Advertisement

நேர்மையான ஐ.பி.எஸ்., அதிகாரி நம்மிடம் இல்லை!

நேர்மையான ஐ.பி.எஸ்., அதிகாரி நம்மிடம் இல்லை!

எஸ்.ராஜகோபாலன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிரதமராக இருந்து, பதவி இழந்த, இந்திராவை ஒரு வழக்கு தொடர்பாக, அப்போதைய பிரதமர், மொரார்ஜி தேசாய் கைது செய்ய உத்தரவிட்டார். இதை ஆற்றும் பொறுப்பு, ஐ.பி.எஸ்., அதிகாரியாக, மத்திய அரசிடம் பணி புரிந்த, வி.ஆர்.லட்சுமிநாராயணன் வசம் ஒப்படைக்கப்பட்டது.இந்திராவின் டில்லி இல்லத்திற்கு சென்று, அவரை கைது செய்ய முயன்றார், லட்சுமி நாராயணன். அப்போது, வீட்டில் இருந்த, இந்திராவின் மூத்த மகன், ராஜிவிடம், 'உங்கள் தாயை அமைதியாக சரணடைய செய்யுங்கள்' என்றார்.சற்று நேரத்திற்கு பின், வீட்டை விட்டு வெளியே வந்த இந்திரா, 'கை விலங்குகள் எங்கே?' என கேட்டார்.அதற்கு, லட்சுமி நாராயணன், 'மேடம்... உங்கள் கையினால், பல விருதுகளை பெற்று இருக்கிறேன். அதன் பிறகு, நான் கொஞ்சம் சோம்பேறியாகி விட்டேன். எனவே, கை விலங்குகளை, எடுத்து வர மறந்து விட்டேன்' என, நகைச்சுவையுடனும், கண்ணியத்துடனும் கூறினாராம்.அப்பேற்பட்ட, நேர்மையான, ஐ.பி.எஸ்., அதிகாரி, பணி ஓய்வுக்கு பின், தன், 91வது வயதில் காலமானார். கடமை, கண்ணியம், மனிதாபிமானத்திற்கும், லட்சுமி நாராயணன் எடுத்துக்காட்டாக விளங்கினார்.அவர் மறைவு, நாட்டிற்கே பெரிய இழப்பு!


தமிழக அரசுஆதரவு கரம்நீட்டாது!
என்.அகத்தியன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஹிந்தி படிக்க வேண்டியதன் அவசியம் குறித்து, எத்தனையோ கடிதங்கள், இதே பகுதியில் வெளியாகி உள்ளன. இதில், 'ஹை லைட்டான' விஷயம் என்ன தெரியுமா?'ஹிந்தி படிக்க நாங்கள் தயார்; 1967ல், அண்ணாத்துரை பேச்சை கேட்டு, அது வேண்டாம் என, போராட்டம் நடத்தி, நாங்கள் நாசமாகி விட்டோம். அது எவ்வளவு மோசமான தவறு என்பதை, இப்போது, நாங்கள் உணர்ந்து விட்டோம்' என, ஹிந்தியை ஆதரிப்போர் வருந்துகின்றனர்.'வருத்தப்படுகிறோம்' எனக் கூறும், மாணவ சமுதாயம் மனம் திருந்தியதாக தெரியவில்லை.'வேண்டும்... வேண்டும்; எங்களுக்கு ஹிந்தி வேண்டும்; தடுக்காதே... தடுக்காதே, ஹிந்தி படிப்பதை தடுக்காதே...!' என, பதாகைகளை ஏந்தி, மாணவர்கள், வீதிகளில் இறங்கி பெரிய அளவில் போராட்டம் நடத்தவில்லை.ஹிந்தியை, பா.ஜ., ஆதரிக்கிறது. ஆனால், தமிழக அரசின் இருமொழிக் கொள்கையை எதிர்த்து, ஆர்ப்பாட்டங்கள் நடத்தவில்லை. பொதுமக்களும், 'எங்கள் குழந்தைகள் ஹிந்தி படிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி நடத்தவில்லை.'ஹிந்தி வேண்டாம்' என, போராட்டம் நடத்தும், 'வெட்டி'களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதை, தனியார், 'டிவி'க்கள் ஒளிபரப்புகின்றன.ஹிந்தியை எதிர்ப்போர் காட்டும் ஒற்றுமையை, ஹிந்தியை ஆதரிப்பவர்களிடம் காண முடியவில்லை.ஹிந்தி படிக்க, தமிழக அரசு எப்படி நடவடிக்கை எடுக்க முன்வரும். ஹிந்தி யின் அவசியம் குறித்து, 'தினமலர்' நாளிதழ் எத்தனை கடிதங்களை வெளியிட்டாலும், அது கடலில் பெய்த மழையாக, காட்டில் காய்ந்த நிலவாக தானே இருக்கிறது.சொரணையற்ற ஜென்மங்களாக தமிழர்கள் இருப்பதால், தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள், ஹிந்தி எதிர்ப்பு வியாபாரத்தை நடத்தி வருகின்றன.தன் குடும்பத்தினரை, ஹிந்தி படிக்கச் சொல்லி, தமிழக மக்களை படிக்காமல் செய்து, அவர்கள் நெற்றியில், பட்டை நாமம் சாத்துகின்றனர், அரசியல்வாதிகள்.மாங்கா மடையர்களாக தமிழர்கள் இருப்பதை, யாரும் மாற்ற முடியாது. ஹிந்தி படிக்க, தமிழக அரசு ஒரு போதும் ஆதரவு கரம் நீட்டாது!

வளர்ச்சியையாரால்தடுக்க முடியும்!

சொ.செல்வராஜ், கோ - ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: உலக அளவில், மனித வளமுள்ள நாடுகளில், இந்தியா முதலிடம் வகிக்கிறது; நாட்டின், மொத்த மக்கள் தொகையில், ௬௫ சதவீதம் இளைஞர்களை கொண்டுள்ளது என்பது, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த, பா.ஜ.,வால் பெரிய அளவிற்கு சாதனை படைக்க முடியவில்லை. ஜி.டி.பி., எனும் மொத்த உணவு உற்பத்தி வளர்ச்சி, 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. 45ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.இந்திய பங்குச் சந்தைகளில், அதிக அளவு, ஏற்ற இறக்கம் இருப்பதால், பொருளாதார வளர்ச்சி, சற்று தளர்ச்சி அடைந்து வருவது, நாட்டிற்கே பெரும் சவாலாக உள்ளது.இதை எதிர்கொள்வதற்கு ஏதுவாய், சமீபத்தில், ஆர்.பி.ஐ., ரெப்போ வட்டி விகிதத்தை மூன்று முறை தலா, 0.25 சதவீதம் குறைந்துள்ளது; இது, சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம்.இந்த வட்டி குறைப்பின் மூலம், கடனுக்கான வட்டி சற்று குறையக் கூடும்; நிறுவனங்கள், குறைந்த வட்டியில் அதிக அளவு கடன் பெற்று, உற்பத்தி இலக்கை அதிகரிக்கக் கூடும்; இதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் கூடும் என்பது, ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்பு!அதிக அளவு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை தீட்டுவது, மத்திய அரசின் கையில் உள்ளது என்பதை, நாடாளுவோர் உணர வேண்டிய நேரம், இது.தற்போது, இரண்டாம் முறையாக, பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவை, அறுதிப் பெரும்பான்மையுடன் பொறுப்பேற்றுள்ளது. ஸ்திரமான சூழ்நிலை நிலவுவதால், உலக அளவில் பொருளாதார வளர்ச்சியின் சுணக்கத்தை போக்க, ௭௦ சதவீதம் விவசாயத்தை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரம் சிறக்க, தற்போதைய மத்திய அரசு வழிவகுக்கும் என எதிர்பார்க்கலாம்!பெருகி வரும் வேலை வாய்ப்பின்மையைக் குறைக்க, பிரதமர், மோடி தலைமையில், இரண்டு கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது, வரவேற்கத்தக்கது.கடந்த காலங்களில், இது போன்ற பல்வேறு குழுக்கள் அமைந்தபோதும், பெரும்பாலும் கண் துடைப்புக்காகவே அமைக்கப்பட்டதாக விமர்சனம் செய்யப்பட்டது.தற்போது, அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் தீவிரமாகச் செயல்பட வேண்டும். ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு, மக்களுக்காக இணைந்து செயல்பட்டால், இந்தியாவின் வளர்ச்சியை எவரால் தடுக்க முடியும்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • venkat Iyer - nagai,இந்தியா

    திரு.செல்வராஜ் கூறிய கருத்துக்கள் உண்மையில் வரவேற்கத்தக்கது. உண்மையில் இன்றும் கூட தொழில் ஒன்றை செய்வதற்கு கிண்டியில் உள்ள , MSME- யிடம் மெழுகுவர்த்தி மற்றும் அப்பளம் அல்லது பேப்பர் கப் போன்ற Project-தான் இன்றும் வைத்துள்ளனர். மின்சாரம் இல்லாத நாட்களில் , மெழுகுவர்த்தி அமோகமாக விற்பனை இருந்தது. இப்போது இவர்களிடம் உள்ள Project அனைத்தும் விற்பனை செய்ய முடியாத இத்து போனதாக இருக்கின்றது. பல புதிய Projectsகள் அனைத்தும் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தொழில் முனைவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். தனியார் ஆலோசனை மையம் லட்சக்கணக்கில் பணத்தினை கறக்கின்றார்கள். மாவட்ட தொழில் மையம் மாவட்டத்தில் தொழிலை வளர்ப்பதற்கு ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க அரசு நடவடிக்கை வேண்டும். புதிய Project-களை அரசு தொழில் முனைவர்களுக்கு கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    லோக்சபாவில் திமுக எம்பிக்கள் தமிழில் பிரமாணம் எடுத்துக்கொண்டதைப் பாராட்டிய கனிமொழி 'எம்பிக்கள் சபையில் ஹிந்தியில் பேசவேண்டும்' என்கிறாரே, அப்படியானால் ஹிந்தியை எதிர்த்துக் கூப்பாடு போட்டவர்களெல்லாம் அங்கு எப்படிக் குப்பை கொட்டப் போகிறார்கள்?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement