Advertisement

ஆண்டவனுக்கு இழைக்கும் தீங்கு!

பா.-விஜய், காட்டிகன், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உள்நாட்டுப் போர் ஓய்ந்து, சமீபத்தில் தான் இலங்கை, அமைதி பாதைக்குத் திரும்பியது. இந்நிலையில், சர்ச் உட்பட, எட்டு இடங்களில், வெடிகுண்டு தாக்குதல் நடத்தி, 250 பேரை கொலை செய்துள்ளது, பயங்கரவாத அமைப்பு.

முகமது நபி, தான் அணிந்திருந்த ஆடையின் மேல், உறங்கிய பூனைக்கு தொந்தரவு தரக் கூடாது என்பதற்காக, ஆடையை கத்தரித்த பின், தொழுகைக்கு சென்றாராம். ஐந்து வேளை தொழுகை, அனைத்து உயிர்களிடமும் அன்பு... இவை தானே, நாங்கள் கேட்டறிந்த இஸ்லாம்! வட்டிக்கும், வட்டி போட்டு வாங்கும் இவ்வுலகில், வங்கி, தானாக முன்வந்து வழங்கும் வட்டியை கூட, 'வேண்டாம்' என, எழுதிக் கொடுக்கும், வாஞ்சை நிறைந்த மக்களல்லவா, இஸ்லாம் மக்கள்!

உத்தர பிரதேசம், அம்ரோஹாவில் உள்ள, சையது ஷர்புதீன் ஷா விலாயட் தர்கா பற்றி அறிந்தபோது, மனம் பரவசப்படுகிறது. கடந்த, 13ம் நுாற்றாண்டில் வாழ்ந்த, 'சூபி ஞானி' ஷா விலாயட்டின் சமாதியான, இந்த தர்கா வளாகத்தில், விஷத்தன்மையுள்ள, ஆயிரக்கணக்கான தேள்கள் உள்ளன. ஆனால், இந்த தேள்கள், யாரையும் கடிப்பதில்லை. 'கொட்டினால் தான் தேள்; கொட்டா விட்டால், பிள்ளைப் பூச்சி' என்றொரு, பழமொழி உண்டு. இங்குள்ள தேள்கள், பிள்ளைப் பூச்சிகளாய் மாறியுள்ளது, ஆச்சரியம் அளிக்கக் கூடியது.

இந்த தர்காவில், மேலும் ஓர் ஆச்சரியமும் உண்டு. அப்பகுதியில் காணாமல் போகும் குதிரைகளும், கழுதைகளும், இந்த தர்கா வளாகத்திற்கு வந்து விடுமாம். உரிமையாளர், அவற்றின் விபரத்தை, தர்கா நிர்வாகிகளிடம் கூறி, அவற்றை அழைத்துச் செல்வராம். இதிலும், கூடுதலான மற்றொரு ஆச்சரியம் உண்டு. அதாவது, அந்த விலங்குகள், தர்கா வளாகத்தில் இருக்கும் வரை, கழிவுகளை வெளியேற்றுவது இல்லையாம்!

ஞானி விலாயட், இறந்த பின்னும், இவ்வளவு அற்புதங்களைச் செய்து, மக்களுக்கு அரணாக விளங்கி வருகிறார். இஸ்லாம் உட்பட அனைத்து மதங்களும், சக உயிர்களிடம் அன்பு பாராட்டவே போதிக்கின்றன. ஐ.எஸ்., அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளே... ஆயுதம் ஏந்திய நீங்கள், கொலை செய்வது, அப்பாவி மக்களைத் தான். அவர்களுக்கும், உங்களுக்கும், எந்த முன்விரோதமும் இல்லையே. அப்பாவிகளைக் கொல்வது, ஆண்டவனுக்கு இழைக்கும் தீங்கல்லவா!


***

திருந்தாத சென்னைவாசிகள்!சி.வி.நாகராஜன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: கடந்த, 2009 லோக்சபா தேர்தலின் போது, எங்கள் குடும்பத்திற்கு, மதுரையில் ஓட்டு இருந்தது. எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், 3,000 ரூபாய் வரை செலவழித்து, மதுரைக்கு சென்று, ஓட்டளித்து வந்தோம். அந்த தேர்தலில், சென்னையில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவாக இருந்தது. இது குறித்து, இப்பகுதியில், 'என்ன கேடு வந்தது இவர்களுக்கு?' என, கடிதம் எழுதியிருந்தேன். 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது!

தற்போது எங்களுக்கு, சென்னையில் ஓட்டுரிமை கிடைத்து விட்டது. எனக்கு, 78 வயது ஆகிறது. முழங்கால் வலியால், நடப்பது கஷ்டம். அப்படி இருந்தும், பிறர் உதவியுடன், நானும், என் குடும்பத்தாரும் சென்று, ஜனநாயக கடமையை நிறைவேற்றினோம். இந்தத் தேர்தலிலும், சென்னையில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவு என்ற செய்தி அறிந்து, மிகவும் வருந்தினேன். எவ்வளவு செலவு செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சென்னைவாசிகள் திருந்தவில்லையே!

சென்னையில், வாழ்வாதாரம் தேடி வந்தோர், ஓட்டளிப்பதற்காக, கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே, சொந்த ஊர் சென்றனர். ஆனால், சென்னைவாசிகள், அருகில் இருக்கும் ஓட்டுச்சாவடிக்கு செல்லவில்லை. ஓட்டுப்பதிவு அன்று, அவர்கள், வீட்டில், 'டிவி' பார்த்தபடியும், மொபைல் போனை நோண்டியபடியும் இருந்திருப்பர். மேம்பாலங்கள், மெட்ரோ ரயில், குடிநீர் என, அனைத்து வசதிகள் கிடைத்தும், ஓட்டளிக்க செல்லாமல் இருந்த, சென்னைவாசிகளை என்ன செய்யலாம்?

கிராமங்களில், பல, கி.மீ., சென்று, ஓட்டளிக்கும் மக்களுக்கு, போதிய வசதிகள் இன்னும் கிடைக்கவில்லை. நடந்து செல்லும் துாரத்தில் உள்ள, ஓட்டுசாவடிக்கு செல்லாத சென்னைவாசிகள், வாய் கிழிய, அரசியல் மட்டும் பேசுவர். மத்திய, மாநில அரசுகள், இனி, அனைத்து நலத் திட்டங்களையும், கிராமங்களில் மட்டும் செயல்படுத்த வேண்டும்.


***

'பிலிமு'க்கு பஞ்சமில்லையே!க.ஆறுமுகம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த, குற்றப் பின்னணி தகவல்களை, 'டிவி' மற்றும் பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிட வேண்டும்' என, 2018ல், தேர்தல் ஆணையம் அறிவித்த அறிவிப்பு, 2019ல், தற்போதைய லோக்சபா தேர்தலில் நடைமுறைக்கு வந்துள்ளதாம்.

தமிழகத்தில், 18ம் தேதி, லோக்சபா தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், முடிந்து விட்டது. வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல், ஓட்டுப்பதிவு முடிந்த நாள் வரை, தினமும், 'டிவி' பார்த்தபடியும், பத்திரிகை படித்தபடியே தான் இருந்தேன். எந்த, 'டிவி சேனல்' மற்றும் பத்திரிகையிலும், வேட்பாளர்களின் குற்றப் பின்னணி விளம்பரங்கள் எதுவும், என் கண்ணில் தென்படவில்லை. அப்படி எந்த விளம்பரமும் வெளியாகவில்லை.

இந்நிலையில், 'குற்றப் பின்னணி குறித்த விளம்பர செலவுகளை, வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்காமல், கட்சிகளின் கணக்கில் தான், சேர்க்க வேண்டும்' என, அரசியல் கட்சிகள் அடம்பிடிக்கின்றன. 'ஊஹும்... அதெல்லாம் முடியாது. வேட்பாளர் செலவு கணக்கில் தான் சேர்ப்போம்' என, தேர்தல் ஆணையம் மல்லுக் கட்டுகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில், குற்றப் பின்னணி விளம்பரங்களை, தேர்தலுக்கு முன் வெளியிட வேண்டுமா அல்லது தேர்தல் முடிந்து, ஒரு மாமாங்கத்துக்கு பின் வெளியிட வேண்டுமா என, தெளிவாக குறிப்பிடவில்லையே!

ஏனெனில், எந்த வேட்பாளரும், தங்கள் குற்றப் பின்னணி குறித்த விபரங்களை வெளியிடவில்லையே! ஒருவேளை, தேர்தலில் போட்டியிட்ட, அத்தனை பேரும் உத்தமர்களா? வாக்காளர்களை, அரசியல் கட்சிகளும், அதன் வேட்பாளர்களும் மட்டும் ஏமாற்றவில்லை; தேர்தல் ஆணையமும் சேர்ந்து ஏமாற்றுகிறது என்பது தான் நிதர்சனம். நல்லா காட்டுறாங்கய்யா, 'பிலிமு!' நல்லா சுத்துறாங்கய்யா, காதுல பூவு!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    உலகிலேந்தமதமும் வன்முறையைபோதிக்கவில்லை லகுக்கும்தீன் வலியதீன் உன் மதம் உனக்கு என்மதம்எனக்கு என்று தான் போதித்தார்கள் கிறிஸ்தவம் அன்பினால் கட்டப்பட்டது ஆதிமதமான யூதமதத்திலிருந்துபிரிந்த மூவரும் ஒருமதத்தின்மீது மற்றோருவர் பகைக்கொள்வது ஏற்புடைத்தாகாது

  • Sathya Dhara - chennai,இந்தியா

    அன்புள்ள திரு பா.-விஜய், காட்டிகன், சுவிட்சர்லாந்து அவர்களே.....உங்கள் கடிதத்தை பார்த்து சிரிப்பதா இல்லை அழுவதா என்று தெரியவில்லையே? நீங்கள் எழுதியது அனைத்தும் சரி. ஆனால் ஒன்றை மறந்து விட்டீர்களே.. மனிதர்களுக்கு மட்டுமே புரிந்துகொள்ளும் சக்தி உண்டு. மிருகங்களுக்கு சாக்கடையில் வாழும் பன்றி.. புற்றில் இருக்கும் விஷ விரியன் பாம்புகளுக்கு... இவை எல்லாம் படிக்க தெரியுமா... புரியுமா.. அவற்றினை எப்படி நாம் கையாள வேண்டுமோ அப்படித்தான் கையாள வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டோம். மனம் நொந்து எழுதுகிறேன். இவர்களை திருத்த முயற்சிப்பது வீண். எந்தவொரு வர்க்கம் திருந்தவே முடியாத மிருகங்களாக ஆக்கப்பட்டு விட்டதோ.. அவற்றை ஒழித்தே தீர வேண்டும். திருத்த இயலாது. முற்றிலுமாக நமது மண்ணிலிருந்து தூக்கி எறியப்பட இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement