Advertisement

வளர்ச்சி எப்போது, எப்படி வரும்?

பார்லிமென்ட் துவங்கி, அதற்குப் பின் மத்திய பட்ஜெட் தாக்கல் என்ற சம்பிரதாயம் நடக்கும் முன், மோடி ஆட்சியின் துவக்கத்தில், மொத்த வளர்ச்சி குன்றியிருக்கிறது என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது.

லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் கூட, 'மோடி ஆட்சியில் வளர்ச்சி இல்லை; வேலைவாய்ப்பு இல்லை' என்ற புகாரை, காங்கிரஸ் தலைவர் ராகுல், ஆவேசமாக தெரிவித்தார்.ஆனால், மோடி மற்றும் அக்கட்சித் தலைவர் அமித் ஷா பெற்ற வெற்றி, அசாதாரணமானது. இந்த இருவரும், கூட்டாக சேர்ந்து ஏற்படுத்திய அரசியல் உத்தி, சிறப்பானது என்பதை இப்போது, மீடியாக்கள் வரிந்து கட்டி புகழ்கின்றன.பா.ஜ.,வில், 11 கோடி உறுப்பினர்கள் உள்ளனர் என்ற தகவலும், அதன் தலைவரான ராம் மாதவ், மோடியை, 'லஞ்சமற்ற தலைவர்' என்றும், 'லஞ்சம் என்ற சிந்தனை, அவரை அணுகக் கூட முடியாது' என்றும் வர்ணித்திருப்பது, மக்கள் அளித்த அமோக ஆதரவின் காரணமாக கூட இருக்கலாம்.

அவை எல்லாம் ஒரு புறம் இருக்க, மோடி அரசின் பொருளாதார ஆலோசகராக முன்பு இருந்த அரவிந்த் சுப்ரமணியம், 'இப்போது மோடி ஆட்சிக் காலத்தின் மொத்த வளர்ச்சி, 4.5 சதவீதம் மட்டுமே. அதற்கு முன்பு இருந்த, மன்மோகன் காலத்திலும், குறைந்த வளர்ச்சியே காணப்பட்டது' என்ற கருத்தைக் கூறி இருக்கிறார். அது, விவாதத்திற்குரிய விஷயமாகி இருக்கிறது.இனி இதற்கு, நிதித்துறை அல்லது அரசு வெளியிடும் பொருளாதார சர்வே பதிலளிக்கலாம். எவையெல்லாம் மொத்த வளர்ச்சி என்பதில் உள்ள அணுகுமுறை, அதற்கு சேகரிக்கப்படும் தகவல் ஆதாரங்களில், மாறுபட்ட கருத்துக்கள், இப்போது வெளிப்படையாகி இருக்கிறது.

அப்படி எனில், அரசு தகவல் தொகுப்பு, அதன் புள்ளி விபரங்களை, தனியாக, சுயேச்சையாக அளவீடு செய்யும் மறு பரிசோதனை அமைப்பு, இனி தேவையா என்ற கருத்து, இதனால் எழுந்திருக்கிறது.போதாக்குறைக்கு அமெரிக்க - சீன வர்த்தகப் போர், இரு நாடுகளுக்கு இடையே, உலக வர்த்தக அமைப்பு கொள்கையில் ஏற்படுத்தப்படும் சில மாற்று நடவடிக்கைகள் ஆகியவையும், சர்ச்சையை கிளப்புகின்றன. இவற்றை பரிசீலிக்க, முதலில், மிகப்பெரும் பொருளாதார அறிஞர்கள் அடங்கிய கட்டமைப்பின் செயலாக்கம் அவசியமாகிறது.இந்திய தொழில் துறை கூட்டமைப்பு கூட, அரவிந்த் சுப்ரமணியத்தின் கருத்தை, முழுவதுமாக ஏற்கவில்லை. ஆகவே மோடி அரசின் இப்பதவிக்காலம் எதை எல்லாம் சீராக்க, என்ன முயற்சி எடுக்கும் என்பதை, இன்று யூகிக்க தேவையில்லை.

ஆனால், நல்ல வேளையாக, சுகாதார நலம், திறன் வளர்க்கும் கல்வித் திட்டம், விவசாயிகள் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை, முதல்கட்டமாக அணுகப் போவதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்.கடன் வழங்குவதில், வங்கிகளின் தவறான பண வினியோக அணுகுமுறை காரணமாக ஏற்பட்ட பிரச்னைகளை தீர்க்க, முதல்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும், வளர்ச்சியை அதிகரிக்கும், சிறு குறு நிறுவனங்களுக்கு, பொதுத்துறை வங்கிகள் அளிக்கும் நிதி, எந்த அடிப்படையில், புதிய அணுகுமுறையில் இருக்கும் என்பதை, பட்ஜெட் விளக்கலாம்.அதை விட, மாநிலங்களுக்கு நிதி கமிஷன் அளிக்கும் நிதி, எந்த விதமான ஊக்குவிப்புகளைத் தரும்; அதில் வளர்ச்சித் திட்டங்கள், காலக்கெடுவுடன் கூடிய முடிவுகள், எவ்வித பாரபட்சமும் இன்றி இருக்க என்ன வழிகாட்டப் போகிறார் நிதியமைச்சர் என்பதும் அடுத்த கேள்வியாகும்.'இ - கவர்னன்ஸ்' என்ற தொழில்நுட்ப அடிப்படையில், எல்லா அணுகுமுறைகளும் அமையும் என்ற மோடியின் முதல் ஐந்தாண்டு ஆட்சி, இத்துறையில் இந்தியாவை, உலக நாடுகளின் வரிசையில், 98வது இடத்தை பிடிக்கச் செய்திருக்கிறது; இது வளர்ச்சியின் அடையாளம்.

இதையும், வேலைவாய்ப்பு எண்ணிக்கையையும் ஒப்பிடுவதை விட, தகவல் தொழில் நுட்பத்தில் சீரான அணுகுமுறை, அதனால், தவறான புள்ளி விபரங்கள் என்ற அடிப்படை பிரச்னைகள் குறைதல் மற்றும் வளர்ச்சிக்கான ஆதாரங்களில் முன்னேற்றத்தை அளவிடுவதில் ஒழுங்குமுறை வரும். இது கூட வேலைவாய்ப்பை உருவாக்குகிற தொழில்களை, எளிதாக அடையாளப்படுத்தும்.இனி, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும் பொருளாதார அல்லது வளர்ச்சி சம்பந்தமான திட்டங்களை, இந்த அரசு எப்படி அணுகும்; அதன் விவாத முடிவுகள் சட்டமாகும் போது, எந்த அடிப்படையில், 'கூட்டுறவு பெடரலிச தத்துவம்' நீடிக்கும் என்பது, எளிதாக அளவிடப்படும்.இவை அனைத்தும், அரசியல் அடிப்படை விமர்சனங்களைத் தாண்டி, மக்கள் எளிதாக ஆட்சியை புரிந்து கொள்ள உதவலாம். எதிர்க்கட்சிகளும் தனிப்பட்ட விமர்சனங்களை குறைத்து, இதில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் வரலாம்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement