Advertisement

கிராம அஞ்சல் சேவகர்கள் வாழ்வு திண்டாட்டம்!

Share

ஏ.தங்கதுரை, தேனியிலிருந்து எழுதுகிறார்: மூன்று நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட் டிவிஷன் பெஞ்ச், 'கிராம தபால் ஊழியர்களை, சிவில் சர்வன்ட்ஸ், சிவில் ரெகுலர் சர்வீஸ்' என, ௧௯௭௭, ஏப்., ௨௨ல், தீர்ப்பளித்துள்ளது. ௪௨ ஆண்டுளாகியும், ௨.௭௦ லட்சம் கிராம தபால் ஊழியர்களை, சிவில் ரெகுலர் போஸ்ட் என்ற நிலைக்கு மாறுதல் செய்யவில்லை. இன்றளவும், அவர்கள், நவீன கொத்தடிமைகள் என்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

தபால் துறையில், ௨.௭௦ லட்சம் கிராம அஞ்சல் சேவகர்கள் பணியாற்றி வருகின்றனர். முன்பு, 'எக்ஸ்ட்ரா டிபார்ட்மென்ட் ஏஜென்ட்' என்ற பெயரில் அழைக்கப்பட்டு, அதன் பின், கிராம அஞ்சல் சேவகர்கள் என, அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கிராம தபால் ஊழியர்கள், ௨.௭௦ லட்சம் பேருக்கு, மாத சம்பளமாக, ௧௩ ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. ஊழியர்களுக்கு, பணி நிறைவின்போது, ஓய்வூதியம் இல்லை. ௩௦ ஆண்டுகள் பணியாற்றினாலும், பதவி உயர்வு இல்லை. பணிக்கொடை, ௧.50 லட்சம் வழங்கப்படுகிறது. கிராம தபால் ஊழியர்களுக்கு, பிற ஊழியர்களைப் போல, வீட்டு கடன், வீட்டு வாடகைப் படி இல்லை. கிராம தபால் அலுவலகங்களுக்கு, மாதம் வாடகையாக, ௨௫௦ ரூபாய் மட்டுமே, மத்திய அரசு வழங்குகிறது. இந்த தொகையில், கிராம தபால் அலுவலகம் செயல்பட, வாடகைக்கு இடம் கிடைப்பதில்லை.

மாநில அரசுக்கு, மத்திய அரசு, பல வழிகளில் நிதி வழங்குகிறது. அதில், பல கிராமங்களில், மாநில அரசு, பல கட்டடங்களை கட்டி உள்ளது. அந்த கட்டடங்களில், எவ்வித அரசு அலுவலகங்களும் செயல்படாமல், சமூக விரோதிகளின் கூடாரங்களாக மாறி வருகின்றன. அவற்றை பயன்படுத்தி கிராம தபால் அலுவலகம் செயல்பட, மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மத்திய அரசு தபால் இலாகா ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில், ௬௦ சதவீத சம்பளத்தை, கிராம தபால் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். கிராம தபால் ஊழியர்களை, அரசு தபால் ஊழியர்கள் தகுதி நிலை - ௪ என்ற நிலைக்கு மாற்றி, அதற்குரிய ஊதியம், பிற சலுகைகளை வழங்க, மத்திய அரசு முன் வர வேண்டும்!

அப்துல் கலாம் கனவு நிறைவேற இதை செய்யுங்க!
ஆர்.ராமமூர்த்தி, மேட்டுப்பாளையம், கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: நான், ௨௦ ஆண்டுகளாக, இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தால், விவசாயிகளின் வருமானம் நான்கு மடங்காக உயரும். உதாரணமாக, ரசாயன உரங்களை இட்டு வளரும், வாழைத்தார் ஒன்றின் விலை, ௨௫௦ ரூபாய்; இயற்கை விவசாயத்தில் வளரும் வாழைத்தாரை, ஏற்றுமதி செய்தால், அதன் மதிப்பு, ௧,௦௦௦ ரூபாய். கிராமத்தில் உள்ள, சிறு விவசாயிகள் ஒன்றிணைந்து, கூட்டுறவு முறையில், நுாற்றுக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்தால், இது சாத்தியமே! இதை, மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைக்க, திட்டங்களை தீட்டி, நடைமுறைப்படுத்த வேண்டும்.

நாடு முழுவதும், ஒரே சட்டம் இயற்றி, ஆறு, குளம், ஏரியில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற, மாநிலங்களுக்கு கடும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஏரி, குளங்களில் உள்ள சத்து மிகுந்த மண்ணை, விவசாயிகள் இலவசமாக எடுக்க அனுமதிக்க வேண்டும். அப்படி செய்தால் விவசாயம் வளமாகும்; ஏரி, குளங்கள் ஆழமாகும்; நீர் சேகரிப்பும் இரு மடங்காகும். பெருகி வரும் குற்றங்களுக்கு எதிராக கடும் சட்டங்கள் இயற்றி, தண்டனை வழங்கினால், குற்றங்கள் பெருமளவு குறையும், '௯௯ முறை திருடியவர், மீண்டும் கைது' என்பது போன்ற செய்திகள் வராது. குற்றவாளிகள் குறையும்போது, காவல் துறை, சிறைச்சாலை நிர்வாகச் செலவுகள் குறையும். மேற்கூறிய யோசனைகளை, மத்திய அரசு ஏற்று, செவ்வனே செய்தால், அப்துல் கலாமின் கனவு, இந்தியாவில், இன்னும், 10 ஆண்டுகளில் நிறைவேறும்; இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

தமிழகம் கற்க வேண்டிய பாடம்!
எம்.பாலகிருஷ்ணன், தலைமையாசிரியர் (பணி நிறைவு), சிவகங்கையிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தின் மக்கள் தொகை அளவிலேயே, இங்கிலாந்தும் இருக்கிறது. தமிழகத்தை விட, அங்கு நிலப்பரப்பு அதிகம். இங்கிலாந்தின் ஆண்டு சராசரி மழை, ௮௮௫ செ.மீ; தமிழகத்தின் சராசரி ஆண்டு மழைப் பொழிவு, ௯௮௫ செ.மீட்டர். இங்கிலாந்தில், சிறப்பான நீர் மேலாண்மை திட்டங்களும், தண்ணீர் பகிர்வும் கடைபிடிக்கப்படுகின்றன. அங்கு நீர்வளத்தை சுத்திகரித்து, பகிர்வதற்கு, தனியாருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், அரசால், உள்ளூர் நகராட்சிகள் சிறப்பாக கண்காணிக்கப்படுகின்றன.

எந்த கழிவு நீரும், ஆற்றிலோ, வாய்க்காலிலோ விடப்படுவதில்லை. முழு நீரும் சுத்திகரிக்கப்பட்டு, மறு சுழற்சி முறையில் திரும்ப உபயோகிக்கப்படுகிறது. அங்கு தனியார் யாரும், வீட்டு உபயோகத்திற்கு மற்றும் தொழிற்சாலைகளுக்கு, ஆழ்துளை கிணறுகள் தோண்ட முடியாது.இங்கிலாந்து அரசிடம் அனுமதி பெற்று, அவர்கள் மூலம் குழாய் வழியாகத் தண்ணீர் பெற்றே, பயன்படுத்த முடியும். இதனால், அந்நாட்டில், ௧௦ அடியில் நீர் பெருக்கெடுக்கிறது. இங்கிலாந்தில், எந்த ஒரு வீட்டிலும், தண்ணீர் மேலேற்றும் பம்புகள், மோட்டார்கள் கிடையாது. குடியிருப்போர் மாடிகளில் இருந்தாலும், அந்த வீடுகளுக்கு ஒரு குறிப்பிட்ட அழுத்தத்துடன், தண்ணீர் அளிக்க வேண்டியது, நகராட்சியின் கடமை.

மூன்று மாடிகளுக்கு மேல் இருக்கும், கட்டடங்களுக்கு, அதற்கான சிறப்பு வசதிகளை செய்தால் தான், நகராட்சி அனுமதி கொடுக்கிறது. இங்கு, யாரும் வாய்க்கால்களில் சோப்பு போட்டு, குளிக்கவோ, துணி துவைக்கவோ தடை செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், இத்தகைய கட்டுப்பாடுகளை கொண்டு வந்தால், அரசியல் குறுக்கீடுகள் இருக்கும். நகராட்சிகளுக்கு, அதிக அதிகாரங்களை வழங்கி, அவை லஞ்ச லாவண்யமின்றி மனச்சாட்சியுடன் செயல்பட வேண்டும். தமிழகத்தின், ௨௨ மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்டம் சரிவடைந்துள்ளது.

நீர்நிலைகளில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற, நிலத்தடி நீர் மட்டத்தை சேமிக்க, தேவையான நடவடிக்கை எடுக்காததால், நிலத்தடி நீர் மட்டம் சரிவடைந்துள்ளது. 'எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்தாண்டு தமிழகத்தில் குடிநீருக்கு, பஞ்சம் ஏற்பட்டுள்ளது' என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழு அளவில் மக்கள் ஒத்துழைப்பு நல்கி, நேர்மையை கடைபிடித்தால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலை துாக்காது!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement