Advertisement

'டவுட்' தனபாலு

தி.மு.க., இளைஞரணி செயலராக பொறுப்பேற்றுள்ள, உதயநிதி: எனக்கு, இந்த பொறுப்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கவே இல்லை.


டவுட் தனபாலு: அரசியல் தெரிந்த அனைவருக்கும், குறிப்பா, தி.மு.க.,வின் அரசியலை அறிந்த அனைவருக்கும், அடுத்து இது தான் நடக்கும்கறது,

தெள்ளத் தெளிவாத் தெரியும்... இந்தச் சின்ன விஷயத்தைக் கூட கணிக்க முடியாத நீங்க, எப்படித்தான் இளைஞரணியை வழிநடத்தப்போறீங்களோ

என்ற, 'டவுட்' ஏற்படுதே...!தமிழக, பால்வளத்துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி: தி.மு.க.,விற்கு, குடும்ப முன்னேற்ற கழகம் என, பெயர் வைத்துக் கொள்ளலாம்.


டவுட் தனபாலு: தி.மு.க.,வின் இளைஞரணி செயலராக, ஸ்டாலின் மகன் உதயநிதி அறிவிக்கப்பட்டதற்கு, எல்லாக் கட்சிகளும், தங்களின்

கருத்துகளை பதிவு செய்து இருக்கு... உங்க கூட்டணியில் உள்ள, பா.ம.க.,வும், தே.மு.தி.க.,வும், கண்டும்காணாமலும் கடக்கப் பார்ப்பதை, நீங்க எப்படி

எடுத்துக்குவீங்க என்ற, 'டவுட்'டைக் கொஞ்சம் விளக்குங்களேன்...!தமிழக மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார்: தனி மரம், எப்போதும் தோப்பாகாது. தமிழகத்தில் எடுபடாத கட்சி என்றால், அது, அ.ம.மு.க., தான்.


டவுட் தனபாலு: தினகரன் பின்சென்ற, 18 பேரின், எம்.எல்.ஏ., பதவியைப் பறித்த பின்னரும், அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்களில் சிலர், இன்னமும், சசிகலா

புராணம் பாடுறாங்களே... தனி மரம் தோப்பாகாது என்பது, தினகரனுக்கும் தெரியும்... ஆனா, தோப்பின் பரப்பை குறைக்கும் என்ற கணக்கில் தான்,

அவரது அரசியல் இருக்கு... அதற்கு முட்டுக்கட்டை போட, என்ன முயற்சி எடுத்திருக்கீங்க என்பது தான், மக்களின், 'டவுட்!'

***

மா.கம்யூ., ராஜ்யசபா எம்.பி.,யான - டி.கே.ரங்கராஜன்: தேர்தலுக்காக, கார்ப்பரேட் நிறுவனத்திடம் பணத்தைப் பெற்றால், அது நியாயமானதாக இருக்காது. அரசியல் கட்சிகளுக்கு, பெரு நிறுவனங்கள் நிதி அளிப்பதை, தடை செய்ய வேண்டும். அரசே தேர்தல் செலவினங்களுக்கு பணம் வழங்கும் நடைமுறையை உருவாக்க வேண்டும்.


டவுட் தனபாலு: 'பெரு நிறுவனங்கள் எவையும், எதற்கெடுத்தாலும் கொடி பிடிக்கும் உங்களுக்கு நிதி அளிக்காத விரக்தியில், இப்படி ஒரு கோரிக்கையா... தேர்தல் செலவை மட்டும், அரசு பார்த்துக் கொண்டால் போதுமா... இல்லை, ஆட்களே இல்லாத கட்சிகளுக்கு, அரசே, ஆட்களை நியமித்து, தேர்தல் பணியை மேற்கொள்ளணும்னு, அடுத்த கோரிக்கை ஏதும் வைப்பீங்களோ'ன்னு, எவரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...! 'செம காமெடி' தான் போங்க!


துணை சபாநாயகர், ஜெயராமன்: பனை வெல்லம் உடலுக்கு ஆரோக்கியமானது. எனவே, எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும், மாதந்தோறும், 2 கிலோ பனை வெல்லம் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.


டவுட் தனபாலு: லட்சக்கணக்கில் சம்பளத்தை ஏற்றியும், வெல்லம் வாங்கக் கூட வழியில்லாத நிலையில்தான், நம்ம, எம்.எல்.ஏ.,க்கள் இருக்காங்களா... இவர்களுக்கே இந்த நிலைன்னா, நம்ம நிலை... ஆரோக்கியமான பனை வெல்லத்தை, ரேஷன் கடைகளில், நமக்கும் கொடுத்தால் என்ன என்பது தான், மக்களின், 'டவுட்'டாக இருக்கு...!


காங்., -- எம்.எல்.ஏ., பிரின்ஸ்: சாதாரண மக்கள், மதுவை குடிக்கின்றனர். இளைய தலைமுறையினர், மது குடிப்பதால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால், கிட்னி உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, மோசமான மதுவை விற்கக் கூடாது.


டவுட் தனபாலு: எது எதற்கோ போராட்டம் நடத்தும் நீங்க, மது ஆலைகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்த எதற்கு தயங்குறீங்க... யாருடைய பொல்லாப்புக்கு பயப்படுறீங்க... இளம் தலைமுறை மீது இவ்வளவு அக்கறை செலுத்தும் உங்களுக்கு, புதுச்சேரியின் சிறப்புகளுள் ஒன்றாக, இந்த மது இருக்கு என்பதும், அங்கு, உங்க கட்சியின் ஆட்சி நடக்குது என்பதும், ஏன் தெரியாமல் போச்சு என்பதுதான், மக்களின், 'டவுட்!'

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement