Advertisement

பாசி வாசமில்லாத குடிநீர் மாட்டுக்கு தேவை!

கறவை மாடுகளின் பால் உற்பத்தியை அதிகரிக்க வழி கூறும், மாதவரம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக புறநகர் மருத்துவமனையின் தலைவர் மற்றும் பேராசிரியர், க.கிருஷ்ணகுமார்: கால்நடைப் பராமரிப்பில், கோடை மற்றும் மழை என, இரண்டு பருவங்களிலுமே கவனமாக இருக்க வேண்டும். கால்நடைகளுக்கு கீற்றுக்கொட்டகை தான் ஏற்றது. தவிர்க்க முடியாமல், 'ஆஸ்பெஸ்டாஸ்' கூரை அமைத்தால், அதன் மீது தென்னை ஓலை வேயலாம்; கூரை மீது, தண்ணீரைத் தெளிக்கலாம்.

கொட்டகையின் மேற்கூரை, 10 - -12 அடி உயரத்தில் இருக்க வேண்டும். சுற்றி மரங்கள் வளர்த்தால், நல்ல பலன் தரும். கோடையில் தினமும் மூன்று வேளை, மாட்டை குளிப்பாட்டுவது நல்லது. கொட்டகை உள்ளேயே நீர்த் தெளிப்பான்களை பொருத்தி, மாடுகளின் மீது தண்ணீர் விழுமாறு அமைக்கலாம். எருமை மாடுகளை, தினமும் ஐந்து முறை குளிப்பாட்டுவது அவசியம். எருமைகளுக்கு வியர்வை சுரப்பிகள் கிடையாது என்பதால், வெப்பத்தை வெளியேற்ற, தண்ணீரில் அடிக்கடி நனைய வேண்டும்.

இல்லாவிடில், அதன் உடல் இளைத்து, பாலின் அளவு குறைந்துவிடும். தண்ணீர் வசதி இல்லாதவர்கள், கோணிப் பையை நனைத்து எருமைகள் மீது போடலாம். நம் நாட்டு மாடுகளுக்கு கோடையில் அதிக பராமரிப்பு தேவையிருக்காது; ஆனால், கலப்பின மாடுகளுக்கு கண்டிப்பாக தேவை. வெயிலால் அவை, ஒருவித அழுத்தத்துக்கு ஆளாகின்றன. அதனால், மேய்ச்சல் முறையில் மாடுகளை பராமரிக்கும் விவசாயிகள், காலை, 7:00 மணிக்கே அனுப்பி, 11:00 மணிக்கும்; மாலை, 3:00 மணிக்கு அனுப்பி, 6:00 மணிக்கு திரும்புமாறும் பார்த்து கொள்ள வேண்டும்.

மேலும், கோடையில் கறவை மாடுகளுக்கு தினமும், 20 கிலோ பசுந்தீவனம் கொடுப்பது அவசியம். கோ -- 4, கோ - -5 போன்ற புல் வகைகளை பசுந்தீவனமாக பயன்படுத்தலாம். பாலில் கொழுப்பு சதவீதம் குறைந்து, அடர்த்தி குறைவாக இருந்தால், 20 கிலோ பசுந்தீவனத்துடன், 5 கிலோ வைக்கோலை சேர்த்து கொடுக்கலாம். அதேசமயம், மக்காச்சோளம் அல்லது சோளப் பயிர்களை, அவற்றில் பால் பிடிக்கும் நேரத்தில் அறுவடை செய்து, கறவை மாடுகளுக்கு தீவனமாக கொடுத்தால், மாடுகளின் பால் சுரப்பு அளவு, கணிசமாக அதிகரிக்கும்.

அதேபோல, 5 லி., பால் கறக்கும் மாட்டுக்கு, 2 கிலோவும், அதற்கு மேல் கறக்கும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும், அரைக்கிலோ என்ற அளவில், தினமும் அடர்தீவனம் கொடுத்தால், பாலில் கொழுப்புச்சத்து அதிகரிக்கும். கோடையில் மாடுகளுக்கு தண்ணீர் தேவை அதிகமிருக்கும். எனவே, தண்ணீர் தொட்டியை வாரம் ஒருமுறை சுத்தப்படுத்தி, பாசி வாசம் இல்லாமல் இருந்தால், மாடுகள் அதிக தண்ணீரை குடிக்கும். தீவனப் பற்றாக்குறை, அயற்சியை சரி செய்தாலே பாலில் கொழுப்புச்சத்து, புரதச்சத்து உள்ளிட்ட சத்துகள் அதிகரிக்கும். பாலுக்கும் நல்ல விலை கிடைக்கும்.

தொடர்புக்கு: 94432 20975.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement