Advertisement

படைப்புழுக்கள் தாக்கத்தை தடுக்கலாம்!

மக்காச்சோளத்தில் படைப்புழுக்களின் தாக்குதலை சமாளிக்க வழி கூறும், சேலம் மாவட்டம், தலைவாசல் வேளாண் உதவி இயக்குனர், பொ.வேல்முருகன்: மக்காச்சோளப் பயிரில் பூச்சிக்கொல்லி பயன்பாடு, மிகக்குறைந்த அளவில் தான் இருந்தது. வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவகை படைப்புழுக்கள், இதன் குருத்து, இலை மற்றும் கதிர்களை சேதப்படுத்தி, அதிக மகசூல் இழப்பை ஏற்படுத்தின. இப்படைப்புழுக்கள், 60 - 90 நாட்கள் வரை, வாழ்நாள் கொண்டவை. அதனால், கடந்தாண்டு இதை அழிக்க, அதிகளவு பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த வேண்டியிருந்தது. இவற்றின் தாக்குதலை தடுக்க, நிலத்தை தயார் செய்யும்போதே கவனமாக இருப்பது அவசியம்.

ஏப்ரல், மே மாதங்களில் கிடைக்கும் கோடை மழையை வைத்து, உழவு செய்ய வேண்டும். இதனால், 2-8 செ.மீ., ஆழத்தில், மண்ணில் கூட்டுப்புழுப் பருவத்தில், உறக்க நிலையில் இருக்கும் படைப்புழுக்கள் அழிக்கப்பட்டு விடும். உழவு ஓட்டி, 10 - 30 நாட்கள் வரை காய விட வேண்டும். கோடை உழவு செய்வதன் மூலம், மண்ணின் நீர்ப்பிடிப்பு தன்மையும் அதிகரிக்கும். நேப்பியர், வேலிமசால் போன்ற தீவனப்புல் வகைகளை, வரப்பு பயிராகவும், ஆண்டு முழுவதும் பூக்கும், பீன்ஸ், தட்டைப்பயறு, செண்டுமல்லி போன்றவற்றை ஊடுபயிர், வரப்பு பயிராகவும், சாகுபடி செய்யலாம். பட்டம் தவறி, மக்காச்சோளத்தை விதைக்க கூடாது. படைப்புழுக்கள் பாதிக்கப்பட்ட வயல்களில், மாடுகள் மேய்ந்தது போன்று, இலைகளை புழுக்கள் தின்ற அடையாளங்கள் இருக்கும்.

வளர்ந்த புழுக்களின் முன் மேற்பகுதியில், கவிழ்ந்த, 'ஒய்' ஆங்கில எழுத்து வடிவ கறுப்பு நிற அடையாளமும், பின் மேற்பகுதியில் நான்கு கறுப்பு நிறப் புள்ளிகளும் தென்படும். தாய் அந்துப்பூச்சி, 100 - 200 முட்டை குவியல்களை, இலையின் அடிப்பகுதியில் இடும். இவற்றிலிருந்து பொரிந்து வரும் புழுக்கள், இலையினுள் சென்று பாதிப்பை உண்டாக்கும். பயிர்களில் கொத்து கொத்தாக இருக்கும் புழுக்களை ஆரம்ப நிலைகளில் கண்டால், கைகளால் சேகரித்து அழிக்கலாம். ஏக்கருக்கு, 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு பயன்படுத்தி தாக்குதலை குறைக்கலாம். தாக்குதல் கண்டுவிட்டால், தலா, 1 கிலோ பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து அரைத்து, 100 லி., தண்ணீரில் கலக்க வேண்டும். அதிலிருந்து, 300 மில்லி எடுத்து, 10 லி., தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். தெளிக்கும்போது, 50 கிராம் புகையிலை துாள் அல்லது பெருங்காயத்தை கலந்து கொண்டால், படைப்புழுக்கள் கட்டுக்குள் வந்துவிடும். மேற்சொன்ன தடுப்பு முறைகளை, அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
தொடர்புக்கு:
99524 17105.






Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • nicolethomson - bengalooru,இந்தியா

    கடைசியில் இயற்கை முறைதான் உதவுது , இந்த பச்சை மிளகாய் பூண்டு இஞ்சி கலவையோடு சிறிது நாட்டு மாட்டு மூத்திரம் , புகையிலை (சிகரெட் இல்லை) கலந்து ட்ரை பண்ணி பாருங்க

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement