Advertisement

மதத்தை முன்னிறுத்தும் அரசியல் ஏன் கூடாது?

இன்று நிலவும் அரசியல் சூழலில் ஜாதி - மதம் போன்ற அம்சங்கள் முக்கிய பங்கு வகிப்பதைப் பார்க்கிறோம். மதத்தின் பெயரால் வன்முறை வெறியாட்டங்களும் மோசமான அரசியல் செயல்பாடுகளும் நிகழ்வதைத் தடுக்க நாம் செய்ய வேண்டியவை பற்றி சத்குரு பேசுகிறார்.

சத்குரு:
பொருள்நிலையைத் தாண்டிய விஷயங்களைப் பொறுத்தவரை, நம் நாட்டில் எப்போதுமே முழு சுதந்திரம் இருந்திருக்கிறது. நமது கலாச்சாரம் இதன் அடிப்படையில்தான் வளர்ந்தது. இந்தக் கலாச்சாரத்தில், எண்ணங்கள், நம்பிக்கை, ஆன்மீகத் தேடுதல் என எதிலுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டதில்லை. இதுதான் சனாதன தர்மம் (அ) காலத்திற்கு அப்பாற்பட்ட கோட்பாடு. உங்களுக்குப் பிடித்தமானதுபோல் உங்கள் கடவுளை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். ஆண் கடவுள், பெண் கடவுள், மிருகக் கடவுள், மரக் கடவுள் என உங்கள் கடவுள் உங்கள் விருப்பம். இதைத்தான் இஷ்ட தெய்வம் என்றோம். இதுபோன்ற சுதந்திரம் இந்தக் கலாச்சாரத்தில் மட்டுமே உள்ளது.

இங்கு 700 கோடி மக்கள் வாழ்கிறோம். அப்படியெனில் 700 கோடி மதங்களை நாம் வைத்துக் கொள்ளலாம். வாழ்வின் குறிப்பிட்ட நேரங்களில் அவரவருக்கு நெருக்கமாக இருக்கும் ஒன்றை அவர் தன் கடவுளாக தேர்வுசெய்து கொள்ளலாம். தேர்வு செய்வது மட்டுமல்ல, வேண்டுமென்றால் விருப்பம்போல் தன் கடவுளை தானே உருவாக்கி, அதற்கு முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொள்ளலாம். ஏனெனில் இது கடவுளைப் பற்றியல்ல, நீங்கள் ஒரு குறிப்பிட்ட தன்மையில் வாழ்வை உணர்வது பற்றி. வாழ்வை வணக்கத்திற்குரியதாகவும், மரியாதைக்குரியதாகவும் பார்க்கும் தன்மையில் நீங்கள் இருப்பது பற்றி. மதம் என்பதை நாம் உருவாக்கியதன் அடிப்படை நோக்கமே மக்கள் இத்தன்மையில் இருக்கவேண்டும் என்பதுதான்.
நீங்கள் குரங்கை வணங்குங்கள், நான் யானையை வணங்குகிறேன்.

என்ன பிரச்சினை? ஒன்றுமில்லை. நாளையே கடவுளை மாற்றிக்கொள்ள வேண்டுமா? அதுவும்கூட செய்யலாம். உருவம் உள்ள கடவுள், உருவமற்ற கடவுள், ஏன் கடவுளே வைத்துக் கொள்ளாவிட்டாலும்கூட பரவாயில்லை. இது அவரவர் விருப்பம். விறைப்பான சட்டதிட்டங்கள் கொண்டு இது வரையறுக்கப்படவில்லை. இது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அதனால்தான் இதை காலத்திற்கு அப்பாற்பட்ட மதம் என்கிறோம். எதற்கு உருவமில்லையோ, எதற்கு விறைப்பான எல்லைகள் இல்லையோ, அதுதான் காலாகாலத்திற்கும் நிலைத்திருக்கும். ஏனெனில் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் அதை தன்னுள் ஏற்கும் திறன் இதற்கு மட்டும்தான் இருக்கும்.

மதங்களின் அடிப்படைகளை அலசி, அதை மாற்றியமைக்கும் அளவிற்கான புத்திசாலித்தனம் இன்று இவ்வுலகில் பரவலாக வளர்ந்துள்ளது. மதம் என்பது நாம் உள்நோக்கி எடுக்கும் படி. ஒவ்வொரு மனிதரும் அவருக்குள் செய்து கொள்ளும் அவர் உயிருக்கு நெருக்கமான விஷயம் இது... ஒருங்கிணைத்து தெருவில் நிகழ்த்தும் ஒன்றல்ல. இது படைத்தவனை நோக்கி நாம் எடுக்கும் படி. உங்கள் உடலை நீங்கள் கவனித்தாலே, படைத்தலுக்கு மூலமானது உங்களுக்குள் இருப்பதை நீங்கள் பார்க்கமுடியும். அதனால் படைத்தவனை நோக்கி எடுக்கும் படி, இயல்பாகவே உள்நோக்கிய படிதான். இதை நீங்கள் மட்டும்தான் எடுக்கமுடியும். பலரையும் சேர்த்து ஒரு கூட்டமாக நீங்கள் உள்நோக்கி செல்லமுடியாது.

மதம் என்பதை ஒருங்கிணைத்து அதை ஒரு அமைப்பாக உருவாக்கியதால், மிக அழகான செயல்முறையாய் இருக்கவேண்டிய ஒன்று, வன்முறையைத் தூண்டும் வெறியாக மாறி வருகிறது. 'உலகையே ஆட்கொள்ள வேண்டும்' என்ற குறிக்கோளுடன் செயல்படும் ஒரு கோட்பாட்டையோ, 'நான் பின்பற்றும் வழிதான் ஒரே வழி' என்ற நம்பிக்கையையோ நீங்கள் கடைபிடித்தால், நீங்கள் ஒரு மதவெறியர். வெளியில் நாகரீகத்துடன் நடந்து கொண்டாலும், இதுபோன்ற எண்ணம் உங்களுக்குள் இருக்கும்வரை நீங்கள் ஒரு மதவெறியர்தான்.

உள்நாட்டுக் கலாச்சாரத்தில், மதமும் அரசாங்கமும் தனித்தனியாக இயங்கின. மதங்களுக்கான முக்கியத்துவம் இன்றைவிட முன்காலத்தில்தான் மிக அதிகமாக இருந்தது. என்றாலும், அப்போதுகூட மதம் அரசாங்கத்தை வழிநடத்தவில்லை. மன்னர் தனக்குப் பிடித்தமான மதத்தைப் பின்பற்றினார். மக்களும் அவர்களுக்கு விருப்பமான மதத்தைப் பின்பற்ற சுதந்திரம் இருந்தது. இதில் எவ்வித சண்டையோ, போராட்டமோ இருந்ததில்லை. ஏனெனில் மதம் என்பதை "ஒருங்கிணைக்கப்பட வேண்டிய" செயல்முறையாய் அவர்கள் என்றும் நினைத்ததில்லை. துரதிர்ஷ்டவசமாக மதத்தை ஒருங்கிணைக்கும் செயலில் ஈடுபட்டு, இன்று அது ஜனநாயக அரசியலும், தேச நன்மையும் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கும் சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

அரசியல்வாதிகள் தங்களை "இந்துத் தலைவர்கள்", "முஸ்லிம் தலைவர்கள்", "கிறிஸ்துவத் தலைவர்கள்" என்று வெளிப்படையாக, பெருமையாக அறிவித்துக் கொள்ளும் சூழ்நிலை இன்று நிலவுகிறது. மதம் என்பது ஒரு எண்ணிக்கை விளையாட்டாக, மற்றுமொரு மாறுவேட அரசியலாக மாறி வருகிறது. இதை நாம் ஊக்கப்படுத்தினால், அவ்வளவு ஏன், இதை நாம் அனுமதித்தாலும்கூட நாட்டின் ஜனத்தொகை கூட்டமைவு விகிதத்தை மாற்ற ஒருங்கிணைத்த செயற்கையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். எங்கெல்லாம் இதுபோல் மத அடிப்படையிலோ, மற்றதன் அடிப்படையிலோ நாட்டின் ஜனத்தொகை கலவையை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப் படுகிறதோ, அங்கெல்லாம் மாபெரும் அளவில் வன்முறை வெடிக்கும். இது நம் "தேசம்" எனும் அமைப்பையே அச்சுறுத்துகிறது.

"தேசம்" என்பது நாம் உருவாக்கிய ஒரு எண்ணம்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது நடைமுறை உண்மையாக வேண்டுமெனில், மக்கட்தொகையின் அனைத்து நிலையிலும் "நான் இந்நாட்டு பிரஜை" எனும் உணர்வு ஆழமாகப் பதிய நாம் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நாம் முதலில் இந்நாட்டு பிரஜை, அதற்குப் பிறகுதான் மதம் வருகிறது என்பதை நாம் உணரவேண்டும். அப்போதுதான் சவாலான சூழ்நிலைகளைத் துரிதமாக எதிர்கொள்ளும் திறன் நமக்கு இருக்கும். இல்லையெனில் "தேசம்" என்பதற்கு அச்சுறுத்தல் ஏற்படும் ஒவ்வொரு முறையும், எந்தப்பக்கம் செல்வது என்ற குழப்பதிலேயே மக்கள் உழல்வார்கள். தேவையான சமநிலையோடு இதை நாம் கையாளாவிட்டால், மதத்தின் அடிப்படையில் தேசம் பரவலாக பிளவுபட்டு நிற்கும் அவலமான சூழ்நிலை உருவாகும். ஒரு தேசமாக கடும் சோதனைகளை நாம் சந்திக்க நேரிடும். அதனால் அரசாங்கமும் சமூகமும், அதிலும் குறிப்பாக மதம் மற்றும் ஆன்மீக இயக்கங்களும் இதை மதிநுட்பத்தோடும், தேவையான கூர் உணர்வோடும், தொலை நோக்குப் பார்வையுடனும் அணுகுவது மிகமிக முக்கியம்.

அனைவரையும் அரவணைக்கும் நம் அழகான, துடிப்பான கலாச்சாரம், எவ்வித பிரிக்கும் சக்திகளுக்கும் பலியாகாமல், என்றென்றும் அதே நயத்தோடும், புகழோடும் ஓங்கி நிற்க, தேவையான அறிவோடும், விவேகத்தோடும் நாம் அனைவரும் செயல்படுவோமாக!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Chandra Ganesh - Chennai,இந்தியா

    அருமையான கருத்துக்கள் நன்றி சத்குரு .

கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் செய்திகள் :

Advertisement