Advertisement

மறைநீர் என்னும் மந்திரச் சொல்

இன்றைக்குத் தண்ணீர் பஞ்சம் குறித்துப் பேசுகிறோம். அனுபவிக்கிறோம். இந்தத் தண்ணீர் பஞ்சத்துக்கு மறைநீரும் ஒரு காரணம். மறைநீரின் மதிப்பினை உணராததால் நீரின்றி தவிக்கிறோம். அது என்ன மறைநீர் எனக் கேட்கிறீர்களா?நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் உள்ளேயும் மறைந்திருக்கிறது மறைநீர். எளிதாகச் சொல்லவேண்டுமானால், ஒரு கிலோ அரிசிக்குரிய நெல்லை உற்பத்தி செய்ய 2500 முதல் 3000 லிட்டர்கள் தண்ணீர் தேவைப்படும். ஆனால் ஒரு கிலோ அரிசியை அதிகபட்சமாக அறுபது ரூபாய் கொடுத்து வாங்குவோம். இங்கு அரிசியின் விலையில் தண்ணீர் விலை சேர்க்கப்படுவதில்லை. அப்படி கணக்கிட்டு பார்த்தால், ஒரு லிட்டர் தண்ணீர் ஒரு ரூபாய் என வைத்துக்கொண்டாலும்கூட ஒரு கிலோ அரிசி விலை 3000 ரூபாய்க்கு விற்கவேண்டி வரும். இப்படி ஒரு பொருளின் உற்பத்திக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர், மறைநீர் ஆகும்.

பன்னாட்டு நிறுவனங்கள்
பன்னாட்டு நிறுவனங்கள் சென்னையில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கில் கார்களைத் தயாரித்து நம் நாட்டில் விற்பதோடு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் கார்களை உற்பத்தி செய்ய இடமில்லையா? அல்லது மின்சாரம் இல்லையா? அதெல்லாம் காரணமில்லை. இங்கு மனித சக்தி எளிதாக, குறைந்த விலையில் கிடைக்கிறது. மேலும் வரைமுறையின்றி நீர் எடுத்துக் கொள்ளலாம். அதுவும் செலவில்லாமல். 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள். இந்த நீரை எந்த நாட்டுக்காரர் இலவசமாகக் கொடுப்பார்? நம்மைத் தவிர.இந்திய நூற்பாலைகளில் ஆண்டுக்கு 36 லட்சம் டன் பனியனுக்கான நுால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 7.20 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சுற்றி வளைக்காமல் சொல்வதென்றால் ஒரு ஜட்டியைத் தயாரிக்க தேவையான மறைநீர் 2,700 லிட்டர். அப்படி என்றால் ஒரு ஜட்டிக்காக நாம் கொடுக்கும் குறைந்தபட்ச விலை ரூ. 2700. (லிட்டர் தண்ணீர் ஒரு ரூபாய் எனக் கணக்கிட்டால்..) அதுபோல ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை. நீர் போவது குறித்து யோசிப்பதில்லை. அன்னிய செலாவணி கிடைக்கிறது எனப் பெருமைப்பட்டுக் கொள்வோம்.
தோல் தொழிலில்
தாமிரபரணி அந்நிய குளிர்பான நிறுவனத்துக்குத் தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. ஒரு லிட்டர் குளிர்பானம் உற்பத்தி செய்ய தேவையான மறைநீர் 56 லிட்டர். அதுபோல பன்னாட்டு காகித நிறுவனம் பவானி கரையோரத்தில். ஒரு ஏ-4 அளவு கொண்ட காகிதத்தை உற்பத்தி செய்ய தேவையான மறைநீர் 10 லிட்டர். இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் தோல் பொருட்களில் 72 விழுக்காடு வேலுார் மாவட்டத்தில் உற்பத்திச் செய்யப்படுகிறது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும். ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் நீர் தேவை.முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரா. நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது. 60 கிராம் எடை கொண்ட ஒரு முட்டை உற்பத்திக்கு 196 லிட்டர் மறை நீர் தேவை. முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை.

பொருட்களுக்கு எவ்வளவு

சில பொருட்களின் ஒரு கிலோ எடைக்கு தேவைப்படும் மறைநீர். (அடைப்புக்குள் இருப்பது மறைநீர் அளவு - லிட்டரில்)ஆட்டுக்கறி (5521), மாட்டுக்கறி (15415), கோழிக்கறி (4323), பன்றிக்கறி (5988), ,பால் - 250மி.லி (255 ), பால்பவுடர் (4745), வெண்ணெய் (5553), நெய் (3178), தேனீர் -250மி.லி (27), காபி 125மி.லி (132), பீர்- 250மி.லி (74), ஒயின்- 125மி.லி (109), பிரட் (1608), பிட்சா-1 (1259), கரும்பு (1782), உருளைக்கிழங்கு (287), ஆப்பிள் (822), வாழை (790), ஆரஞ்சு (560), மாம்பழம் (1,800), பேரீட்சை (2277), நிலக்கடலை (2782), பூண்டு (353), முட்டைக்கோஸ் (237), தக்காளி (214) ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியது. ஆனால் தண்ணீர் மட்டும் அந்தக் கணக்கில் வருவதில்லை என்பதுதான் வேடிக்கை.

பொருளாதாரம்

மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக 'ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008' விருது பெற்றவர்.இன்றைக்கு வளர்ந்த நாடுகள், "ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்வதன் மூலம் 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தங்கள் நாட்டின் நீரை சேமித்துக்கொள்கிறோம்" என்கிறது.


மென்பொருள் நிறுவனங்கள்

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் எதற்காக மென்பொருள் நிறுவனங் களை இங்கே வைத்து நம் ஆட்களுக்கு சம்பளம் கொடுத்து வருகின்றன? இங்கே கூலி குறைவு என்பது மட்டுமில்லை. சென்னையில் ஒரு நபருக்கு பி.பி.ஓ. பணியைத் தருவதன் மூலம் அந்த நாடுகள் சேமித்துக்கொள்ளும் மறைநீரின் அளவு நாளொன்றுக்கு 7,500 லிட்டர்."முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாட்டின் வளர்ச்சியில் உனக்கு அக்கறையில்லையா?" என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. ஆனால் நம் விளைநிலங்களும், அதிலுள்ள நீரும் சுரண்டப்படுவதைப் பற்றியும், அவை கைவிட்டு போவதைப்பற்றியும் அக்கறை கொள்ளாமல் கார் தொழிற்சாலைகளும், அலைபேசி உற்பத்தி தொழிற்சாலைகளையும் துவங்குவது தான் வளர்ச்சி என்கிறீர்களா? அவர்கள் நம் வளத்தைச் சுரண்டிவிட்டு வெளியேறிவிட்டால் பின்னர் ஏதுமில்லாமல் நிற்பது நாம்தான். உற்பத்தி செய்யவேண்டாம் எனச் சொல்லவில்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம் பொதுவாய் உற்பத்தியோ ஏற்றுமதியோ செய்யவேண்டாம் என்றுதான் சொல்கிறோம். மறை நீர் பொருளாதாரமும் "தேவையில்லாமல் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம்'' என்கிறது. ஏற்கெனவே தமிழகம் நீர் பற்றாக்குறை மாநிலம், அப்படியிருக்கையில் நாம், மறைநீர் மூலமும் நீரை வீணாக்க வேண்டுமா? மறைநீர் என்னும் மந்திரச்சொல்லை உள்வாங்குவோம். மறைநீரை மொத்தமாக தவிர்த்துவிடமுடியாது. ஆனால் தவிர்க்க வேண்டிய உற்பத்தியை தவிர்த்து நீர் இருப்பை தக்கவைக்கலாம். யோசிப்போம்.ப. திருமலைபத்திரிகையாளர், மதுரைthirugeetha@gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement