Advertisement

தவறே செய்யாதவர்கள் தண்டிக்கப்படுவது நியாயமா?

Share

தவறு செய்தவருக்கு, தண்டனை அளிப்பதில் தவறில்லை. ஒருவர், தவறு செய்ததற்காக, தவறு செய்யாத பலர் தண்டிக்கப்படுவதை, யாரும் ஏற்க மாட்டார்கள். ஆனால், யாரோ ஒருவர் செய்த தவறுக்காக, தேர்தல் ஆணையம், தவறு செய்யாதவர்களை, தொடர்ந்து தண்டித்து வருகிறது.
'ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது' என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில், இந்திய தண்டனை சட்டங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
ஆனால், நடைமுறையில், அது தலைகீழாக உள்ளது. குற்றவாளிகள் தப்பிப்பதும், நிரபராதிகள் தண்டிக்கப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.சாலை சிக்னலில், சிகப்பு விளக்கு ஒளிரத் துவங்கியதும், நிற்க வேண்டும் என்பது, அனைவரும் அறிந்தது. சிக்னலை மதிக்காமல் செல்வோர் அதிகம்.


அதை மதித்து நிற்போரையும், பின்னால் இருப்பவர், 'சாவுகிராக்கி போகமால் நிற்கிறதே...' என்று திட்டுவதும், அடிக்கடி நிகழ்கிறது. நேர்மையானவர்களை குற்றம் சொல்வதை, சாதாரண மக்களில் இருந்து, அதிகாரத்தின் உச்சத்தில் இருப்போர் வரை தொடர்கின்றனர்.அரசு சார்பில், அவ்வப்போது கடன் தள்ளுபடி அறிவிக்கப்படும். அதுவரை கடன் பெற்று, தவணைத் தொகையை முறையாக செலுத்தியவர்களுக்கு, எந்த பலனும் இருக்காது.


தவணை செலுத்தாமல், கடமையை செய்யத் தவறி யவர்களுக்கு, கடன் தள்ளுபடி என்ற போனஸ் வழங்கப்படும். அப்போது, நேர்மையாக நடந்து கொண்டவர்கள் பாதிக்கப்படுவர்; நேர்மையற்றவர்கள் பலன் பெறுவர். இதை, எந்த அரசும் கண்டு கொள்வதில்லை.அதேபோன்ற பாணியை, தற்போது, தேர்தல் ஆணையம் கடைபிடித்து வருகிறது. தமிழகத்தில் தேர்தல் என்றாலே கொண்டாட்டம் தான். தமிழகத் தேர்தலில் பணம் விளையாடும் என்பது, உலகறிந்த விஷயம்.


ஒவ்வொரு தேர்தலிலும், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க, தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது.இந்த முயற்சிகள் அனைத்தும், 'விழலுக்கு இறைத்த நீர் போல' வீணாகிறது. 'தலைவன் எவ்வழியோ; தொண்டன் அவ்வழி' என்பது போல, லஞ்சம் வாங்கும் தலைவர்களை பின்பற்றும் தொண்டர்கள், அவர்கள் வீசி எறியும் லஞ்சக் காசுக்காக, ஏங்கி தவிக்கின்றனர்.


இதனால், பண பட்டு வாடாவை தடுப்பது குதிரை கொம்பாகிறது.கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், பண பட்டுவாடாவை, தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியவில்லை. இதனால், அரசியல் கட்சியினருக்கு, அதிர்ச்சி வைத்தியம் அளிப்பதற்காக, இந்திய அளவில் முதல் முறையாக, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டசபை தொகுதிகளின் தேர்தலை ரத்து செய்தது.

இரு தொகுதிகளிலும், அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்கள், பணப் பட்டுவாடா செய்த புகார் காரணமாக, தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இது குறித்து, இரு கட்சிகளும் அலட்டிக் கொள்ளவில்லை.சில மாதங்களுக்கு பின், மீண்டும் அந்தத் தொகுதிகளுக்கு, தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தபோது, அதே வேட்பாளர்களை களம் இறக்கி, இரு கட்சிகளும், தேர்தல் ஆணையத்தின் முகத்தில் கரியைப் பூசின.


தேர்தல் ஆணையம், தவறு செய்த வேட்பாளர்கள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், நேர்மையாக தேர்தல் பிரசாரம் செய்த வேட்பாளர்கள், கடுமையாக பாதிக்கப்பட்டனர். சொந்தக் காசை செலவழித்தவர்கள், மீண்டும் தேர்தல் செலவு செய்ய முடியாமல் தவித்தனர். இதை, யாரும் கண்டு கொள்ளவில்லை.

அடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடந்தபோதும், இதே பிரச்னை எழுந்தது. சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித் துறை அதிகாரிகள், சோதனை நடத்தினர்.
தேர்தலில், 86 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்ததற்கான, ஆவணங்கள் சிக்கியதாக, தகவல் வெளியானது; தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இம்முறையும் தவறு செய்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தவறு செய்த ஒருவருக்காக, தவறே செய்யாத பலர், தண்டனைக்கு உள்ளாகினர். மீண்டும், ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, குற்றச்சாட்டுக்கு உள்ளான கட்சிகள் சார்பில், அதே வேட்பாளர்கள் களம் இறங்கினர்.தற்போது, மூன்றாவது முறையாக, வேலுார் தொகுதியில், அதே காட்சி அரங்கேறி உள்ளது.


தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் மகனும், தி.மு.க., வேட்பாளருமான, கதிர் ஆனந்த் வீடு, கல்லுாரி மற்றும் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.சோதனையில், வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த, ரூபாய் நோட்டு கட்டுகள், தி.மு.க., வேட்பாளருக்கும், பணம் வைத்திருந்தவருக்கும் இடையே நடந்த, தொலைபேசி தொடர்புகள் குறித்த ஆதாரங்கள்; கனரா வங்கியிலிருந்து பணம் பெறப்பட்டதற்கான ஆதாரங்கள் என, அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.


இதன் தொடர்ச்சியாக, வேலுார் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.இம்முறையும், தவறு செய்த ஒரு வேட்பாளரால், தவறு செய்யாத மற்ற வேட்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்பதை, இந்திய சட்டங்கள் வலியுறுத்துகின்றன. ஆனால், தேர்தல் ஆணையம் நடவடிக்கையால், தவறு செய்த ஒருவருக்காக, தவறு செய்யாத நிரபராதிகள் தண்டிக்கப்படுவது தொடர்கிறது.

இதற்கு தீர்வு காணவும், பண பட்டுவாடா பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தவறு செய்த வேட்பாளர்கள், தேர்தலில் நிற்க, தடை விதிக்க வேண்டும். அவர்களை உடனடியாக, தகுதி நீக்கம் செய்து, தேர்தலை நடத்த வேண்டும்.இவ்வாறு செய்தால், தவறு செய்யாத வேட்பாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். தவறு செய்வோருக்கும், தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என்ற பயம் வரும். இதற்குரிய சட்ட திருத்தங்களை ஏற்படுத்த, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ம.அறம்வளர்த்தநாதன்
பத்திரிகையாளர்
aramnathan75@gmail.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ

    இன்று மீண்டும் நீங்கள் சொன்னது போலவே ஆகஸ்ட் 5 அன்று இடை தேர்தல் நடக்குமென தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். 3 மாதங்களாயும் இன்னும் தீர்ப்பு வரவில்லை, தி மு க மீண்டும் போட்டியிடும். யார் வேட்பாளர் என்று விரைவில் தெரியும். இதனால் யாருக்கு என்ன பலன்? குற்றவாளிகள் இன்னும் கவனமாக செயலாற்றுவார்கள் அவ்வளவு தான். தாமதாக வரும் நீதி அநீதிக்கு சமம்.

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    கதிரை தகுதி நீக்கம் செய்திருந்தால் பல பிரச்னைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் . அதுவும் திமுகவை எதிர்ப்பதா? ..உள்நாட்டு சட்டம் மட்டுமா? ..எல்லா நாட்டு சட்டத்தையும் இங்கு கொண்டு வந்து பேசுவார்கள் . போராட்டம் , கலகம் ஏற்படுத்தி கலக்கத்தை ஏற்படுத்திவிட மாட்டார்களா? அவர்கள் . அதனால் தேர்தல் ஆணையம் செய்வது சரியே என்று எடுத்து கொள்வோம். முடிந்தால் நடு ராத்திரியே வக்கீலை கொண்டுவருவார்கள் . நீதிபதியை வீட்டுக்கே கொண்டு வந்து நீதியை அவர்களே சொல்லி கொள்வார்கள் . அடுத்தவன் செய்தால் மிரட்டி வாங்கப்பட்ட நீதி என்றும் சொல்லி கொள்வார்கள். ...பெரியார் சொன்னது போல காட்டு மிராண்டி சிந்தனை உள்ளவர்கள் பலர் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement