கு அது பிடிக்கும், அம்மாவுக்கு இதை போடு' என்று தடபுடலான கவனிப்புகள். ஒரு மணி நேரத்தில் அய்யாவும், அம்மாவும் மண்டபத்தை விட்டு கிளம்பிவிட்டார்கள். அனைவரும் அவரை கார் வரை சென்று வழியனுப்பி விட்டு வந்த பிறகே, பிற வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்கள்.

அவ்வளவு ஆச்சரியமாக அவர்களை பார்த்துக் கொண்டே அருகில் இருந்தவரிடம், யார் இவர்கள், ஏன் இவ்வளவு கவனிப்பு என்று கேட்டேன். அதற்கு அவர் இந்த அய்யா, அம்மாவிற்கு பத்து ஆண்குழந்தைகள். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவ்வளவு நேரம் அவர்களை கவனித்தவர்கள் அனைவரும் அவர்களுடைய மகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள்தான் என்றார்.தனிக்குடித்தனம்அய்யா தன்னுடைய ஒவ்வொரு பையன்களுக்கும், பெண்ணை பேசி முடிக்கும் போது, பெண் வீட்டாரிடம், 'வரதட்சணை எதுவும் வேண்டாம் அதற்கு பதிலாக தனி வீடு பார்த்து, தனி குடித்தனத்திற்கு தேவையான அனைத்து பொருள்களையும் வாங்கிக் கொடுத்துவிடுங்கள். திருமணத்தன்று இரவே அவர்களை நேராக அந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுங்கள். அந்த வீட்டிலிருந்தே அவர்கள் தங்களுடைய புது வாழ்க்கையை தொடங்கட்டும்' என்று சொல்லிவிடுவார்.

மருமகள் முதலிரவுக்கு செல்வதற்கு முன்பு ஒரு சத்தியம் வாங்கிக்கொள்வார்களாம். அதாவது தீபாவளி, பொங்கல், ஊர் கோயில் திருவிழா, மகா சிவராத்திரியன்று குலதெய்வ வழிபாடு இவை அனைத்திற்கும் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் குடும்பத்துடன் வந்துவிட வேண்டும். மாதந்தோறும் முதல் வாரத்தில் ஆயிரம் ரூபாய் பொது கணக்கு ஒன்றிற்கு அனுப்பிவிட வேண்டும். மாதம் மாதம் இப்படி அனுப்புவதால் அன்று அய்யா, அம்மாவின் நினைவு அவர்களுக்கு வரவேண்டும் என்பதற்காகவாம். அதனால் இன்று வரை 10 மருமகள்களுக்கும் மாமியார்க்கும் இடையே சண்டையே வந்தது இல்லை. மேலும் மருமகள்களுக்கு இடையேயும் எந்த வித கருத்து மோதல்கள் வந்தது கிடையாதாம். ஒவ்வொரு மகன்களும் சந்தோஷமாக முழு மனநிறைவுடன் தங்கள் மனைவி குழந்தைகளுடன் தனிக் குடித்தனம் நடத்துகிறார்கள்.

சாத்தியமா?
இனி வரும் காலங்களில் கூட்டுக் குடும்பங்கள் சாத்தியமா?அந்த காலத்தில் தலைமுறை, தலைமுறையாக ஒரே ஊரில் வாழ்ந்தார்கள். குடும்பத் தொழிலை குலத் தொழிலாக செய்தார்கள். ஒரே தொழிலை அனைவரும் பகிர்ந்து செய்வதால் வருமானத்தில், நான் அதிகம் சம்பாதிக்கிறேன், நீ குறைவாக சம்பாதிக்கிறாய் என்ற வித்தியாசம் இருக்காது. வீட்டில் ஒருவரே தலைவர். அவர் தாத்தா அல்லது அப்பா, பெரியப்பா, அண்ணன் யாராவது ஒருவரே. அவர் கூறும் கருத்துக்கள் அல்லது கட்டளைகள் எதுவாக இருந்தாலும் அதை மற்ற அனைத்து உறுப்பினர்களும் மதித்து நடந்தார்கள். கூட்டுக் குடும்பம் வெற்றி பெற்றது.

ஆனால் இன்றைய சூழ்நிலையில் சொந்த மண்ணை விட்டு வெளிநாட்டிற்கோ, வெளி மாநிலத்திற்கோ வேலைக்காக செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். ஒருவர் பேச்சைக் கேட்டு, மதித்து அவர் கீழ் அடங்கி குடும்பம் நடத்த யாருக்கும் விருப்பம் இல்லை. அதனால் இன்றைய காலக் கட்டங்களில் கூட்டுக் குடும்பங்கள் சாத்தியமா என்பது கேள்விக்குறி.

ஏமாற்றம் இல்லை:
நாம் மற்றவர்களுக்கு எளிதாக அறிவுரை கூறுகிறோம். ஆனால் ஒரு பிரச்னை நமக்கு வரும் போது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலே கூறிய மூன்று விதமான குடும்பங்களில் நிகழ்ந்த அனைத்தும் மனம் சார்ந்ததே. நான் மற்றவர்கள் போல் என் பிள்ளைகளை வளர்க்கவில்லையே. அவர்களை வளர்க்க என்னுடைய இளமை, வாழ்க்கையே தியாகம் செய்திருக்கிறேன் என்று பட்டியலிடுவோம். அதனால் திருமண வயதில் மகன், மகள்களை வைத்திருப்பவர்கள் எப்போதுமே தங்கள் மனதை 'தாமரை இலை மேல் நீர் போல' வைத்திருக்க வேண்டும். இங்கு தாமரை இலை என்பது பெற்றோர்களாகிய நாம்தான்.

நீர் என்பது திருமணத்திற்குப் பிறகான மகன் அல்லது மகளின் உறவு. இலை மீது நீர் இருந்தால் சந்தோஷமாக தாங்கிக் கொள்வோம். தனியாக உருண்டு ஓடினால் வாழ்த்தி வழியனுப்பி வைப்போம். இந்த மனநிலையோடு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் குழந்தைகளை வளர்த்து திருமணம் செய்து வைத்தால் நமக்கும் ஏமாற்றம் ஏற்படாது. அவர்களும் ஒரு சிறு நெருடல் கூட இல்லாமல் சந்தோஷமாக வாழ்வார்கள்.

-அமுதா நடராஜன், எழுத்தாளர், மதுரை
r_amudha@yahoo.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement