Advertisement

'நைட்டிங்கேல்' திட்டத்தால் அரசு புகழ் பெறும்!

'நைட்டிங்கேல்' திட்டத்தால் அரசு புகழ் பெறும்!

சுப.கணபதி, எமனேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'என்னாச்சு நைட்டிங்கேல்' என்ற தலைப்பில், வாசகர் ஒருவர், இதே பகுதியில் கடிதம் எழுதி இருந்தார்; அவர் கூற்று உண்மை.மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியரிடமிருந்து, மாதம், 300 ரூபாய் பிடித்தம் செய்து, மருத்துவ சிகிச்சை செய்யலாம்' என்று, அரசு ஆணை உள்ளது.ஆனால், 'இன்ன வியாதிக்கு, இந்த மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும்' என, நடைமுறை உள்ளது. அதற்கு, வியாதிகளின் பட்டியல் மற்றும் மருத்துவமனைகளின் பட்டியல் உள்ளது. அதன் அடிப்படையில், குறிப்பிட்ட வியாதிக்கு, குறிப்பிட்ட மருத்துவமனைக்குச் சென்று தான், சிகிச்சை எடுக்க வேண்டும்.சிகிச்சைக்கு ஆகும் தொகையில், குறிப்பிட்ட சதவீத தொகையே தரப்படுகிறது; மொத்த சிகிச்சை செலவு தரப்படுவதில்லை. மீதமுள்ள தொகையை, நம் கையிலிருந்து தான் கொடுக்க வேண்டி இருக்கிறது.இது போல் தான், முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இது, எப்படி உள்ளது என்றால், 'நீ பொறி கொண்டு வா; நான், உமி கொண்டு வருகிறேன்; இருவரும், ஊதி ஊதி திங்கலாம்' என்ற சொலவடைக்குபொருத்தமாக உள்ளது.வாசகர் கடிதத்தில் குறிப்பிட்டபடி, முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின், 'நைட்டிங்கேல்' திட்டப்படி, அனைத்து மருத்துவ மனைகளிலும், அனைத்து வியாதிகளுக்கும், இலவசமாக சிகிச்சை பெற, அட்டை வழங்க வேண்டும். அனைவரும் பயனடைய, அரசு வழி வகுக்க வேண்டும்.அதனால், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு வருமானமும், அரசுக்கு புகழும் கிடைக்கும்!

உரிய தீர்வுகாணவேண்டும்!

சொ.இந்திரா, சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'வந்தாரை வாழ வைக்கும் தலைநகரம், சென்னை' என்ற சொல், இன்று தலைகீழாகி விட்டது.சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய பணித்தன. பிரபல ஓட்டல்களில், மதிய உணவு ஏற்பாடு செய்ய இயலாத நிலை ஏற்பட்டது.பல மாவட்டங்களில், அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் பணியாற்றிய, வெளி மாநில கட்டுமான தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 'தண்ணீர் பஞ்சத்துக்கு, அரசு அதிகாரிகளே காரணம்' எனக் கூறும் 'நெட்டிசன்'கள் பதிவிட்ட செய்திகள், ஊடகங்களில் வெளியாகின.சென்னை தலைமையகத்தில், அமைச்சர் வேலுமணி, அரசு அதிகாரிகளுடன் மேற்கொண்ட ஆய்வுக் கூட்டத்தில், 'தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு பெரிதுபடுத்தப்படுகிறது. இது, ஒரு மாயை; ஊடகங்கள் தான், இதை ஊதி பெரிதாக்குகின்றன' என்றார்.கடந்த, ௨௦௧௫ல், தமிழகத்தின், பெரும்பாலான கடலோர மாவட்டங்களை, தாக்கிய புயல் மற்றும் கன மழையால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தமிழக மக்கள், சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகியதுடன், புயலால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய நெடு நாள் ஆனது.புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை, 422 பேர். தமிழகமே தத்தளித்த வரலாறு, மறைக்கக் கூடியது இல்லை.அப்போதே, 'வரும் முன் காப்போம்' பாணியில், தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஆறுகள் போன்றவற்றின், ஆக்ரமிப்புகளை அகற்றி இருந்தால், இது போன்ற இழப்புகளைத் தவிர்த்து இருக்கலாம்.தற்போது, ஏரி, குளங்கள் வறண்ட பாலைவனமாகக் காட்சி அளிக்கக்கூடிய அவல நிலை உள்ளது. குடிக்கக்கூட தண்ணீர் இன்றி, தமிழக மக்கள் காலி குடங்களுடன் அலைகின்றனர்.அ.தி.முக., இரட்டை தலைமை, ஒற்றை தலைமை பிரச்னைகளை ஒதுக்கி, மக்களின் தாகம் தணிய, அரசு அதிகாரிகளுடன் இணைந்து, தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு, உரிய தீர்வு காண வேண்டும்!

தண்ணீர் பிரச்னைசுமுகமாகதீரட்டும்!

ஜெ.கஜேந்திரன், மணிமங்கலம், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தண்ணீர் தட்டுப்பாடு குறித்தும், நிலம் ஆக்ரமிப்பு குறித்தும், அதிக அக்கறை காட்டுவது, 'தினமலர்' நாளிதழ் மட்டும் தான்.நில ஆக்கிரமிப்பை அகற்றுவதில், பல சிக்கல்கள் உள்ளன. பொதுப்பணி, வருவாய் மற்றும் காவல் துறை ஒருங்கிணைந்து செயல்படுவதில்லை. ஒன்றை ஒன்று, கையை காட்டி, தப்பித்துக் கொள்கின்றன. இதனால், ஆக்ரமிப்புகளை அகற்ற, காலதாமதமும், இயலாமையும் ஏற்படுகிறது.எவ்வளவு விலை என்றாலும், தண்ணீரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய, பெரிய ஏரிகள் அனைத்தும், வறண்டு கிடக்கின்றன. சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருதி, புறநகர் பகுதியில் இருந்து, லாரிகள் மூலம், குடிநீர் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதில் சிலர், பெருத்த லாபம் அடைகின்றனர்.விவசாய கிணற்றில் இருந்து, தண்ணீர் எடுக்கப்பட்டு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, அரசு அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவால், லாரிகள், சென்னையை நோக்கி படையெடுக்கின்றன.பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில், தண்ணீரை தாராளமாக விற்பனை செய்து வருகின்றனர்.கல்குவாரியில் தண்ணீர் கிடைப்பதால், சட்ட விரோதமாக சிலர், மின் மோட்டார் மூலம் எடுக்கின்றனர். அதை லாரிகள் மூலம், எடுத்துச் சென்று, ௩,000 ரூபாய் வரை, விற்பனை செய்கின்றனர்.தண்ணீர் தட்டுப்பாட்டால், தங்கத்தை விட தண்ணீரை, மிக அதிக விலை கொடுத்து வாங்கும் கட்டாயம் எழுந்துள்ளது.ஒரு விவசாயி, தன் கிணற்றிலிருந்து, ஐந்து லாரிகளுக்கு தண்ணீர் விட்டால் போதும்; தினமும் அதிகளவில் வருமானம் பார்த்து விடலாம்.ஓட்டல்களின் அன்றாட குடிநீர் தேவைக்கும், தொழிற்சாலைகளின் குடிநீர் தேவைக்கும், இதுபோன்ற லாரிகள் மூலம், தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. தண்ணீரை இறக்கியுவுடன், கை மேல் பணம் வந்து விடுகிறது.அனுமதியின்றி தண்ணீர் எடுப்பது குறித்து, சம்பந்தப்பட்ட அரசு துறையிடம் கேட்டதற்கு, 'மக்களின் தாகம் தீரட்டும்; பிறகு பார்க்கலாம்' என கூறுகின்றனர்.'முறையாக அனுமதியுடன் எடுத்துச் செல்லும் தண்ணீருக்கு, எவ்வளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?' என கேட்டால், அதிகாரிகள் தகவல் தர மறுக்கின்றனர்.அரசுக்கும், இந்த விஷயத்தில் என்ன செய்வது என்று, தெரியவில்லை. நடப்பது நடக்கட்டும்; தண்ணீர் பிரச்னை சுமுகமாக தீரட்டும்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • karutthu - nainital,இந்தியா

    குளிர்பான நிறுவனங்களுக்கு ( கோக்கோகோலா போன்ற நிறுவனங்களுக்கு) தண்ணீர் எடுக்கக்கூடாது என ஆணை இடவேண்டும் .விவசாயத்திற்கும் ,வீடுகளுக்கும் மட்டுமே தண்ணீர் தரவேண்டும் .சில கட்சிகள் விளம்பரத்திற்காக காலி குடங்களை வைத்து ஆளும்கட்சிக்கெதிராக தர்ணா பண்ணவைத்து பணத்திற்கு பதிலாக தண்ணீர் கொடுப்பதாக செய்திகள் வருகிறது இதையும் விசாரிக்கவேண்டும் .

  • venkat Iyer - nagai,இந்தியா

    திரு.கஜேந்திரன் அவர்கள் கூறுவது போல நீர்நிலைகள் அனைத்தும் பட்டா வில் உள்ளவற்றை புறம்போக்கில் வைத்துவிட்டனர்.இதனால் பொதுமக்கள் ஆக்கிரமிப்பாளரிடம் சண்டை போட முடியவில்லை. பல் துறை அரசு அலுவலர்களும் இதில் முன்னின்று சரியான பாதுகாப்பு கிடைக்காத நிலையில் அகற்ற பயப்படுகின்றனர்.இதற்கு,நீதி மன்றம் மூலம் ஆக்கிரமிப்பு செய்த நபரின் வீட்டுக்கு,மின் இணைப்பு,ரேஷன் கார்டு,குடி நீர் இணைப்பு போன்றவற்றை நீக்க வேண்டும்.ஊரில் அந்த நபருக்கு புறம்போக்கு என்ற பெயரை வைக்க வேண்டும்.

  • venkat Iyer - nagai,இந்தியா

    ஐயா நைட்டிங்கேல் இன்சுரன்ஸ் திட்டத்தினைப்பற்றி தெரிவித்திருந்தார். இப்போது ஐ.டி நிறுவனங்களில் இருபத்தைந்தாயிரம் ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்துக்கு ,பல தனியார் இன்சுரன்ஸ் நிறுவனங்கள் ,போட்டி போட்டுக் கொண்டு ரூபாய் எட்டாயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கு பணமில்லா மருத்துவம் என்ற பெயரில் மருத்துவ காப்பீடு அளிக்கின்றது.அதில் குறிப்பிட வேண்டிய அம்சம் என்னவென்றால்,குடும்ப உறுப்பினர் ஐந்து பேருக்கு மருத்துவ பாதுகாப்பு கொடுக்கும் நிலையில்,நீங்கள் அவசரகால சிகிச்சையில் மருத்துவம் பார்க்கும் நிலையில் மட்டும்தான் இது சாத்தியப்படும்.உங்களுக்கு உடல்நிலை மிக மோசமாக இருக்க வேண்டும் என்பதுதான் வேடிக்கை. மேலும் மருத்துவமனை வார்டில் மூன்று நாட்கள் குறைந்த பட்சம் தங்கி மருத்துவம் பார்க்க வேண்டும்.போதிய நோயாளிகள் வார்டில் இல்லாவிட்டால் ,உங்கள் வார்டு அனுமதி பத்து அல்லது பதினைந்து நாட்கள் நீட்டிக்கப்படும். இதில் உங்களிடம் முப்பதாயிரம் முன்பணம் கேட்பார்கள்ர்கள்.இந்த முன் தொகையை கொடுக்காதவாறு , மருத்து இல்லா பொருட்கள் Non para Medical வாங்கியதாக கணக்கில் வைத்து ஈடு செய்துவிடுவார்கள்.முன்பணத்தில் ஆயிரம் ரூபாயாவது நேர்மையாக செய்தது போல பில் போட்டு கொடுப்பார்கள்.முதல் நாள் மட்டும் பல துறை மருத்துவர்கள் ,நமது நோயாளிக்கு தேவை இல்லை என்றாலும்,பெயருக்கு வார்டு உள்ளே வந்து கையை பிடித்து பல்ஸ் பார்த்துவிட்டு ,நோயாளியின் உறவினரை விஜாரித்துவிட்டு ஒரு சிரிப்பையும் ஆறுதலுக்கு செய்துவிட்டு செல்வார். அதற்கு பின்னனி யில் நாம் இவருக்கு ரூபாய் ஆயிரத்து இருநூறு செலுத்த போகின்றோம் என்பதை பின்னர்தான் உணர முடியும்.பின்னர் பல துறை மருத்துவர்கள் வந்ததாக செவிலியர்கள் பாதுகாத்து வைத்திருக்கும் பதிவேட்டில்,நோயாளியை பார்த்து சென்றதாக கையெழுத்து மட்டும் இட்டு செல்வார்கள்.இந்த கையெழுத்துக்கு நாம் என்னூறு முதல் ஆயிரத்துக்கு மேல் இறுதியில் தயாராகும். நாம் நினைத்திருப்போம்,நாம் வெளியில் வந்த போது இவர்கள் வந்திருப்பார்கள் என்று நினைத்திருப்போம்.நோயாளியை நாம் கேட்டால்,நான் தூங்கி கொண்டிருந்தபோது வந்திருக்கலாம் என்று கூறுவார்கள். நமக்கு உரிய இன்சுரன்ஸ் தொகையை முடிவு செய்து மருத்துவர்கள் கூறியதை அங்கு பணிபுரியும் இன்சுரன்ஸ் ஊழியர் பத்து சதவீதம் குறைந்து தொடர்பு அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து 48 மணி நேரத்திற்கு பின்னர்தான் அனுமதி கொடுப்பார்கள்.நமக்கு தங்கும் ஏ.சி அறையாவது இன்சுரன்ஸ் திட்டத்தில் மிஞ்சுகிறதே என்று நினைப்போம்.ஆனால் தங்கிய பத்து நாட்களில் பல் துறை மருத்துவர்கள் வந்த செலவும் செவிலியர்கள் கூட இருந்து பார்த்த செலவினை மும் எழுபத்தைந்தாயிரம் கொண்டு கணக்கினை காண்பித்து விடுகின்றன.இன்சுரன்ஸ் மனித உயிர் பாதுகாப்பு திட்டத்தில் மத்திய அரசின் மருத்துவ துறை மேலும் சிறப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்னைக் கேட்டால் ,அரசு மருத்துவமனைகள் மட்டும் இன்சுரன்ஸ் திட்டத்தினை நடத்த வேண்டும் என்று கொண்டு வந்தால் ,அரசுக்கு கூடுதலான நிதிகள் கிடைக்கும் நிலையில் , அரசு மருத்துவமனைகள் சிறப்பாக இயங்க வாய்ப்பு உள்ளது என்பதை முன் வைக்கின்றேன்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement