Advertisement

'டோக்கன்' போட்டு காத்து நிற்கும் உதயநிதி!

Share

அலமேலு ராஜகோபாலன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: சென்னை, திருவல்லிக்கேணி, 'மெஸ்' ஒன்றில், மதிய சாப்பாடு நேரத்தில், நிறைய கூட்டம் இருக்கும். உட்காரவே இடம் இருக்காது. ஒருவர் ரசம் சாதம் சாப்பிடும் போதே, மற்றொருவர், ஒரு, 'டோக்கனை' இலையின் முன் வைத்து, அடுத்த பந்திக்கு இடம் பிடிப்பார்.

சாப்பிடுபவர் மோர் சாதம் சாப்பிடும் முன், வேறு ஒருவர் மற்றொரு டோக்கனை வைத்து, பந்தி முடியும் வரை காத்திருப்பார். ஓர் இலைக்கு, ஓர் இடத்துக்கு மூன்று பேர் இருப்பர். அதுமாதிரி, கருணாநிதி இருக்கும் வரை, ஸ்டாலின் காத்திருந்தார். ஸ்டாலின் இருக்கும்போதே, அவரது மகன் உதயநிதி, முதல்வர் பதவிக்கு டோக்கன் வைத்து காத்திருக்கிறார். இன்னும், ௩௦ ஆண்டுகளுக்கு, தி.மு.க.,வில் தலைமை பதவிக்கு பஞ்சம் இருக்காது; வெற்றிடமும் கிடையாது.

கருணாநிதி, முரசொலி மாறனுக்கு பின், ஸ்டாலின், தயாநிதி, கனிமொழி... இப்போது உதயநிதி வந்து விட்டார். ஒரு முறை, கருணாநிதி, 'தி.மு.க., ஒன்றும் சங்கர மடம் அல்ல. பொதுக்குழு, செயற்குழு மட்டும் தான், முறைப்படி, தலைமையை தேர்ந்து எடுக்கிறது' என்றார். அவருக்கு விஷயம் தெரியாது போலும்.

ஒரு ஜீயரோ, மடாதிபதியோ, பதவிக்கு வருவது சாதாரண விஷயம் அல்ல. எல்லா பிராமணர்களும், அந்தப் பதவிக்கு வர முடியாது. வேதம், மந்திரம், உபநிடதங்கள், சமஸ்கிருத சுலோகம் என்று எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும். இது ஒன்றும் அரசியல் கட்சி செய்யும் வேலை அல்ல. எந்தவித கல்வி தகுதியும், அனுபவமும் இல்லாதோர் எல்லாம், வாரிசு எனக்கூறி, பதவிக்கு வரலாம்; இது தான், திராவிட கட்சிகளின் ஜனநாயக லட்சணம்.

பா.ஜ.,விலோ, ஆர்.எஸ்.எஸ்.,சிலோ கம்யூனிஸ்ட் கட்சியிலோ, இப்படி டோக்கன் போட முடியாது; சீனியாரிட்டி முறையில் தான் வர முடியும்!

***

சுதந்திரத்தின் விலை அறியாத சுயநலவாதிகள்!எம்.கலைவாணி, அருப்புக் கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுது கிறார்: ஹிந்து கடவுள்களைப் பற்றி அவதுாறு பரப்பியதற்காக, இளைஞர் ஒருவர், கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்ற செய்தியை படித்தேன். அந்த இளைஞர் செய்த, அதே வேலையை, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, திராவிடர் கழக, கி.வீரமணி பகிரங்கமாக செய்து வருகிறார்.

'ஹிந்து கோவில்களை எல்லாம் இடித்துத் தள்ள வேண்டும்' என, திருமாவளவன் மேடை போட்டு பேசி வருகிறார். கி.வீரமணி, எஸ்றா.சற்குணம், மோகன் லாசரஸ் போன்றோர், ஹிந்து மதத்தை இழிவுபடுத்துவதை, தங்கள் முழு நேர தொழிலாக, செய்து வருகின்றனர். போலீசும், சட்டமும் இவர்களை நெருங்கவே முடியவில்லையே!

இந்த நாட்டில், சாமான்யனுக்கு ஒரு சட்டமும், அதிகாரம் படைத்தோருக்கு ஒரு சட்டமும், இயற்றப்படவில்லை. இவர்களில் யாரையாவது பிடித்து, சிறையில் தள்ளி இருந்தால், உடனே எதிர்க்கட்சிகள், 'ஜனநாயகத்தின் குரல் வளை நெரிக்கப்படுகிறது. மோடி ஆட்சியில் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுகின்றனர்' என்றெல்லாம், கூக்குரல் எழுப்பியிருப்பர்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு எண் 19, அனைவருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக, கருத்து சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது. ஆனால், தனிப்பட்ட நபர்களை அவமானப்படுத்துவது, பிற மதத்தை இழிவுபடுத்துவது, இந்திய நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிப்பது, வன்முறையைத் துாண்டும் விதத்தில் பேசுவது போன்ற செயல்களுக்கு, சுதந்திரம் வழங்கப்படவில்லை.

தி.மு.க.,வை சேர்ந்த, எஸ்றா.சற்குணம், '200 ஆண்டுகளுக்கு முன், ஹிந்து மதம் என்ற ஒரு மதமே இல்லை என, ஹிந்துக்களின் முகத்தில் குத்து விட்டு சொல்லுங்கள்' என்று, மூன்றாம் தர அரசியல்வாதியை விட, கேவலமாக பேசியிருக்கிறார். 'ஒவ்வொருவருக்கும் பேச்சு உரிமை இருக்கிறது. அதற்காக, வரம்பு மீறக் கூடாது' என, ராஜ ராஜ சோழனைப் பற்றி இழிவாகப் பேசிய, இயக்குனர் பா.ரஞ்சித்திடம், உயர் நீதிமன்றம், சுட்டிக் காட்டியிருக்கிறது.

மோகன் லாசரஸ், சற்குணம் போன்றோருக்கும் நீதிமன்றம் அறிவுரை வழங்கியிருக்கலாமே! இவர்கள் இப்படி எல்லாம், பொது இடங்களில் துணிச்சலோடு பேச காரணம், இங்குள்ள அரசியல்வாதிகளும், சினிமா பிரபலங்களும் தான். பல உயிர் தியாகங்கள் செய்து, அரும்பாடு பட்டு, நம் முன்னோர் வாங்கித் தந்த சுதந்திரம், இது போன்ற சுயநலக்காரர்களிடம் சிக்கி, சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறதே!

***

தமிழகம் என்றுமே உருப்படாது!கே. ரூபன் விநாயக், பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வெட்டிகள் வாயை திறக்க முடியாது' என்ற தலைப்பில், வாசகர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார். அவரது கருத்துகள், 50 வயதிற்கு உட்பட்ட பல லட்சம், தமிழக மக்களின் கருத்துகள் என்றால், அது மிகையாகாது. பா.ஜ.,வின் பெரும்பாலான கொள்கைகளை, ஆளும், அ.தி.மு.க., ஆதரித்தாலும், ஹிந்தியை, தமிழகத்தில் நுழைய விடாமல் மறுக்கிறது; அதற்கு காரணம் உண்டு.

'அரசு பள்ளிகளில், ஹிந்தியை கற்பிக்க ஆணை பிறப்பித்தால், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், ஒன்றுகூடி, மொழிப் பிரச்னையை துாண்டி விடும். 1963-ல், நடந்ததை போல, தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தி, ஆட்சியை கவிழ்த்து விடுவரோ?' என்ற அச்சம், அ.தி.மு.க., தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. நாட்டிலுள்ள, 34 மாநிலங்களில், தமிழகம் மட்டுமே, 1967 முதல், தமிழையும், ஆங்கிலத்தையும் பயிற்றுவிக்கிறது. இதில், தனித்து விடப்பட்ட, தன்னந்தனியாக செயல்படக்கூடிய, ஒரு மாநிலமாக, தமிழகம் மாறி விட்டது.

இதை பார்க்கையில், இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கும், தமிழகம் தனி தீவாக காட்சியளிப்பதாக எண்ணத் தோன்றுகிறது. தமிழகத்தில், அடுத்த சட்டசபை தேர்தலில், எந்த மாநில கட்சிகள், 'அரசு பள்ளிகளில் ஹிந்தியை பயில்விப்போம்' என, உறுதியாகவும், திடமாகவும், தேர்தல் பிரசார மேடைகளில் பேசுகிறதோ, அந்த கட்சிகளுக்கு தான், இளைஞர்களும், இளம்பெண்களும் ஓட்டளிப்பர்.

காங்கிரசை தவிர்த்து, இதர அனைத்து அரசியல் கட்சிகளும், 'ஹிந்தி வேண்டாம்' என, 1963-ல், அமல்படுத்தின. அதை, '2019லும், ஏற்று கொள்ளக் கூடாது' என்ற, சுயநலவாதிகளின் பேச்சை கேட்டால், தமிழகம் என்றுமே உருப்படாது!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • sankar - Nellai,இந்தியா

    மிக அருமையான பதிவு - அலமேலு ராஜகோபாலன் அவர்களே

  • Kalyanaraman -

    கலைவாணி மேடம், நீதித்துறையில் ஹிந்துமத விரோதிகள் பலபேர் ஊடுருவிவிட்டனர். ஒரு நாட்டை அழிக்க வேண்டுமானால் முதலில் அவர்கள் கலாச்சாரம் பண்பாடு இரண்டையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்பது அடிப்படை பாடம். அதை மிஷினரிகள் அருமையாக செய்கின்றன. வெளிநாட்டு நிதி உதவியுடன் இங்குள்ள ஸ்டாலின் வைகோ திருமாவளவன் வீரமணி சுபவீரபாண்டியன் தா.பாண்டியன் வைரமுத்து இன்னபிற போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வியாதிகளையும் எஸ்ரா சற்குணம் லாசரஸ் போன்ற அவர்கள் மதத்தை சேர்ந்த புரோக்கர்களையும் விலைக்கு வாங்கிவிட்டனர். இனியாவது இந்துக்கள் விழித்துக் கொள்ளுங்கள்.

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    மகனை குளத்தில் தூக்கி போட்டு நீச்சலடிக்க விட்டிருப்பாரா? ..சுடலை ..நீச்சலை நல்லா கற்று கொடுத்து தான் நீச்சலடிக்க செய்திருப்பார். ...திமுக அரசியலாந ..கொலை கொள்ளை அடாவடி( அதெல்லாம் திமுகவுக்கு ஸ்லோகங்கள் மாதிரி ) .எல்லாத்தையும் கற்று கொடுத்து தான் ஆனந்த கண்ணீரோடு பாசத்தோடு உச்சி முகர்ந்து மொவனை இறக்கியிருப்பார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement