Advertisement

'டவுட்' தனபாலு

தி.மு.க., தலைவர், ஸ்டாலின்: லோக்சபாவில், மூன்றாவது பெரிய கட்சியாக, தி.மு.க., உருவெடுத்துள்ளது.


டவுட் தனபாலு: லோக்சபாவில், மூன்றாவது கட்சியாக உருவெடுத்தாலும், மாநிலத்தில் நீங்க இன்னும் எதிர்க்கட்சி வரிசையில் தானே இருக்கீங்க...



தேர்தல் முடிவு வெளியானதில் இருந்து, இதைப் பற்றிப் பேசுவதை ஏன் குறைத்துக் கொண்டீங்க என்பது தான், பல, 'டவுட்'களை கிளப்புது...!


ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத் யாதவ்: நேரு குடும்பத்தினரைத் தவிர்த்து, வேறு ஒருவர், காங்கிரசுக்கு தலைவரானால், மோடி, அமித் ஷா படை, அவரை பொம்மைத் தலைவர் எனக் கூறும்; அந்த வாய்ப்பை, ராகுல் தர வேண்டாம்.


டவுட் தனபாலு: இது, காங்கிரஸ் கட்சி மீதான அக்கறையில் சொல்வது மாதிரி தெரியலையே... குடும்ப அரசியலுக்கு முன்னுதாரணமாகத் திகழும், அந்தக் கட்சியிலேயே, இப்படி ஒரு மாற்றம் வந்தால், உங்க கட்சியிலும், அது போன்ற குரல் எழுந்திடும் என்ற சுயநலத்தில் சொல்வது மாதிரி, 'டவுட்' வருதே...!


தமிழக செய்தித்துறை அமைச்சர் ராஜு: மே, 23ம் தேதிக்குப் பின், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வரும் என, ஸ்டாலின் தொடர்ந்து கூறி வந்தார். அவருக்கு, ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது.


டவுட் தனபாலு: அவர் சொன்னது நடக்கலை என்பது சரி தான்... லோக்சபா மற்றும் இடைத்தேர்தலில், அனைத்துத் தொகுதியிலும், அ.தி.மு.க., கூட்டணியே வெல்லும்னு, அடித்துச் சொல்லி வந்தீங்களே... தேர்தல் முடிவு, உங்களுக்கு எந்த ஏமாற்றத்தையும் அளிக்கலையா என்ற, 'டவுட்'டுக்கு என்ன பதில் சொல்வீங்க...!


பா.ம.க., நிறுவனர், ராமதாஸ்: சாதாரண வேகத்தில் பயணித்து, சரிவுகளை சந்திக்கும் போது, உடனே, அதிக வேகத்தில், மீண்டும் பயணித்து, இலக்குகளை எளிதாக கடக்கும் திறன், பா.ம.க.,வுக்கு உண்டு.


டவுட் தனபாலு: தத்துவம் சொல்றீங்களா... இல்லை, 'இந்தத் தேர்தலில், பா.ம.க., தீவிரமாக செயல்படலை... ஒப்புக்குத்தான், தேர்தல் பணியில் ஈடுபட்டோம்'னு, ஒப்புதல் வாக்குமூலம் அளிக்குறீங்களா என்பது தான், என்னோட, 'டவுட்!'


தமிழக, பா.ஜ., முன்னாள் தலைவர், இல.கணேசன்: தமிழகத்தில் இருந்து, பா.ஜ., கூட்டணியில், எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஒருவர் தான்.


இப்போது அமைந்திருக்கிற அமைச்சரவை முழுமையானது அல்ல; கால அவகாசம் எடுத்து, அதை பூர்த்தி செய்ய நேரடும்.


டவுட் தனபாலு: அமைச்சரவை விரிவாக்கம், விரைவில் நடக்கும்... அப்போது, பன்னீர்செல்வத்தின் மகனுக்கு பதவி கிடைக்கும்னு, நம்பிக்கையாய் சொல்றீங்க... கணிப்பின் அடிப்படையில் சொல்றீங்களா... இல்லை, உங்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் சொல்றீங்களா என்ற, 'டவுட்'டைக் கொஞ்சம் விளக்கிடுங்க...


டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால்: லோக்சபா தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள், முழு மூச்சுடன் உழைத்தனர். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த முடிவுகள் வரவில்லை. இந்த தேர்தலில், மோடி - ராகுல் இடையே தான் போட்டி என, மக்கள் முடிவு செய்துவிட்டனர்.


டவுட் தனபாலு: ராகுல் தான் போட்டியாளர்னு மக்கள் முடிவு செய்திருந்தால், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறும் அளவுக்காவது, காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கணுமே... உங்க பலவீனத்தை மறைக்க, மற்றொரு பலவீனமான வாதத்தை முன்வைப்பது, எடுபடுமாங்கறது, 'டவுட்' தான்...!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement