Advertisement

நேரத்தை பயன்படுத்துங்கள்

'எதையும் ஒத்திப்போடுவது என்பது தீய பழக்கம். ஒத்திப்போட முக்கியமான காரணம்' முடிவெடுக்க முடியாமையே. முடிவெடுக்க முடியாதவர்கள் தான் அதிக நேரத்தை வீணாக்குவதுடன் பலவித தொல்லைகளை ஏற்படுத்திக் கொண்டு பல நல்வாய்ப்புக்களையும் இழந்து விடுகின்றனர். முடிவெடுப்பது கஷ்டம் தான். முடிவெடுக்காமல் தடுமாறுவதை விட தவறுகள் செய்தாலும் பரவாயில்லை. முடிவெடுக்க பயந்து பலர் ஒத்திப்போடுகின்றனர்.நேரத்தைப் பயன்படுத்துங்கள்; நேரத்தை வீணாக்காதீர்கள். அது போனால் போனது தான். இழந்த பணத்தை மீட்டு விடலாம். இழந்த நேரத்தை மீட்க முடியாது. கையிலிருக்கும் நேரத்தை உருப்படியாகச் செலவழிக்கிறவர்களால் மட்டுமே எதிலும் வெற்றி பெற முடியும். ஓட வேண்டிய நேரத்தைத் துாங்கிக் கழித்த முயல் ஆமையிடம் தோற்று விட்ட கதை அனைவரும் தெரிந்தது தான்.
நேரத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்
“எனக்கு நிற்க நேரமில்லை” என கூறுகிறவர்கள் உண்மையில் நேரத்தைச் சரியாகப் பங்கீடு செய்யத் தெரியாதவர்களே. நேரத்தை எப்படிப் பயன்படுத்துவது என அறிந்தவர்களுக்கு எதற்கும் போதிய நேரமிருக்கும். அதிக வேலையிருக்கிறவர்கள் நேரத்தை வீணாகக் கழிக்க மாட்டார்கள். ஒழுங்காக வேலை செய்கிறவர்களுக்கு ஒவ்வொரு வேலைக்கும் எவ்வளவு நேரம் செலவாகும் என்பதும் தெரியும். அவர்கள் தம் வேலைகளை மிக ஒழுங்காகச் செய்து முடித்து விடுவர். சந்தோஷமாகப் பொழுது போக்குவதற்குக்கூட கைவசம் சிறிது நேரம் வைத்திருப்பார்கள். ஆகவே எதிலும் ஒழுங்கமைப்புச் செய்து கொண்டு பணியைத் துவங்குவது நேரத்தை மிச்சப்படுத்த உதவும்.எல்லாக் காரியங்களுக்கும் ஒழுங்கமைப்பு அவசியம். நேரத்தைச் செலவழிக்கவும் அது இன்றியமையாதது. உங்களுக்கு எப்போதும் ஏதாவது வேலை பாக்கி இருந்து கொண்டேயிருந்தால் நீங்கள் அளவுக்கு அதிகமாக வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் அல்லது நேரத்தை சரியானபடி ஒழுங்கமைப்பு செய்து வேலைச் சுமையைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.நேரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் அதைச் சரியாகப் பயன்படுத்துவதற்கும் அக்கறை இருக்க வேண்டும். எல்லாக் காரியங்களுக்குமே அக்கறை இன்றியமையாதது. நீங்கள் செய்ய வேண்டிய காரியத்தில் அக்கறையை வளர்த்துக் கொள்வீர்களானால் அந்தக் காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். ஒரு காரியத்தைச் செய்ய நேரம் தேடிக்கொண்டிருக்காதீர்கள். அதற்கான நேரத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.
நேரத்தை வீணாக்க கூடாது
காலையில் அரைமணி நேரம் முன்னதாக எழுவதன் மூலம் அலுவலகத்துக்கு அவசரமாக ஓட வேண்டியதை தவிர்க்கலாம். இரவு துாக்கம் வரும் வரை முழு நேரத்தையும் பயனுள்ள முறையில் செலவழிக்க வேண்டும். பெரும்பாலானவர்கள் படுக்கையில் சும்மா படுத்துப் புரண்டு கொண்டிருந்து நேரத்தை வீணடிக்கின்றனர். அந்த நேரத்தில் படிப்பது, எழுதுவது போன்றவைகளை செய்யலாம்.பகலில் நேரத்தைப் பங்கீடு செய்யும் போது விளையாட்டுக்கும் பொழுது போக்குக்கும் கணிசமான நேரத்தை ஒதுக்க வேண்டும். மன மகிழ்வுக்கு நேரம் ஒதுக்காவிட்டால் உடல் நலம் கெட்டுவிடும். மனதிற்குப் பிடித்த எந்த வேலையும் மனதை மகிழச்செய்யும். சும்மாயிருப்பதைவிட ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பது உத்தமம்.நேற்றைய தவறுகளைப் பற்றி எண்ணி நேரத்தை வீணாக்கிக் கொண்டிராமல், நாளை செய்ய வேண்டியதைப் பற்றித் திட்டமிட அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நேரத்தின் அருமையை உணர்ந்து பயனுள்ள வழிகளில் செலவழித்து வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடியையும் மகிழ்ச்சிகரமாக மாற்றுங்கள்.எல்லோரும் கேலி செய்தபோது தொலைபேசி மூலம் பேச இயலும் என்று கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் ஏழு ஆண்டுகள் பொறுமையையும் விடா முயற்சியையும் மேற்கொண்டு நேரத்தை வீணடிக்காமல் ஆராய்ச்சி செய்து வெற்றி பெற்றார். அவருடைய சாதனைக்குக் காரணம் நேரத்தைப் பயன்படுத்தியதே. நேரம் பணத்தைவிட மதிப்புமிக்கது.
சாதனை புரிந்தவர்கள்
'நேற்று போலவே இன்றும் முன்னேற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். நாளையும் செல்வேன்' தினமும் பலமுறை இந்த வாசகங்களைச் சொல்லிச் சொல்லித் தங்களை மனதிற்குள் புகழ்ந்து ஊக்குவித்துக் கொண்டவர்களே விரைந்து சாதனை புரிந்துள்ளார்கள். நீங்களும் இந்த முறையைப்பின்பற்றி நேரத்தின் அருமையை உணர்ந்து வெற்றி பெறுங்கள் என்ற டாக்டர் ஜே.ஸ்வார்ட்ஸ் கூறிய கருத்தை எண்ணிப்பாருங்கள்.நேரத்தின் அருமையை உணர்த்த ஹோரஸ்மான் என்ற அறிஞர், “தினமும் ஒரு பக்கமாவது படிப்பதற்கு நேரம் ஒதுக்குவது என்று தீர்மானம் செய்யுங்கள். இப்படிப் படிக்க ஒதுக்கியதால் கிடைத்த நன்மைகளை ஆண்டு இறுதியில் நினைத்துப் பார்த்தால் உங்கள் மனம் பூரிப்படையும். நேரத்தைப் பயன்படுத்துங்கள். அதுவே உங்கள் முன்னேற்றத்திற்கு மூலதனம்,” என்றார்.
இலக்கை எட்டுங்கள்
இந்த உலகத்தில் நாம் வாழப்போவது குறுகிய காலத்திற்குத் தான். நம்முடைய அலட்சியத்தினால் அதிலும் குறிப்பிடத்தக்க அளவு காலத்தை வீணாக்கி விட்டு நம் வாழ்நாளை இன்னும் குறைத்துக்கொள்வது எந்த வகையில் நியாயம்? 'நேரத்தை சரியான முறையில் செலவழித்தால் வெற்றிகள் கிடைக்கும். உங்களுக்கென்று ஓர் இலக்கு இருந்தால் அதை எட்டுவதற்கான முயற்சியில் உடனடியாக இறங்குங்கள். சரியான நேரம் வரட்டும் என்று தாமதிக்காதீர்கள். அது தானாக வராது. செய்வதா… வேண்டாமா என்று தடுமாறிக் கொண்டிராமல் எப்படிச் செய்வது என்று யோசனை செய்யுங்கள். ஆனால் செய்யத் தொடங்கி விடுங்கள். காரியம் சரியாக நடக்காவிட்டால் கூடப் பரவாயில்லை. முடிவெடுக்கிற தொல்லை முடிந்தது என்று அடுத்த காரியத்தில் கவனத்தைச் செலுத்துங்கள். ஒத்திப்போட்டுக் கொண்டேயிருந்தால் முதல் காரியத்தையே இன்னமும் தொடங்கியிருக்க மாட்டீர்கள்.ஒவ்வொரு நாளும் இதுபோல் இன்றைக்கு மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற சிந்தனையுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உடல்நலத்திற்கும் ஆரோக்கியமான மனநலத்திற்கும் உறுதியான உடலுக்கும் மன உறுதிக்கும் ஒரே டானிக் தான் உண்டு. அது தான் துணிவு என்பது. இந்தத்துணிவுடன் நேரத்தையும் இணைத்துச் செயல்பட்டால் நம் வாழ்வு உயரும். புகழும் பெருமையும் நம்மை நாடி வந்து சேரும். உங்கள் குறிக்கோளில் அழுத்தமான நம்பிக்கையும் அதைச் செயல்படுத்துவதில் குன்றாத வேகமும் இருக்க வேண்டும்.
இது அவசரமான காலம்
மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் நிற்காமல் ஓடிக்கொண்டு தன் கடைமையை செய்வது கடிகாரம் ஒன்று தான் என எப்போதும் நினைவில் வைத்துகொள்ள வேண்டும். நம் வாழ்வில் நேரத்தை திட்டமிடுதல் அவசியம் ஆகும். வாழ்வை அனுபவிக்கவும் ஓய்வெடுக்கவும், அதற்கெனக் தனிதனியாக நேரத்தை ஒதுக்கியே ஆகவேண்டும். நேரத்தை வீணாக்கும் செயல்முறைகளை தவிர்த்துவிட வேண்டும். ஆகவே நேரத்தை அறிந்து புரிந்து உணர்ந்து செயலாற்றி நமது வாழ்வை வளமாக்கி கொள்ளலாம்.வாழ்க்கையில் எல்லா திறமையும் தகுதியும் இருந்து சில இடங்களில் புறக்கணிக்கப்பட்டு தோல்விகளை சந்தித்து கொண்டிருக்கிறீர்களா. நீங்கள் தொடர்ந்து ஓட வேண்டும். தொடர்ந்து ஓடினால் தோல்விக்கும் தோல்வி வந்துவிடும். உங்களுக்கான நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. நேரத்தைப் பயன்படுத்துங்கள்; அது உங்களைப் வெற்றிப்பாதையில் நடத்தி செல்லும்.
- முனைவர் தி. பாலசுப்பிரமணியன்எழுத்தாளர், காரைக்குடி.96002 48107

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement