Advertisement

குழந்தையை ரசித்து மகிழுங்கள்!

பிரசவத்துக்கு பின், தாய் - சேய் பாதுகாப்பு குறித்து கூறும், மகப்பேறு மருத்துவர், ஜெயஸ்ரீ கஜராஜ்: சுகப்பிரசவமோ, சிசேரியனோ எதுவாக இருந்தாலும், முதலில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்து அது மார்பகத்தில் உறிஞ்சி குடிக்க குடிக்கத் தான் பால் சுரக்கும். பிறந்த முதல் ஆறு மணி நேரத்தில் சிலருக்கும், இன்னும் சில பேருக்கு, 48 மணி நேரமும் ஆகலாம்.

அவசரப்பட்டு, பார்முலா பால் கொடுத்தால், முதல் தாய்ப்பாலில் இருந்து குழந்தைக்கு கிடைக்கக்கூடிய எதிர்ப்பு சக்தி, குழந்தைக்கு கிடைக்காமல் போகும். இரண்டாவது, நேரத்தை பார்த்து குழந்தைக்கு பால் கொடுப்பதை தவிர்த்து, குழந்தை அழுதால் தாமதிக்காமல் தாய்ப்பால் கொடுக்கலாம்; தண்ணீர், பழச்சாறு எதுவும் கொடுக்க வேண்டாம். கர்ப்பப்பை சுருங்குவதால், தாய்க்கு அடிவயிற்றில் வலியும், சுகப்பிரசவமாக இருந்தாலும், பிறப்புறுப்பில் சிறியதாக கத்தரித்து தையல் போடும் நிர்ப்பந்தம் ஏற்படுவதால், அப்பகுதி யிலும், வலி இருக்கும்.

எவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குகிறோமோ, அந்த அளவுக்கு சீக்கிரம் ஆறிவிடும். அதேசமயம், சிசேரியன் செய்திருப்பவர்கள், வலி நிவாரணி மாத்திரையை, மருத்துவரிடம் கேட்டு சாப்பிடலாம். சிசேரியன் செய்தவர்கள், படுக்கையில் இருந்து ஒரு பக்கமாக திரும்பி, எதிர்ப்பக்க கையை ஊன்றி மெல்ல எழுந்தால், வயிற்றுக்கு அழுத்தம் ஏற்படாமல் இருக்கும். கழிவறைக்கும், எழுந்து நடந்து போகலாம். சுகப்பிரசவ தாய்க்கு, சாப்பாடு விஷயத்தில், எந்த நிபந்தனையும் இல்லை. சிசேரியனாக இருந்தால், 24 மணி நேரத்துக்கு திரவ உணவும், அதன்பின், ஆரோக்கியமான உணவும் சாப்பிடத் தொடங்கலாம்.

அதிக புரதச்சத்துள்ள சாப்பாடும், நிறைய தண்ணீரும், தாய்ப்பாலின் அளவு, தன்மை ஆகியவற்றை அதிகப்படுத்தும். அளவுக்கு அதிகமாக நெய் சேர்க்கக் கூடாது. சில குறிப்பிட்ட உணவுகளால், குழந்தைக்கு வாயு அல்லது வேறு உபாதை வரும் என்று நினைக்காமல், சுலபமாக ஜீரணமாகக் கூடிய சாப்பாட்டை சாப்பிடலாம். பிரசவத்துக்கு பின், நான்கைந்து வாரங்கள் வரை, ரத்தப்போக்கு இருக்கும். ஆனால், இடையில் ரத்தப்போக்கு அதிகமானால், மருத்துவரை அணுகலாம்.

படுத்தே இருக்காமல், எழுந்து நடமாடியபடி இருப்பது அவசியம். இல்லையெனில், கால் அல்லது மூளையில், ஒருவித ரத்த உறைவு ஏற்படும் வாய்ப்புள்ளது. விருந்தாளிகள் வந்திருந்தால், தாய்ப்பால் கொடுக்க கூச்சப்பட்டு, தாமதப்படுத்த கூடாது. குழந்தை துாங்கும் போது, தாயும் துாங்கி ஓய்வெடுக்கலாம். மருத்துவரின் அறிவுரைபடி, குழந்தை வளரும் ஒவ்வொரு கட்டத்தையும் ரசித்து மகிழுங்கள்.

விவசாயிகளுக்கு வழிகாட்ட தயார்!சிவகங்கை மாவட்டம், வேப்பங்குளம் ஊராட்சியில், சீமைக்கரு வேல மரங்கள் மண்டி கிடந்த நிலத்தில், நெல் சாகுபடி சாத்தியமானது குறித்து கூறும், தகவல் தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்த திருச்செல்வம்: ஒரு விவசாயி, தக்காளி சாகுபடி செய்தால், கிராமத்தில் உள்ள அனைவரும் அதையே சாகுபடி செய்கின்றனர்; சந்தையில் விலை கிடைப்பதில்லை. இதனால், விவசாயம் நஷ்டமான தொழிலாகவே இருக்கிறது.

நான், ஆந்திராவில் இருந்த சமயம், விவசாயிகளின் இந்த நிலையை மாற்றும் நோக்கில், தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ள நண்பர்கள் இணைந்து, குழு அமைத்து, விவசாய மேலாண்மை நிலையங்கள் அமைக்கும் திட்டத்தை உருவாக்கினோம். அப்போதைய ஆந்திர முதல்வர், ராஜசேகர -ரெட்டி, எங்கள் திட்டத்தில் உள்ள நன்மைகளை புரிந்து, கடப்பா மாவட்டத்தின், 30 கிராமங்களில், இந்த மையங்களை அமைத்து கொடுத்தார். இதனால், விவசாயிகளுக்கு, பெங்களூரு, சென்னை, கோவை மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் ஏற்றுமதி வாய்ப்பும், விளைபொருட்களுக்கு நல்ல விலையும், இரண்டரை ஆண்டுகள் கிடைத்தன.

ராஜசேகர ரெட்டி, விபத்தில் இறந்தவுடன், அதன் பிறகு வந்த அரசால், அது நிறுத்தப்பட்டது.அடுத்து, நம் மாநில விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய நினைத்தோம். தமிழக அரசிடம், எங்கள் திட்டத்தை சேர்க்க முயன்றும், சாத்தியமாகவில்லை. அதனால், என் சொந்த ஊரான வேப்பங்குளத்தில், கிராம மக்களை ஒருங்கிணைத்து, அவர்கள் பங்களிப்புடன், ௫ லட்சம் ரூபாயில் நான்கு குளங்களையும், 15 கி.மீ., துாரமுள்ள ஏழு கால்வாய்களையும் சரி செய்தோம்.அந்த பணி முடிந்த நிலையில் மழை பெய்தது. குளங்கள் முக்கால்வாசி நிறைந்தன. உற்சாகமான விவசாயிகள், சீமை கருவேல மரங்கள் மண்டிக் கிடந்த நிலங்களை சுத்தப்படுத்தி, உழவு செய்தனர்.

ஆழ்துளை கிணறு களில் நீராதாரம் அதிகரித்தது. 250 ஏக்கர் நிலத்திலும், நெல் சாகுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து விவசாய ஆலோசகர்கள், வேளாண் அதிகாரிகள் வாயிலாக, பயிர் பாதுகாப்பு, பூச்சி மற்றும் நோய்களுக்கான தீர்வு வழங்கப்பட்டது. சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் அறுவடை செய்தபோது, 1 ஏக்கருக்கு, 1.5 - 2 டன் வரை மகசூல் கிடைத்தது. அடுத்த அறுவடையின்போது, அரிசியாக விற்க திட்டமிட்டுள்ளோம்; வருமானமும் அதிகமாகும். ஒவ்வொரு கிராமத்திலும், மக்களே தங்கள் நீராதாரங்களை சரி செய்து விவசாயம் செய்தால், சிறப்பாக விளைவிக்கலாம்.

விவசாயிகளுக்கு தங்கள் விளைபொருளின் மதிப்பை தெரிந்து கொள்ள வழிகாட்டும் செயல் திட்டங்கள், எங்களிடம் இருக்கின்றன. அவற்றை அரசுக்குக் கொடுக்க தயாராக இருக்கிறோம்.-தொடர்புக்கு: 98403 74266.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ravi - riyadh,சவுதி அரேபியா

    விவசாயி வலி போக்க வழிகாட்ட முனைபவருக்கு வாழ்த்துக்கள் , நன்றி . இறைவன் அவர்களுக்கு நல்ல அருள் புரியட்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement