Advertisement

போதை, அவமானம் மட்டுமல்ல... அபாயமானதும்!இன்று சர்வதேச போதை பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு தினம்

Share

இன்று சர்வதேச போதைபொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு நாள். கடந்த இருபதுஆண்டுகளில் நாட்டின் பெரிய பிரச்னைகளில் ஒன்றாக போதை மற்றும் குடிபழக்கத்திற்கு அடிமையாகும் பழக்கம் அதிகரித்து வருகிறது. மாநில அரசுகளே மதுக்கடைகளை திறந்து விற்பனை செய்வதால் மதுவுக்கு அடிமை யாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் போதை பொருட்களை கடத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இவை வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளுக்கு மிகப்பெரிய சவால்களாக உள்ளன. போதையால் இன்று உலகமே தள்ளாடும் நிலை உருவாகியுள்ளது. இதை தடுக்கத்தான் போதை பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு நாள் உலகளவில் கடைபிடிக்கப்படுகிறது.

மூன்றாவது இடத்தில்

வடஇந்தியாவை பொருத்தவரையில் பஞ்சாப், மணிப்பூர், பீகார், மிசோரம், மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களில் மது மற்றும் போதையால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். தென்னிந்தியாவில் கேரளா, தமிழ்நாட்டில் போதை பொருட்கள் பழக்கம் அதிகம் உள்ளன. குறிப்பாக சென்னை, மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் போதை பொருட்களால் பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இன்று பெரியவர் முதல் சிறியவர் வரை மதுவிற்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அதிலும் பெண்கள் மது அருந்த பழக துவங்கியுள்ளது நமது பண்பாட்டிற்கு வேட்டு வைப்பதாக உள்ளது. போதைக்கு அடிமையாவோரில் 85 சதவீதம் பேர் படித்தவர்கள். அதில் 75 சதவீதம் பேர் இளைஞர்கள். உலக வர்த்தகத்தில் பெட்ரோல், ராணுவ தளவாடங்களுக்கு அடுத்து மூன்றாவதுஇடத்தில் சட்ட விரோதமாக போதை பொருட்கள் கடத்தல், வியாபாரம் உள்ளது. ஆண்டுக்கு ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கு போதை பொருட்கள் வியாபாரம் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.குடிப்பழக்கம் அல்லது போதை சார்புள்ளமை என்பது வெளிவர முடியாத ஒரு பழக்க அடிமை நோய். இந்நோயுள்ளவர்கள் மது மற்றும் போதையால் உடலுக்கும்,மனதுக்கும் ஏற்படும் பின் விளைவுகள் மற்றும் அதனால் சமூகத்தில் ஏற்படும் தலைகுனிவு ஆகியவற்றை நன்கு அறிந்தும் கூட தவிர்க்க முடியாமல் விருப்பத்திற்கு மாறாகவும், போதும் என்று கட்டுப்படுத்த இயலாதவாறும் தொடர்ந்து குடி பழக்கத்தை விடாமல் இருப்பர்.இன்று போதைக்கு அடிமையாகாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்ற நிலை உருவாகி கொண்டுள்ளது.

குடும்பத்தில் ஒருவர்சர்வதேச அளவில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மக்களிடமும் இதற்கான விழிப்புணர்வு குறைவு. இதன் விளைவுகளை உணர்த்தும் வகையில் தான் போதை பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. போதை பொருட்கள் கடத்தலை தடுக்க உலக நாடுகள் கடுமையான சட்டங்களை அமல்படுத்தினாலும் கடத்தல் அதிகரிக்கிறதே ஒழிய குறைந்தபாடில்லை. நவீன தகவல் தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கடத்தல் நடக்கிறது.போதை சமூகத்தை அழிக்கும் அரக்கன். போதை பொருட்களால் ஒருவரை மட்டுமின்றி குடும்பம், சமூகத்தையும் பாதிக்கிறது. இதுதான் அனைத்து வகை நோய்களுக்கும் முன்னோடி. கடந்த காலங்களில் கஞ்சா, சாராயம் என்ற வார்த்தைகளை மக்கள் உச்சரிக்கவே கூச்சப்பட்ட நிலையில் இன்று வீடுகளில் ஒரு குடி நோயாளி உருவாகும் நிலை உருவாகி வருவது அவமானம் மட்டுமல்ல அபாயமானதும் கூட.தமிழகத்தில் மட்டும் 60 சதவீத குடும்பங்களில் ஒருவர் இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். போதை பழக்கம் குறித்த போதிய விழிப்புணர்வு இன்மையால் இது ஒரு நோய் என்று அறியாமல் மருத்துவம் பார்க்க மறந்து மாய்ந்து போகின்றனர். சாராய மயக்கம் கொண்டவர்களுக்குள் காணப்படும் முதன்மையான அறிகுறி பாதிப்படைந்தவரின் உடல் நலத்தை சேதப்படுத்தும் வகையில் மேலும் மேலும் குடிக்க துாண்டுவதாகும்.

அரசியல் லாப நோக்கம்போதையால் அன்பானவர்களின் நிலை தடுமாறி ஆயுள், உடமை, கவுரவம், உறவுகளை இழக்கும் போது நிலை தடுமாறி நிற்கின்றனர்.இதில் தனிமனித ஒழுக்கம் மற்றும் கலாசார ஒழுக்கமும் சீர்கெட்டு வருகிறது. இதனால் அடிமைப்பட்ட மனிதனோ தன் நிலை மாறி குடும்பம், சமூகம், நாடு இவற்றை துறந்து தனித்து மனநோயாளியாகி இறக்கிறான். இதற்கான தீர்வு இல்லையா என்ற கேள்வி அவ்வப்போது எழுகிறது. தமிழகத்தில் 1960 வரை தலைவர்கள் மதுவை ஆதரிக்கவில்லை. ஆனால் அரசியல் லாப நோக்கத்திற்காக இன்று மதுக்கடைகள் தெருவிற்கு தெரு திறக்கப்பட்டுள்ளன.சர்வதேச குடிநோய் அறிதல் கோட்பாடுகளின்படி குடிநோயாளிகளை அறிந்து கொள்ளலாம். குடியிலிருந்து மற்றும் போதையிலிருந்தும் விடுபட்டு புதியதொரு மனிதனாக வாழ்வதே மறுவாழ்வு என கருதுகிறோம். அவர்களுக்கு முறையான சிகிச்சை மிகஅவசியம். இது குணத்தில் கோளாறுகளை ஏற்படுத்துவது அல்ல. அவர்களில் குணத்தில், பழக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டுமே இதற்கான தீர்வு காண முடியும். ஆகவே போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை கண்டறிந்து முறையான சிகிச்சையளிக்க வேண்டும்.போதை என்றால் மது மற்றும் சிகரெட் ஆகியவைகளை தான் நினைக்கிறோம். அதையும் தாண்டி உலகம் முழுவதும் மற்ற போதை பொருட்களின் உற்பத்தி, கடத்தல் அமோகமாக நடக்கிறது. ஆண்டுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு போதை பொருட்கள் வர்த்தகம் நடக்கிறது. கஞ்சா, கொகைன், பிரவுன்சுகர், ெஹராயின், அபின், புகையிலை, மது, ஊக்கமருந்து, ஒயிட்னர் போன்றவை இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிப்பதுடன், அவர்களையும் அழிக்கின்றன.

சட்டம் சொல்வது என்னஇந்திய போதை பொருள் தடுப்பு சட்டம் 1985ன்படி போதை பொருள் தடுப்பு ஆணையம் 1986ல் துவக்கப்பட்டது. மருத்துவ விதிமுறைகளுக்கு உட்படாத உற்பத்தி செய்தல், விற்றல், பயன்படுத்துதல்,சட்ட விரோதமாக கடத்துதல், பதுக்குதலை குற்றம் என சட்டம் கூறுகிறது. இதை மீறுவோருக்கு 10 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுகிறது. நம் நாட்டில்போதை பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றங்களே மாவட்ட வாரியாக உள்ளன.இதிலிருந்து எந்தளவுக்கு போதை பொருட்கள் பயன்பாடு, கடத்தல் இருக்கிறது என அறியலாம். என்னதான் கடுமையான சட்டங்கள் இருந்தாலும் கூட போதை பொருட்கள் கடத்தல் தொடர் கதையாகவே உள்ளன. அதற்கான தேவை இருப்பதே அதற்கு காரணம் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். தேவை குறைந்தால் மட்டுமே கடத்தல் குறையும். போதையற்ற உலகம் படைக்க இந்நாளில் அனைவரும் உறுதி ஏற்போமா.-கே.எம்.ரமேஷ் கிருஷ்ண குமார்போதை மறுவாழ்வு மையநிர்வாக இயக்குனர், மதுரை63790 78874

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement