Advertisement

3 மத்திய பட்ஜெட்: கேள்விகள் ஏராளம்!

மோடியின் இரண்டாம் சுற்று ஆட்சியில், முதலாவதாக மத்திய பட்ஜெட்டை, பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பிக்கும் போது, அதில் என்ன சிறப்பு இருக்கிறது என்பது தெரிந்து விடும்.

லோக்சபா தேர்தல் வருவதற்கு முன்பிருந்தே, மோடியின் முதல் ஐந்தாண்டு காலத்தில் தேக்க நிலையும், வேலைவாய்ப்பு குறைவும் இருப்பதாக, பல்வேறு பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். இதைத் தாண்டி நாட்டில், 61 கோடி மக்கள், இத்தேர்தலில் ஓட்டளித்ததுடன், 17 மாநிலங்களில், காங்கிரஸ், எம்.பி.,க்களின் எண்ணிக்கை, மிகவும் பரிதாபமாகக் குறைந்து, சிறிய கட்சியாக நிற்கிறது.

அமெரிக்கா சந்திக்கும் பொருளாதார தேக்கநிலை, ஐரோப்பிய நாடுகள் சந்திக்கும் பிரச்னைகள் ஆகியவை, உலக அளவில் எதிரொலிக்கின்றன. இந்த விஷயத்தில், பல நாடுகளுடன் நமக்கு உள்ள பொருளாதார இணைப்பு, நமக்கு பிரச்னையா; அதைக் கைவிட்டு விடலாமா என்று சிந்திப்பதற்கு பதில், நாடுகள் தனித்தனியாக மேற்கொள்ளும் வர்த்தக உடன்பாடுகளுடன், உலக வர்த்தக நடைமுறை அமைப்பு செயல்பட்ட முறை மாற வேண்டும் என்று சிந்திப்பது நல்லது. இதை உலக தலைவர்கள் பங்கேற்ற, 'பிரிக்ஸ் நாடுகள்' கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்ற போது வலியுறுத்தினார்.

மேலும், இந்திய - அமெரிக்க உறவில், வர்த்தகம் என்பதை மட்டும் கருத்தில் கொண்ட காலம் மாறி வருவதற்கு அடையாளமாக, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய மூன்றும் இணைந்து, ஒரு தொழில் மேம்பாட்டு நடைமுறைகளை உருவாக்க வழி வருகிறது. ஏனெனில், இம்மூன்று நாடுகள் அணியாகச் சேரும் போது, அதன் மக்கள் தொகை, 170 கோடிக்கு மேல் உள்ளது என்கிற கருத்து, உலக அரங்கில் புதிய பார்வையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால், மோடி எதிர்பார்க்கும் விதத்தில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 5 டிரில்லியன் கோடி டாலர் அளவுக்கு மொத்த வளர்ச்சி ஏற்படும் என்பது, இப்போதுள்ள நிலையை விட, எட்டு மடங்கு அதிகம். வேறு விதமாக சொன்னால், இன்றுள்ள மொத்த வளர்ச்சி, 7 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்ந்து விடும். அது சுலபமானதா? இதை அமல்படுத்துவது பற்றி, பல்வேறு விஷயங்களை பேசினாலும், முதலில் இதை பிரதிபலிக்கும் பட்ஜெட்டாக, இத்தடவை அமையுமா என்பதே, இன்றுள்ள கேள்வி.சிறு, குறு தொழில்களுக்கு, முத்ரா வங்கி கடன் உதவி, முதல் ஐந்தாண்டுகளில் இருந்த போதும், அது எத்தனை லட்சம் பேரைக் கைதுாக்கி விட்டது என்பதற்கான தரவுகள் இல்லை. அதற்குள், இதுவரை வெளி வந்த பல்வேறு புள்ளி விவரத் தகவல்கள் மீதான நம்பகத்தன்மையை அலசும், சிறந்த பொருளாதார நிபுணர்கள் கூறும் கருத்துக்களுக்கு, அரசு, விடை தர வேண்டும்.

அதே போல, வங்கிகள் வராக்கடனை குறைக்க, சில நடைமுறைகளை, ரிசர்வ் வங்கி இப்போது கொண்டு வந்தாலும், வங்கிகள் அதிக அளவு கடன் தர அதன் மூலதன முதலீடு மேம்பாடு சிறக்க, பட்ஜெட் வழிகாட்ட வேண்டும். தனிநபர் வருமான வரிச் சலுகை, பெரிய மாற்றங்களை காண வாய்ப்பில்லை. ஆனால், சென்ற ஆட்சியில், கடைசி இரண்டு ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட, ஜி.எஸ்.டி., இப்போது ஓரளவு வெற்றிப்பாதையை நோக்கி நகர்கிறது.இதுவரை, 17 மாநிலங்களுக்கு இந்த வரியால், அதிக வருவாய் வந்திருக்கிறது. 'ஒரே வரி என்ற நடைமுறைக்கு, ஜி.எஸ்.டி., வர வேண்டுமானால், நாட்டில் ஏழைகள் யாரும் இருக்கக் கூடாது' என்ற, அருண்ஜெட்லி கருத்து, சிந்திக்கத்தக்கது.

மேலும், விவசாயிகளுக்கு கடன் சலுகை மட்டும் தருவதால், அவர்கள் வாழ்வாதாரம் அல்லது விவசாய வளர்ச்சி மேம்படவில்லை என்பதை, சமீபத்திய புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. அப்படி எனில், அவர்கள் உற்பத்தி திறன் அதிகரிப்பதுடன், நவீனத்துவ இணைப்பு, சந்தைப் பொருளாதாரத்தில் இணைக்கும் வழிகள் ஆகியவற்றை, இந்த பட்ஜெட் எப்படி காட்டப் போகிறது என்பது, முக்கியமான விஷயம்.

மோடியின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில், பட்ஜெட் சமர்ப்பித்த அருண்ஜெட்லி கருத்துகளை, இந்த பட்ஜெட், எந்த அளவு பிரதிபலிக்கும் என்று எதிர்பார்ப்பது சிரமம். ஆனால், கல்வி, சுகாதாரம் மட்டும் அல்ல, 'ஜலசக்தி' என்ற தண்ணீர் சேமிப்பு திட்டத்தை, மத்திய அரசு மேற்கொள்ள முன்வந்திருக்கிறது. ஆகவே, இதற்கும் ஒரு அணுகுமுறையை, பட்ஜெட் தெளிவாக்க வேண்டும்.இவற்றுடன், 'டிஜிட்டல்' பொருளாதாரம், எல்லா துறையிலும் வரும் போது, ஊழல் குறையும் என்பதால், அதை அமல்படுத்த, நிர்வாக கட்டமைப்பு எந்த விதத்தில் மாறும் என்பதை பட்ஜெட் காட்டுமா என்பதும், நாளை தெரியும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement