Advertisement

ராஜசேகரின் ‛குரலைக்' கேளுங்கள்

அது ஒரு வித்தியாசமான விழா

மேடையில் ஒரு பாடகர் தோன்றி, உங்களுக்கு என்ன பாட்டு வேண்டுமானாலும் கேளுங்கள் பாடுகிறேன்' என்று சொன்னார்.

வந்திருந்த பார்வையாளர்கள் பலரும் எம்.எஸ்.விஸ்வநாதன்,கண்ணதாசன், டிஎம்எஸ் கூட்டணியில் உருவான காலத்தால் அழியாத பல பழைய பாடல்களைக் கேட்டனர்.

ஒவ்வொருவர் கேட்ட பாடலையும் அருமையாக பாடினார், சில பாடல்களை பாடும்போது அந்தப்பாடல் பிறந்த விதம் பாடப்பட்ட சூழ்நிலை போன்ற சுவராசியமான விஷயங்களையும் சொன்னார்.

ஓடும் மேகங்களே,நான் கவிஞனுமில்லை,தரைமேல் பிறக்கவைத்தான்,பாராப்ப பழநியப்பா,ஆண்டவன் படைச்சான் என்று பல பழைய பாடல்களைபாடி அசத்தினார்.

பாடும்போது எந்த குறிப்புகளையும் வைத்துக்கொள்ளாமல் மனப்பாடமாக பாடியதும் பாராட்டவேண்டி விஷயமாகும்.டிஎம்எஸ் பாடிய பாடல்கள் மட்டுமின்றி எஸ்பிபி மற்றும் ஏசுதாஸ் பாடிய பாடல்களையும் பாடினார்.

நிகழ்ச்சியின் முடிவில் பலரும் அவரது குரல் மற்றும் மனப்பாட திறமையை பாராட்டி மகிழ்ந்தனர் நான் அவரைப்பற்றி கூடுதலாக அறிந்த தகவல்கள் இன்னும் பிரமிக்கவைத்தது.

அவர் பெயர் ராஜசேகர் சென்னை சிஐடி நகர்பகுதியி்ல் வசிக்கிறார் இவருக்கு பாடுவதுதான் வாழ்க்கையே.

எட்டு வயதிலேயே பாட்டுப்படுவதில் ஆர்வம் கொண்டார் பிறகு வடிவேல் என்பவரை குருநாதராகக் கொண்டபின் பாடல்களை முறைப்படி பாடலானார்.

இந்தப் பாடல்களுக்கு எல்லாம் கர்நாடக சங்கீதம்தான் அடிப்படை என்பதை அறிந்த பின் அந்த சங்கீதத்தை முழுமையாகக் கற்றார்.

கற்றபிறகுதான் இந்த வித்தையை பாடவிரும்பும் எல்லோருக்கும் கற்றுத்தரலாம் என்று முடிவு செய்து கற்றுத்தர ஆரம்பித்தார்.

கீபோர்டுடன் இவர் கற்றுத்தரும் பாடம் எளிதாக இருக்க பல பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் வந்தனர் ஒரு நேரத்தில் எழுபது மாணவர்கள் ஒரு வகுப்பிற்கு என்று கற்றனர்.

ஒரு பக்கம் கர்நாடக இசையைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இன்னோரு பக்கம் ஆர்ஆர் லைட் மியூசிக் என்ற இசைக்குழு ஆரம்பித்து நிறைய மேடைக்கச்சேரிகளை வழங்கினார்.இரு மேதைகளின் தத்துவ பாடல்கள் என்று எம்ஜிஆர் சிவாஜி பாடல்களை மட்டும் பாடுவது என்ற புதுமைகளையும் செய்தார்.

இவருக்கு டிஎம்எஸ்சின் குரல் அப்படியே வரும், காமராஜ் அரங்கில் நடந்த இவரது இசைக்கச்சேரியை ஒரு முறை கேட்க வந்த டிஎம்எஸ் இவரது குரலில் மயங்கி,‛ ராஜசேகர்தான் என் இசை வாரிசு' என்று அறிவித்து பாராட்டி பட்டம் சூடி மகிழ்ந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் இவரது இசைவகுப்பு நடக்கும் இடத்தை பெரிதும் பாதித்துவிட்டது இதன் காரணமாக இசைகற்கும் ஆர்வம் கொண்ட மாணவர்கள் இவரைத்தேடி வந்தது போய் இவர் அவர்களைத் தேடிப்போய் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.

இப்போது சென்னையில் உள்ள பல முக்கிய பள்ளிகளில் இவர்தான் பகுதி நேர இசை ஆசிரியர் இது போக விருப்பமுள்ளவர்கள் வீட்டிற்கும் நேரில் போய் வகுப்பு எடுக்கிறார்.

இன்றைய தேதிக்கு டிஎம்எஸ் வாய்சில் பாட இவரைவிட்டால் வேறு ஆள் இல்லை என்பதால் பலரது இசைக்குழுவிலும் பங்கேற்று பாடிவருகிறார்.

டிஎம்எஸ்சின் குரலாக ஒலித்துக்கொண்டு இருந்தாலும் ராஜசேகரின் குரலாக பிரபலமாக வேண்டும், சினிமா பின்னனி பாடகராக வேண்டும் என்பதுதான் இவரது நீண்ட நாள் கனவு அந்தக்கனவு விரைவில் நனவாகட்டும்.அவரது எண்:9444079227.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    இவரது கடின உழைப்பும், ஈடுபாடும், மனஉறுதியும் பாராட்டத் தக்கவையே ..... எனினும் மக்களது ரசனை மாறிவிட்டது ...... வீண் முயற்சி ......

  • JeevaKiran - COONOOR,இந்தியா

    கடவுள் நிச்சயம் நிறைவேற்றுவார். வாழ்க வளர்க.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement