Advertisement

'டவுட்' தனபாலு

அ.ம.மு.க., பொது செயலர், தினகரன்: வேலுார் லோக்சபா தொகுதி தேர்தலில், அ.ம.மு.க., போட்டியிடாது.

டவுட் தனபாலு: 'எப்போது வந்தாலும், எந்தத் தேர்தல் வந்தாலும், அ.ம.மு.க., தான் வெற்றி வெறும்; ஒரு கோடிக்கும் மேலான உறுப்பினர்கள், பல கோடி மக்களின் ஆதரவு, எங்களுக்குத் தான் இருக்கு'ன்னு, ஆர்.கே.நகரில் அடித்த லாட்டரியால், ஜம்பமா பேசி வந்தீங்க... அதைத் தொடர்ந்து நடந்த தேர்தல்களில், எல்லா இடத்திலும், லாட்டரி அடிக்காது என்பதை உணர்ந்துட்டீங்க... இனியாவது, 'பில்டப்'பை குறைப்பீங்களா என்பது தான், 'டவுட்'டாக இருக்கு...!

***

தி.மு.க., தலைவர், ஸ்டாலின்: சட்டசபையின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை சிறுமைப்படுத்திய, பா.ஜ., அரசுக்கு எதிராக, கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சட்டப்பூர்வமாக ஒப்புதல் பெற, தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

டவுட் தனபாலு: 'நீட்' தேர்வு விலக்கு குறித்து, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, மத்திய அரசு ஏற்காததால், இவ்வளவு கொதிக்குறீங்களா... இல்லை, இந்த விவகாரத்தை நீங்க, அரசியல் கண்ணோட்டத்தோடு அணுகி, ஆளும் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் மோதலை உருவாக்க வேண்டும் என்பதற்காக, கண்டன தீர்மானத்தை வலியுறுத்துறீங்களா என்ற, 'டவுட்' ஏற்படுதே...!

***

உள்ளாட்சி துறை அமைச்சர், வேலுமணி: வார்டு வாரியாக, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும், முறைப்படி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.

டவுட் தனபாலு: இதையே தான், வருஷக் கணக்கில் சொல்லி வர்றீங்க... ஆனா, உங்க கட்சி, எம்.எல்.ஏ.,வும், உங்க கூட்டணி கட்சி, எம்.எல்.ஏ.,வும், 'இப்போதைக்கு, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாது... மீறி நடத்தினால், தோல்வி தான் மிஞ்சும்... அதனால், 2021 சட்டசபை தேர்தலோடு உள்ளாட்சித் தேர்தலை நடத்தவே, இந்த அரசு விரும்பும்'னு, பேட்டி கொடுத்து வர்றாங்களே... இதுல, எதை எடுத்துக்கறது என்பது தான், என்னோட, 'டவுட்!'

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Arivu - Salem,இந்தியா

    வாக்காளர் பட்டியலே இல்லாமல் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டதா?

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இவர்கள் பட்டியல் சரிபார்ப்பும் கன வேகத்தைப்பார்த்தால் 2021 இல்லை, 2026 க்குக்கூட உள்ளாட்சித்தேர்தல் நடக்காமல் ‘கவனமாக’ இருக்கிறார்களோ என்று தோன்றுகிறதே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement