Advertisement

அந்த 38 பேருக்கு

நாட்டின் 17 வது லோக்சபாவின் எம்.பி.,க்களாக தமிழகத்தின் தி.மு.க.,- -காங்., கூட்டணியின் 37, பிளஸ் அ.தி.மு.க.,வின் 1 என 38 உறுப்பினர்களும் பதவியேற்றுள்ளனர். தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க, புரட்சி தலைவி வாழ்க, ராஜிவ் வாழ்க, தளபதி வாழ்க என்றெல்லாம் இதுவரை இல்லாதவாறு கோஷமிட்டு பொறுப்பேற்றனர். இது உணர்வு ரீதியானது... தவறேதுமில்லை! தமிழ்நாடு என்றும் தனித்தன்மையானது என்பதை பொறுப்பேற்பதிலும் காட்டியுள்ளனர் நமது எம்.பி.,க்கள்.

இனி ஐந்தாண்டுகளுக்கு நாட்டிற்கு நீங்கள் தான் எங்கள் பிரதிநிதிகள். உங்களிடம் எங்கள் எதிர்பார்ப்புகள் ஏராளம்.'பிரமாண்ட பலத்துடன் பா.ஜ.,வின் ஆட்சி நடக்கிறது; நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கிறோம்... பா.ஜ., எங்களையும், பொதுவாக தமிழகத்தையும் புறக்கணிக்கிறது' என்றெல்லாம் கூறி நீங்கள் தப்பிக்க முயற்சிக்க கூடாது. 'எதிர்க்கட்சிகள் எண்ணிக்கையில் குறைவு என்றாலும், அவர்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் மதிப்பளிக்கப்படும்' என்று பிரதமர் மோடி கூறிவிட்டார். அதிலும் லோக்சபாவில் பா.ஜ.,-காங்கிரசிற்கு அடுத்தப்படியாக பெரிய கட்சியாக தி.மு.க., இடம்பெற்றுள்ளது. மொத்தமுள்ள எதிர்க்கட்சி எம்.பி.,க்களில் அதிக சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். எனவே லோக்சபாவில் பேசுவதற்கு அதிக நேரம் கிடைக்கும்; அதனை எல்லாம் முழுவதுமாக பயன்படுத்தி தமிழகத்தின் எதிர்காலத்தை வளமாக்கும் திட்டங்களை கொண்டு வாருங்கள் என்பதே எங்கள் கோரிக்கை.
தவிக்கும் சென்னை
நாட்டின் நான்கு பெரிய மெட்ரோ நகரங்களில் ஒன்றான, தமிழக தலைநகர் சென்னை தண்ணீரின்றி தவிக்கிறது என்பது உலகறிந்த விஷயம். தமிழகம் என்றால் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும்; தண்ணீருக்கு பிற மாநிலங்களில் கையேந்தி நிற்கும் மாநிலம் என்ற பெயரை மாற்ற இனியாவது திட்டமிடுங்கள். வரும் 2024க்குள், அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற புரட்சிகரமான அறிவிப்பை, பொறுப்பேற்றதும் பிரதமர் மோடி வெளியிட்டார். அந்த திட்டத்தின் அத்தனை பயன்களும் முதலிலேயே தமிழகம் பெற்றுவிட பாடுபடுங்கள்.நதிநீர் இணைப்பிற்கு குரல் கொடுங்கள்; அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவை சேர்ந்த உங்கள் கூட்டணி எம்.பி.,க் கள் கை, காலை பிடித்தாவது, தண்ணீர் பங்கீடு விஷயத்தில் முரண்டு பிடித்து,பிடிவாதம் காட்டாமல், தமிழக விவசாயிகள் நலன் கருதி தாராளம் காட்ட சொல்லுங்கள். அது தமிழகத்தின் உரிமையும் கூட என்று உரக்கச் சொல்லுங்கள்.
தொழில் வளர்ச்சி இல்லை
வட கிழக்கு மாநிலங்கள் போல, தமிழகத்திலும் ரயில்வசதி எட்டாத நகரங்களும், கிராமங்களும் இருக்கின்றன. ரயில் நிலையங்கள் இருந்தும், போக்குவரத்து போதுமானதாக இல்லை. சென்னை தவிர பிற விமான நிலையங்கள் மேம்படவில்லை. கடந்த இருபதாண்டுகளில் மத்திய அரசின் பெரிய தொழிற்சாலைகள் ஏதும் தமிழகத்திற்கு வரவில்லை; தனியார் தொழிற்சாலைகள் துவங்க எந்த எம்.பி.,யும் ஊக்கமளிக்கவில்லை.குஜராத்தின் சூரத் போல திருப்பூர் வளரவில்லை; ஆந்திராவின் விசாகப்பட்டினம் போல துாத்துக்குடி வளரவில்லை.நெல்லிற்கும், கரும்பிற்கும் கோதுமை போன்று, உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். கடந்த மோடி அரசின் பல திட்டங்கள், உ.பி.,- குஜராத் -பீகார் போல தமிழகத்தை எட்டவில்லை. ஏன் இந்த வேறுபாடு என்று இனியேனும் ஓட்டளித்த மக்களுக்காக சிந்தியுங்கள்!
எம்.பி., நிதியை பயன்படுத்துங்கள்
உங்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதியாக ஆண்டிற்கு 5 கோடி ரூபாய் கிடைக்கும்; அதாவது 5 ஆண்டுகளில் 25 கோடி கிடைக்கும். கடந்த முறை பல எம்.பி.,க்கள் அந்த தொகையை முழுவதுமாக பயன்படுத்தாமல், திருப்பி அனுப்பிய சோகம் நடந்தது. இந்த 25 கோடியை எப்படி உருப்படியாக, மக்களுக்கு பயன்படுத்துவது என திட்டமிடுங்கள்.வெறுமனே நிழற்குடை அமைப்பது, ரவுண்டானா அமைப்பது, எம்.பி., அலுவலகம் கட்டுவது, பொதுகழிப்பறை கட்டுவது, தரமற்ற சாலை அமைப்பது என்று நிதியை வீணாக்காமல், அரசு பள்ளிகளுக்கு கட்டடம் கட்டி தாருங்கள்; ஊருக்கு ஒரு நுாலகம் அமையுங்கள். கமிஷன் கிடைக்கும் பணிகளை தேர்வு செய்யாமல், கல்வி வளர்ச்சிக்கு ஒதுக்கினீர்கள் என்றால் வருங்கால சந்ததி வாழ்த்தும். கேரளாவில் எம்.பி.,க்கள் தங்கள் நிதியில் அதிகம் கல்விக்கு தான் செலவழிக்கின்றனர். பெயருக்கு கால்வாய்களை துார்வார நிதி ஒதுக்காமல், நீராதாரங்களை பெருக்க கண்மாய், குளங்களை துார்வார, நிரந்தர குடிநீர் திட்டங்களை உருவாக்க, நிதி தாருங்கள்.
மக்கள் விரும்பியான எம்.பி.,
உங்களில் யாரும் கடந்த முறை எம்.பி.,யாக இருந்தவர் இல்லை; அதாவது தொடர்ச்சியாக எம்.பி., யாக இருந்து இந்த முறை தேர்வாகவில்லை. பலர் புதுமுகங்கள். பலர் முன்பு எம்.பி.,யாக இருந்தவர்கள். கடந்த முறை வென்ற சிலர் இம்முறை போட்டியிட்ட போதும், ஒருவர் கூட ஏன் ஜெயிக்கவில்லை; அரசியல் காரணங்கள் இருந்தாலும், தொகுதிக்கே செல்லாதது, வளர்ச்சிப்பணிகள் செய்யாததும் சிலரது தோல்விக்கு காரணம். கேரளாவில் பலர் தொடர்ச்சியாக இந்த முறையும் வென்று வந்திருக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு, தொகுதியை தங்கள் 'கைக்குள்' வைத்திருப்பதே. அதே போன்று கட்சி, கூட்டணிகளுக்கு அப்பாற்பட்டு 'மக்கள் விரும்பிய' ஜெயிக்கும் எம்.பி.,க்களை தமிழகம் பார்க்க வேண்டும். அதற்கு முதலில் நீங்கள் அடிக்கடி தொகுதிக்கு வர வேண்டும்.
மக்களுக்காக பேசுங்கள்
ஓட்டளித்த மக்களை மனதில் வைத்து லோக்சபாவில் பேசுங்கள். உங்கள் தலைவர்களை துதிபாடி பேசுவதிலும், அரசியல் ரீதியாக விதண்டாவாதம் புரிவதிலும் நேரத்தை செலவழிக்காமல் தமிழர், தமிழக நலனுக்காக பேசுங்கள். 'தமிழ் வாழ்க' என்று உங்களில் சிலர் பேசிவிட்டு, அடுத்த நிமிடம் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டதை யாரும் மறக்கவில்லை. உங்கள் ஒவ்வொரு அசைவையும் இந்த சமூகம், அசை போடுகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.லோக்சபாவில் ஆஜராகி விட்டு, சலுகை கேண்டீனில் சாப்பிட்டு திரும்பும் எம்.பி., அல்ல; தமிழகத்திற்காக சத்தமிட்டு சாதிக்கும் எம்.பி.,யே எங்களுக்கு தேவை. அதனை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறோம். வாழ்த்துக்கள்...மக்கள் பிரதிநிதிகளே!
நிறைவாக இரண்டு கொசுறு கோரிக்கைகள்...1. நீங்கள் பதவியேற்கும் போது, 'பாஸ்' வாங்கி உங்கள் உறவினர்களை லோக்சபாவிற்கு அழைத்து போனீர்கள். அதே நேரத்தில், உங்களுக்காக எந்த பலனும் எதிர்பாராமல் தேர்தலில் கொடிபிடித்து உழைத்த அந்த 'கடைசி' தொண்டனையும், இனி வரும் ஐந்தாண்டுகளில் ஒரு முறை அழைத்து சென்று, லோக்சபாவை சுற்றிக்காட்டுங்கள்.*பயங்கரவாதம் விளையாடும் காஷ்மீரில் கூட தேர்தல் நடந்து விட்டது; பணம் விளையாடிய வேலுாரில் தேர்தல் நின்று போனது. உங்கள் கட்சிகளில் யாரோ காட்டிய 'வேலைக்கு' வேலுார் மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களுக்கும் ஒரு மக்கள் பிரதிநிதி வேண்டாமா. அங்கு தேர்தல் நடத்த குரல் கொடுங்கள்.
-ஜி.வி.ரமேஷ் குமார்பத்திரிகையாளர்rameshkumargv@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement