Advertisement

ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்த, தி.மு.க., 'மாஜி!'

Share

''இடமாறுதலை தடுக்க முயற்சி பண்ணியும், முடியாம, கடைசியில பெட்டியை கட்டிட்டு கிளம்பிட்டாரு பா...'' என, முதல் விஷயத்தை பேச ஆரம்பித்தார், அன்வர் பாய்.

''எந்த அதிகாரியைச் சொல்றீர் ஓய்...'' என, விசாரித்தார் குப்பண்ணா.

''பெரம்பலுார், டி.ஆர்.ஓ.,வா இருந்தவர், அழகிரிசாமி... இவரை, சமீபத்துல, தர்மபுரி சிப்காட் தொழிற்பேட்டைக்கான நிலம் எடுப்பு, சிறப்பு அலுவலரா இடம் மாத்திட்டாங்க பா... ''அழகிரிசாமி, வர்ற, டிசம்பர்ல ஓய்வு பெற இருக்கார்... ஓய்வு பெற போற நேரத்துல, அதிகாரிகளை மாத்தக் கூடாதுன்னு விதி இருக்காம்... அதனால, தன்னை இங்கயே பணிபுரிய அனுமதிக்கும்படி, கொங்கு மண்டல அமைச்சர் ஒருத்தர் மூலமா, முயற்சி பண்ணியிருக்காரு பா...

''ஆனா, 'ஆளுங்கட்சியினருக்கு இவர் எதுவுமே செஞ்சது இல்லை'ன்னு உள்ளூர் பிரமுகர்கள், 'போட்டுக்' குடுத்துட்டதால, அமைச்சர் கண்டுக்கலை... இதனால, நொந்து போன அழகிரிசாமி, புதிய அதிகாரியிடம் பொறுப்பை குடுத்துட்டு, தர்மபுரிக்கு கிளம்பிட்டாரு பா...'' என்றார் அன்வர் பாய்.

''ஒன்றிய ஊழியர்களை, விரட்டி விரட்டி வேலை வாங்கறா ஓய்...'' என, இரண்டாவது தகவலை பேச ஆரம்பித்தார், குப்பண்ணா.

''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர் பாய்.

''மதுரை மாவட்டத்துல, 1918 கிராமங்கள் இருக்கு... உசிலம்பட்டி, கொட்டாம்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பகுதிகள்ல, குடிநீருக்கே மக்கள் அல்லாடிண்டு இருக்கா ஓய்... ''குடிநீர் பிரச்னை சம்பந்தமா தகவல் தெரிவிக்க, கலெக்டர் அலுவலகத்துல, தகவல் மையம் திறந்திருக்கா... இங்க வர்ற புகார்களை, ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் அம்ரித், ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லதுரை, உடனுக்குடன், 'வாட்ஸ் ஆப்'ல, சம்பந்தப்பட்ட ஒன்றிய, பி.டி.ஓ.,க்களுக்கு அனுப்பி, நடவடிக்கை எடுக்க சொல்றா ஓய்...

''நடவடிக்கை எடுத்ததை, படங்களுடன் அனுப்பவும் சொல்றா... அதை, கலெக்டரிடம் காட்டி, விளக்கம் கொடுக்கறா... கலெக்டர் அலுவலகத்துல இருந்தே எச்சரிக்கை வரதால, ஒன்றிய அதிகாரிகளும், ஊழியர்களும், ஓடியாடி வேலை பார்த்து, முடிஞ்ச அளவுக்கு, குடிநீர் பிரச்னையை தீர்த்து வச்சுண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''ஏறி வந்த ஏணியை எட்டி உதைச்சிட்டாருல்லா...'' என, அங்கலாய்த்தபடியே, கடைசி விஷயத்தை ஆரம்பித்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''அ.தி.மு.க., - அ.ம.மு.க.,ன்னு பல கட்சிகள் தாவுன, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடைசியா, தி.மு.க.,வுக்கு தாவி, எம்.எல்.ஏ., வாகவும் ஆயிட்டாருல்லா... இவரை, தி.மு.க.,வுக்கு கொண்டு வந்தது, திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நேரு தான்... ''ஆரம்பத்துல, நேருவிடம் பவ்யமா நடந்துக்கிட்ட செந்தில் பாலாஜி, எம்.எல்.ஏ., ஆனதும், மாறிட்டாரு வே... ஸ்டாலின், உதயநிதிகிட்ட செல்வாக்கை வளர்த்துக்கிட்டவர், நேருவை கண்டுக்கிறதே இல்லை...

''சமீபத்துல, அவரது கரூர் மாவட்டத்துல நடந்த நிகழ்ச்சிகளுக்கு கூட, திண்டுக்கல்லை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பெரியசாமி, சக்கரபாணியை தான் சிறப்பு அழைப்பாளரா கூப்பிட்டிருக்காரு வே... ''இப்பல்லாம், நேருவிடம், செந்தில் பாலாஜி பத்தி யாராவது பேச்சை எடுத்தாலே, 'அட விடுங்கப்பா... திறமை இருக்கிறவங்க, முன்னேறிட்டு போகட்டும்'னு விரக்தியா சொல்லிடுதாரு வே...'' என்றார் அண்ணாச்சி.

அரட்டை முடிய, நண்பர்கள் கிளம்பினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement