Advertisement

தமிழிசையே தரணியில் முதல் இசை ஜூன் 21 - உலக இசை தினம்

உலகிற்கே முதன்மொழியான தமிழ் இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளில் புலவர்களாலும், மன்னர்களாலும் ஆலயங்களில் போற்றி வளர்க்கப்பட்டது. அக்காலம் தொட்டு சமூக கலாசார பண்புகளை வளர்ப்பதில் ஆலயங்கள் பெரும்பங்கு வகித்தன.இசையே இனிமையானது, இனிமையுடன் கூடிய வழிபாடு என்றென்றும் நல்ல பலனைத் தரும் என்பதை நன்கு உணர்ந்த நல்லோர் இறைவனை இசையால் மகிழ்விக்க பூமாலையுடன் பாமாலையும் சூட்டினார்கள்.இசை என்னும் சொல் இசைவிப்பது, மனங்களைத் தன் வயப்படுத்துவது என்பது பொருளாகும். பழந்தமிழ் இசைக்கலை மனிதனுடைய உள்ளத்தை ஒருமைப்படுத்தி, இன்பமும் மன அமைதியினையும் தரக்கூடிய இனிய கலையாகும். சங்க காலத்தில் இதயத்தைத் தொடக்கூடிய பண்ணிசையும் அதற்கு இனிமை கூட்டக்கூடிய இசைக்கருவிகள் பலவும் மக்கள் வாழ்வோடு ஒன்றாக இணைந்து இருந்தன என்பதனை தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற இலக்கியங்கள் வாயிலாகவும் அறிகிறோம்.

ஏழிசை இறைவன்இறைவன் பாடலுக்கு இயங்கும் பண்பினன். அதனால் அவனை ஏழிசையாய் இசைப்பயனாய் கண்டு அடியார்கள் புகழ்ந்து பாடி, பேசி, ஆடி அகம் மகிழ்ந்து வேண்டினர். அவன் அருளைப் பெற்றவர்களான நாயன்மார்கள், திருவருளே இவர்களை உள்ளிருந்து பாடுவித்து மகிழ்ந்து மயக்கியதாக கூறுகின்றனர். இதனை அப்பர் பெருமானின்பன்னிய செந்தமிழ்மாலை பாடுவித்து என்சிந்தை மயக்கறுத் திருவருளினன் - என்ற தேவாரப்பாடல் வரிகள் மூலம் அறியலாம்.இன்னிசைப் பாடல்கள் மூலம் சிவமாகிய செந்நெறி பரப்பிய ஞானசம்பந்தப் பெருமானுக்குப் பொன் தாளங்கள் அளித்து மகிழ்ந்தவன் இறைவன்.தமிழில் பரிபாடல் இசைப்பாவினால் ஆனது. நமக்குக் கிடைத்துள்ள 22 பரிபாடல்களுக்கும் பண்ணமைத்தவர்கள் பாணர் என்னும் பிரிவினரென்பதை அப்பாடல்களே விளக்குகின்றன. இறையனார் அகப்பொருள் என்னும் நுாலின் மூலம் முதற்சங்க காலத்திலேயே முதுநாரை, முது குருகு என்ற இசைத்தமிழ் நுால்கள் இருந்தனவென்பதை அறிகிறோம்.

உணர்வுக்கு வடிகால்சிலப்பதிகாரத்தின் கானல் வரி மூலம் இசையானது மனித உணர்வுக்கோர் வடிகால் என்பதை உணர்த்துகையில், திருஞானசம்பந்தர் ஒரு சைவ சமயக்குழந்தை மட்டுமில்லாமல் பாடல் புனையும் ஆற்றலுடன் பாடும் ஆற்றலும் கொண்டவர் என்பதையும் அவருடைய திருமுறைகள் மூலம் உணரலாம். பெருங்கதையில் நிரை நரம்பு என்றும், சிந்தாமணியில் குறை நரம்பு என்றும் கூறப்படுதல் மூலம் பண் அமைப்புத் தன்மையை தமிழர் உணர்ந்திருந்தனர் என்பது தெளிவு. 15ம் நுாற்றாண்டுக்குப் பின்னரே ஐரோப்பா போன்ற நாடுகளில் இசைப்பற்றிய செய்திகளைப் பெறத் தொடங்கினர். ஆனால் 7-ம் நுாற்றாண்டில் தமிழகம் முழுவதும் ஒழுங்குப்படுத்தப்பட்ட இசையை தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பது வரலாறு.சோழ மாமன்னர் குலோத்துங்கன் இசை விற்பன்னன் என்பதை கலிங்கத்துப் பரணி உணர்த்துகிறது. பாணரின் இசையில் பிழைகண்டு சொல்லுமளவிற்கு ஆற்றல் படைத்தவர், முதலாம் குலோத்துங்கனின் மனைவி ஏழிசை வல்லபி என்பதன் மூலம் அவரது இசைப்பற்றினை உணரலாம்.விக்கிரம சோழனின் ஆறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு மூலம் சிவ பிராமணன் என்பாருக்கு கோயிலில் வீணை வாசித்தலின் பொருட்டு வீணைக்காணி என்னும் நிலம் வழங்கப்பட்டமை தெளிவாகின்றது. அதுபோல் முதலாம் இராஜராஜன் காலத்தில் கோவிலில் நாற்பத்தேழு ஓதுவார்களை நிர்வகிக்க நிலம் தரப்பட்டதென ஒரு கல்வெட்டு கூறுகின்றது.

உள்ளம் உருக்கும்இசையாற்றலால் மனித மனத்தை மாற்றி எளிதில் வயப்படுத்தி இறை உணர்விற்கு வழி செலுத்த முடியும் என்பதை மதங்கள் உறுதியாக நம்புகின்றன. இத்தகைய இசை மக்களைக் கவரும் தன்மை உடையது என்பதனை அறிந்து, அதற்கு ஏற்றவாறு பாடல்களைப் பாடி தமிழிசையினை தேவார மூவர் வளர்த்துள்ளனர். திருமுறைப் பாடல்களில் யாப்பு நிலைகளைப் புதிய இசை வடிவங்களுடன் புதுப்பெயரிட்டு பாடல்களைப் படைத்து தமிழும், தமிழிசையும் சிறக்க உதவினர்.
பழந்தமிழ் மக்கள் பண்படுத்தி வகைப்படுத்தி வளப்படுத்திய இசை முறையை தமது உயர்வான இசை ஞானத்தால் மேலும் மெருகூட்டிய பெருமை ஞானசம்பந்தரைச் சாரும். தமிழர் இசைமுறை தனது அடிப்படை இலக்கணங்களையொட்டி புதிய பண்களைத் தோற்றுவிக்கும் தன்மையும் பெற்றது என்பதை யாழ்முரி என்னும் பதிகத்தைப்பாடி நிரூபித்தவர் ஞானசம்பந்தர்.கடவுளர் தோற்றத்தை வர்ணிக்கும் பொழுது கைகளில் இசைக்கருவிகள் இருந்தமையை குறிப்பிடுகின்றனர். சிவன் கையில் உடுக்கையும், கிருஷ்ணன் கையில் புல்லாங்குழலும், சரஸ்வதி கைகளில் வீணையும், நாரதர் கைகளில் தம்பூரா, தாளக்கட்டை ஆகிய இசைக்கருவிகளும் காணப்படுவது இசையின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.

மாசில்லா வீணை'
மாசில் வீணையும் மாலை மதியமும்வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்முசுவண்டறை பொய்கையும்போன்றதேஈசன் எந்தன் இணையடி நீழலே' என இறைவனின் பெருமையை மாசில்லா வீணைக்கு ஒப்பாகவே நாவுக்கரசர் கூறுவதும், பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் பெண் சுமந்த பாகத்தான் பெம்மன் பெருந்துறையான்' என்று இறைவனை மாணிக்கவாசகர் போற்றுவதும்,'ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடையதோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக்கு உடனாகி' - என்று இறைவன் தமக்குத் துணை நின்ற அருளின் திறத்தைச் சுந்தரர் போற்றுவதும் இசையின் பெருமையை உணர்ந்ததால்தான்.பாணர்கள் என்ற இனத்தினர் இசைக்கலையை வளர்த்தனர் என அறிய முடிகிறது. தங்கள் வறுமையின் காரணமாக அரசர், சிற்றரசர், செல்வந்தர் முதலியவர்களின் இல்லங்களுக்கு சென்று பாடல்கள் பாடிப் பரிசுகளைப் பெற்றனர். திருஞானசம்பந்தர் உடன் யாழ் வாசித்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் எனும் இசைக்கலைஞர் பிறந்த திருவெருக்கத்தம்புலியூர் என்ற ஊரில் பாணர் குலப் பெண்மணி தேவாரத் திருமுறைகளுக்குப் பண் அமைத்ததாகச் சொல்லப்படுகிறது.தமிழிசைஅருணகிரிநாதர் முருகனைப் போற்றிப் பாடியருளிய திருப்புகழ்ப் பாடல்கள் தமிழிசைக்கு உயிரூட்டியது. 90 வகை சந்தப் பாடல்களை அருணகிரி நாதர் பாடியுள்ளார். 17-ம் நுாற்றாண்டின் முற்பகுதியில் முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சலக்கவிராயர் மூவரும் சீர்காழியில் தோன்றி முதல்முதலாக தமிழில் கீர்த்தனை வடிவத்தை அறிமுகப்படுத்தினர்.
தொடர்ந்துவந்த கோபாலகிருஷ்ணபாரதியார், வேதநாயகம் பிள்ளை, வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், பாம்பனடிகள் ஆகியோரின் தமிழிசைப் பாடல்கள் சிறப்பு மிக்கவை. தாயுமான அடிகள், பட்டினத்தார், ராமலிங்க வள்ளலார் ஆகியோரும் அடுத்து வந்த பாரதியார், பாரதிதாசன், சுத்தானந்த பாரதியார், பாபநாசம் சிவன், நீலகண்ட சிவன், பெரியசாமி துாரன் போன்ற கவிஞர்கள் தமிழிசை வளர்ச்சிக்குப் பெரும் பங்கு ஆற்றியுள்ளனர். தமிழிசையின் வளர்ச்சிக்குச் செட்டிநாடு அரசர் அண்ணாமலை செட்டியார் அளித்த ஆதரவு பாராட்டுக்குரியது. இராஜா சர் அண்ணாமலை செட்டியாருக்கு இப்பணியில் பெரிதும் உதவியவர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் ஆவர்.இசை வல்லுநர் பாலமுரளி கிருஷ்ணா 'உலக இசைகள் அனைத்துமே நம்முடைய 72 மேளகர்த்தா ராகங்களில் அடக்கம், ஆங்கில இசையின் அத்தனைப் பகுதிகளுமே நம்முடைய சங்கராபரணத்தில் அடக்கம். அரேபிய நாட்டு இசைக்கு அஸ்திவாரம் நம்முடைய வகுளாபரணம். சீன நாட்டு இசை நம்முடைய மோகன ராகத்தின் விளைவு தான்' என்று தன் அனுபவ ஆராய்ச்சியின் விளைவாக கூறுகிறார். இங்ஙனம் உலக இசைக்கு மூத்த இசையாக விளங்குகிறது தமிழர் இசை. உலக இசை தினம் ஜூன் 21 ல் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.--முனைவர் தி.சுரேஷ் சிவன்செம்மொழி இசைத்தமிழ் அறிஞர், மதுரை94439 30540

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement