Advertisement

பா.ஜ., வண்ணத்தில் பாலமா என பதறும் தி.மு.க.,

''கூட்டணி வைச்சுண்டதால, அமெரிக்கா போற, யோகம் அடிச்சிருக்கு ஓய்...'' என, அரட்டை கச்சேரியைத் துவக்கினார், குப்பண்ணா.

''யாருக்குங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், சிகாகோ தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, மூணு நாட்கள், அமெரிக்கா, சிகாகோ நகர்ல நடந்தது ஓய்... ''இதுல, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பாண்டியராஜன் தலைமையில, தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதிகளா, த.மா.கா.,வைச் சேர்ந்த, 'மாஜி' எம்.எல்.ஏ., விடியல் சேகரும், கவிஞர், ரவிபாரதியும் போயிருக்கா... ''அ.தி.மு.க.,வோட கூட்டணி வைச்சதால ஓட்டு தான் கிடைக்கலை... 'அட்லீஸ்ட்' அமெரிக்கா போற வாய்ப்பாச்சும் கிடைச்சுதேன்னு, உற்சாகத்துல இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''ஏட்டும், டிரைவரும் சேர்ந்து, அள்ளிக் குவிக்கிறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார், அன்வர் பாய்.

''வெளக்கமா சொல்லும் வே...'' என, ஆர்வமாகக் கேட்டார், அண்ணாச்சி.

''திருச்சி, மணப்பாறை காவல் நிலையத்துல டிரைவரா இருக்கிறவரும், புத்தாநத்தம் நிலையத்துல, ஏட்டா இருக்கிறவரும், செம தோஸ்து பா... ''மணப்பாறையில நடக்குற அனுமதியில்லாத பார், லாட்டரி விற்பனை, விபசாரம், சூதாட்டம் உள்ளிட்ட எல்லா சட்டவிரோத செயல்களுக்கும், பக்க பலமா இருக்காங்க... ''டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்களுக்கு கொடுக்கணும்னு, ஏரியாவுல, மாமூல் வசூலிக்கிறாங்க... அந்த பணத்துல, கோடிக்கணக்கான ரூபாய்க்கு சொத்து வாங்கி குவிச்சுருக்காங்க பா...'' என, முடித்தார் அன்வர் பாய்.

''ராஜனும், பேட்ரிக்கும் இவ்வளவு வேகமா எங்க வே போறாவ...'' என, தெருவை பார்த்து கேட்டபடியே, ''கலரை பார்த்து, அலறுதாவ வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.

''காமெடி மேட்டரு சொல்ல போறீங்களா...'' என, ஆர்வமாகக் கேட்டார், அந்தோணிசாமி.

''-----முழுசா கேளும்... மதுரையில, ஆங்கிலேயர் காலத்துல கட்டுன, ஏ.வி.மேம்பாலம், வைகையாற்றின் தென், வட கரைகளை இணைக்குது... இந்த பாலம் பக்கத்துல, நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கிற வகையில, தடுப்பணை கட்டுதாவ வே... ''அதோட, ஏ.வி.பாலத்துல அரிப்பு ஏற்படாம தடுக்க, கருங்கற்களையும் கொட்டியிருக்காவ... பாலத்துக்கு, வெளிர் காவி மற்றும் பச்சை கலர்ல பெயின்ட் அடிக்காவ... 'இது, பா.ஜ., கட்சியின் கொடி நிறத்தை மறைமுகமாக குறிக்குது'ன்னு, தி.மு.க., - எம்.எல்.ஏ., தியாகராஜன் உட்பட சிலர் பிரச்னையை எழுப்பியிருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.

''நாட்டுல, தீர்க்க வேண்டிய பிரச்னைகள் ஏராளம் இருக்கு... இவாளுக்கு, பெயின்ட் தான் பிரச்னையா போயிடுத்தாக்கும்...'' என, சலித்தபடியே, குப்பண்ணா கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement