Advertisement

2024ல் பா.ஜ.,வை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவர்!

ஆயுர்வேத மருத்துவர் ராஜேந்திரன் சேகர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நேரு, பிரதமராக இருந்த காலம் வரை, ஒரே நாடு, ஒரே தேர்தலை தான் நடத்தி வந்தார் என்பதை, எதிர்க்கட்சிகள் மறந்து விட்டனர் போலும்!இப்போது அதை மீண்டும் மறந்து, 'ஒரே நேரத்தில், லோக்சபா மற்றும் சட்டசபைக்கு தேர்தல் நடத்துவது, ஜனநாயகத்திற்கு ஆபத்து' என, அபத்தமாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கூறி வருகின்றன.'ஒரே நாடு... ஒரே தேர்தல்' என கூறி வரும், --நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ள அதிர்ஷ்டசாலி. 'ஒரே நாடு, ஒரே வரி எனும், ஜி.எஸ்.டி., என்ற வரி திட்டத்தை அமல்படுத்தியவர், அவரே.ஐந்து ஆண்டுகளாக, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முழக்கத்தை முன்னெடுத்து வருகிறார், பிரதமர், மோடி. அது, அடுத்த ஐந்து ஆண்டு ஆட்சியில், நிச்சயம் நடைமுறைக்கு வரும்; இதில், எந்தவித மாற்றமும் இருக்காது.வரலாற்று சிறப்புமிக்க சாதனையை, போற்றும் விதமாக, இரண்டாவது முறையும், மோடியிடம், ஆட்சியை ஒப்படைத்து விட்டனர், வாக்காளர்கள்.மாநில சட்டசபைகளின், ஆயுட்காலத்தை கூட்டியோ அல்லது குறைத்தோ, 2024ல், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற இலக்கை நிச்சயம் அடைவார், மோடி.நாட்டிலுள்ள, அனைத்து கட்சிகளின் ஆதரவோடு செயல்படுத்தப்பட போகும், வரலாற்று சிறப்புமிக்க, இந்த திட்டத்தின் மொத்த பலனையும் மோடிக்கு கொடுத்து, 2024ல், மீண்டும் ஆட்சியில் அமர்த்துவர், மக்கள்!

மனங்களைகுளிரவைக்கலாமே!எஸ்.ராமையா, திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: 'பழைய ஓய்வூதிய திட்ட முறை வேண்டும்' என, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த போதும், தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.இந்த கோரிக்கையை வலியுறுத்தி, பல கட்ட போராட்டங்களை நடத்தி, ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், விரக்தியின் உச்ச நிலைக்கே சென்று விட்டனர். பழைய பென்ஷன் திட்டம், இன்று வரை, கானல் நீராய் இருக்கிறது.தமிழகத்தில், 2003 ஏப்., 1 முதல், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஓய்வு பெற்ற பின், கடைசி காலத்தை நிம்மதியாக கடத்த, பென்ஷன் வேண்டும். அதில், கை வைத்ததால், அரசுப் பணியாளர்கள் கடும் விரக்தி அடைந்துள்ளனர்.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், 2018 - 19ல், 4.67 லட்சம் பேருக்கு, பிடித்தம் செய்யப்பட்டுள்ள கணக்கு தாள், இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், வெறும் கணக்கு தாளை மட்டும் சேர்த்து வைத்து, என்ன பயன் என கேட்கின்றனர், ஓய்வூதியதாரர்கள்.சேமித்த பணத்தை, காகிதத்தில் பார்த்தால் போதுமா? பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின்படி, 2018, மார்ச் 31 வரை, 5.07 லட்சம் பணியாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை, 22 ஆயிரத்து, 981 கோடி ரூபாய்.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திலிருந்து, பகுதி பணம் பெறுதல், கடன் வசதி, இன்று வரை கிடையாது. விதிகள் வகுக்கப்படாததால், ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. வருங்கால வைப்பு நிதி திட்டம், அதில் முன் பணம் பெறும் வசதி, கடன் பெறும் வசதிகள் இல்லை. அரசு நிர்ணயித்த வட்டி மட்டுமே, சந்தாதாரர்கள் கணக்கில் சேர்க்கப்படுகிறது.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கணக்கு, அரசு தகவல் விபரத் தொகுப்பில் தான் பராமரிக்கப்படுகிறது. பணிக்கொடை கிடையாது; குடும்ப ஓய்வூதியம் கிடையாது. 30 ஆண்டு பணி முடித்தோர், கடைசியாகப் பெற்ற ஊதியத்தில், 50 சதவீதம், பென்ஷனாக வழங்கப்படுகிறது. இது, பங்களிப்பு ஓய்வு திட்டத்தில் இல்லை.விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, ஊதிய உயர்வு, 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு, சிறப்பு சலுகை வசதிகள் கிடையாது.ஆந்திரா மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்ற, ஜெகன் மோகன் ரெட்டி, தேர்தல் அறிக்கையில் சொன்னது போல, மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தி உள்ளார். இப்படி தமிழக அரசும் செய்தால், அரசு பணியாளர்களின் மனங்களை, குளிர வைக்கலாமே!

சவக்குழி நெருங்கிவிட்டது!என்.மதியழகன், பெண்ணாகரம், கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகம் முழுவதும், குடிநீர் இன்றி மக்கள் அல்லாடி வருகின்றனர். அனைத்து மாவட்ட மக்களும், பிழைப்பு தேடி வந்துள்ள, சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.இதை கருத்திற் கொண்டு முதல்வர், இ.பி.எஸ்., 'ஜோலார்பேட்டையில் இருந்து தினமும், 10 மில்லியன் லிட்டர் குடிநீர், ரயில்வே வேகன் மூலம் எடுத்து, சென்னை மக்களுக்கு வழங்கப்படும்' என தெரிவித்துள்ளார்.இதை ஆட்சேபித்து, 'ஜோலார்பேட்டையிலிருந்து, ரயில் மூலம் தண்ணீர் எடுத்து, சென்னைக்கு வினியோகம் செய்தால், பெரும் போராட்டத்தை சந்திக்க நேரிடும்' என, தி.மு.க., பொருளாளர், துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை மக்களின் மனம் புண்படும் வகையில், இப்படி இவர் பேசி இருப்பது, தி.மு.க.,வின், மக்கள் விரோத போக்கு வெளிச்சத்திற்கு வந்ததாக கருதப்படுகிறது. 'குடிநீர் வழங்க வேண்டும்' என்பதற்காக, அவசரமாக, 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார், தமிழக முதல்வர்.எதில் தான் அரசியல் பார்ப்பது என்ற விவஸ்தை இல்லாமல், துரைமுருகன் பேசி இருப்பது, தி.மு.க.,வை, தமிழக மக்கள் சவக்குழியில் தள்ளும் தருணம் வந்து விட்டதாக தோன்றுகிறது.அநியாயத்திற்கு பொய் சொல்லி, தேர்தலில், மக்களை குழப்பி வெற்றி பெற்ற, தி.மு.க., அதன் ஈரம் காய்வதற்குள், துரைமுருகனின் பேச்சு, அக்கட்சியின் பேச்சாகவே தெரிகிறது.தேர்தலில் ஒரு பேச்சு, தேர்தல் அல்லாத போது ஒரு பேச்சும் பேசுவது, தி.மு.க.,வின் பழக்கம்; அந்த இரட்டை வேடம், இப்போது வெளுத்து விட்டது.வேலுார் மாவட்டம், காட்பாடியில், மினரல் வாட்டர் தொழில் செய்து வரும் துரைமுருகன், அந்த தொழிலை காட்பாடியிலேயே நிறுத்திக் கொள்ள வேண்டும். அவரது மினரல் வாட்டரை, மற்ற மாவட்ட மக்கள் புறக்கணிக்க வேண்டும்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • karutthu - nainital,இந்தியா

    மனங்களைகுளிரவைக்கலாமே அதை வருங்கால முதலமைச்சர் (ஸ்டாலின்) கவனித்து கொள்வார்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement