Advertisement

அடிக்கடி செருமினால் குரல்வளை பாதிக்கும்!

ரேடியோ மற்றும் 'டிவி' தொகுப்பாளர்கள் என, குரலை அதிகம் பயன்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு ஆலோசனைகளை வழங்கும், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், சுதா மகேஸ்வரி: குரலை அதிகம் பயன்படுத்தும் துறையில் இருப்பவர்கள், சராசரி அளவை விட அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும், சிறிய இடைவெளிகளில், 4 லி., தண்ணீராவது அருந்த வேண்டும்.

தண்ணீர், தொண்டை பகுதியில் வறட்சியைத் தடுக்க உதவும். ரேடியோ தொகுப்பாளர்கள், எப்போதும் ஒரே சுருதியில் பேச முடியாது. சூழலுக்குத் தகுந்தாற்போல் ஏற்ற, இறக்கத்துடன் பேச வேண்டியிருக்கும். அதனால், ரேடியோ தொகுப்பாளர்கள் குரலை ஆய்வுக்குட்படுத்தி, தங்களுக்கான இயல்பான சுருதியின் அளவைத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த சுருதியிலிருந்து அடிக்கடி விலகாமல் பேசுவது நல்லது. தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் பேசினால், குரல் வளையிலிருக்கும் தசைகள் சேதமடையும். இதனால், குரல்வளையில் கட்டிகள் தோன்றலாம்; ரத்தக் கசிவு கூட ஏற்படலாம்.

ஒரு மணி நேரம் நிகழ்ச்சியில் பேசினால், இரண்டு மணி நேரம் குரலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் நிகழ்ச்சி செய்தால், மற்ற நேரங்களில் அதிகம் பேசுவதை தவிர்க்க வேண்டும். குரலில் சிறிய மாறுபாடு தெரிந்தாலும், சுய மருத்துவத்தில் ஈடுபடாமல், உடனே மருத்துவரை அணுக வேண்டும். பேசும் போது தொண்டையில் உறுத்துவது போலத் தோன்றினால், செருமக் கூடாது. அடிக்கடி செருமினால் குரல்வளை பாதிக்கப்படும். ஓரிரு முறை என்றால், தண்ணீர் அருந்தலாம். அடிக்கடி ஏற்பட்டால், மருத்துவரை அணுகுவது நல்லது.

மேலும், காதுகளில், 'ஹெட்போன்' அணிந்து, நிகழ்ச்சிகளில் அதிகம் பேச வேண்டியிருக்கும். அதனால், மற்ற நேரங்களில் மொபைல் போன் பேசுவது, 'ஹெட்போன்' அணிந்து பாடல் கேட்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புகைப்பழக்கம், நேரடியாக குரலை பாதிக்கும் என்பதால், அதைத் தவிர்க்க வேண்டும். மது, காபி, டீ போன்றவற்றையும், காரமான, பொரித்த, துரித உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இவை, வயிற்றில் அமிலத் தன்மையை உருவாக்கி, அதைத் தொண்டைக்கு அனுப்பும். இதனாலும் குரல்வளம் பாதிக்கப்படும். நிகழ்ச்சிக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னரே, சாப்பிட்டு விட வேண்டும். நிகழ்ச்சிக்கு இடையே, பால் பொருள்கள், நட்ஸ், பாப்கார்ன், டீ, காபி போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement