Advertisement

நாட்டு நாய்கள் தான் சிறந்தவை!

ஐ.டி., துறையில் பணிபுரிந்து, வசதிகளுடன் கூடிய, 'டாக் ஹவுஸ்' அமைத்து பராமரித்து வரும், கீர்த்தி: என் பெற்றோர், நாய் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் என்பதால், சிறுவயது முதலே, ஏழு, எட்டு நாய்களுடன் வளர்ந்தேன். வளர்ந்ததும் அவற்றுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமே, இந்த இல்லம் அமைக்க காரணம்.தங்கள் வீட்டு குழந்தையாகவே செல்லமாக நாய்களை வளர்ப்பவர்கள், வேலை காரணமாக வெளியூர் செல்ல நேரும்போது, அவற்றை, அன்புடன் பராமரிக்கும் எங்களிடம், விட்டு செல்வர். நாங்கள் பத்திரமாக பராமரித்து ஒப்படைப்போம்; இதற்கு கட்டணம் உண்டு.குளிரூட்டப்பட்ட பெரிய அறையில், படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. ஓடி விளையாட, விசாலமான இடமும், நீச்சல் குளமும் உண்டு. அவற்றுக்கான உணவை சமைத்துப் போட பணியாளர்களும், வீட்டிற்கே வந்து அழைத்து சென்று, திரும்ப கொண்டு விடும் வசதியும் உண்டு.நாய்க்குட்டிக்கு, ஆறாவது மாதத்தில், கண்டிப்பாக கருத்தடை செய்ய வேண்டும். கால்நடை மருத்துவர்கள் எங்கள் குழுவில் இருப்பதால், நாங்கள் அந்த அறுவை சிகிச்சையை செய்து, அதற்கு பின்பும் தேவைப்படும் கவனிப்பை அளித்து, உரியவர்களிடம் ஒப்படைப்போம்.நம் ஊரில் வளர்ப்பதற்கு, நாட்டு நாய்கள் தான் சிறந்தவை. தடுப்பூசி மட்டும் போட்டு, வேறு எந்த மருத்துவ செலவுகளும் இல்லாமல், தானாகவே சிறப்பாக வளரும். ஆனால், வேறு சீதோஷ்ண நிலையில் வளர்ந்த வெளிநாட்டு வகை நாய்களால், இங்கு தாக்குப் பிடிக்க முடிவதில்லை. அவற்றை கவனிக்க, சிறப்பு மருத்துவம் வேண்டும். செலவு அதிகம்; நாய்களுக்கும் கஷ்டம். இதைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம்.தெரு நாய்களுக்கென அனைத்து வசதிகளுடன், காப்பகம் ஏற்படுத்த வேண்டும். கண் பார்வையிழந்த, கால் நடக்க முடியாத, அடிபட்ட, வயதான நாய்களை அங்கு வைத்து, நல்ல உணவு, தடுப்பூசி மற்றும் மருத்துவ கவனிப்போடு பராமரிக்க வேண்டும். இதற்காகவே, நாய் இல்லத்தில் சம்பாதிப்பதை, சேமித்து வருகிறேன்.நாய்களுக்கு, மூன்று, நான்கு மாதத்திற்குள் தடுப்பூசிகளை கட்டாயம் போட வேண்டும். இது நாய்க்கும், நமக்கும் நல்லது. அவ்வப்போது பூச்சி மருந்து கொடுக்க வேண்டும்.நாம் உண்ணும் உணவையே, நாய்களுக்கும் கொடுப்பது தவறு. அதற்கென, இறைச்சி, நாய்களுக் கான உணவு என்று சிறப்பான உணவை அளிக்க வேண்டும். அப்போது தான் போதிய ஊட்டச்சத்து கிடைத்து, சரியாக வளரும்.வெயில் காலத்தில், வீட்டிற்குள், நிழலில் காற்றோட்ட வசதியோடு வைத்து கொள்ள வேண்டும். அவற்றுக்கும், 'சன் ஸ்ட்ரோக்' வரும் வாய்ப்புண்டு. எந்நேரமும் குடிக்க தண்ணீர் வைத்திருக்க வேண்டும். உண்ணிப் பூச்சி உடலின் மேற்புறத்தில் இருந்தால் காய்ச்சல் வரும் என்பதால், அது வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement