Advertisement

போட்டி... போட்டி...

வாழ்வின் முதற்கட்ட படிப்புத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் என்ற கணக்குப்படி, 7.5 லட்சத்திற்கு அதிகமான மாணவ - மாணவியர், வாழ்வின் அடுத்த முக்கியப் பாதைக்கு பயணிக்கின்றனர். பிளஸ் 2 தேர்வு என்பது, மாணவப் பருவத்தின் அதிக காலத்தை எடுத்துக் கொள்ளும் முக்கிய பகுதி.இத்தேர்வில், தமிழகத்தில் தேர்ச்சி, 91.3 சதவீதம் என்றாலும், மாணவியர் வழக்கப்படி முந்தியிருப்பது, தொடர் அறிகுறி. இத்தேர்வில், 1,281 பள்ளிகள் சதம் அடித்துள்ளன.சில காலமாக, கன்னியாகுமரி, விருதுநகர் போன்ற மாவட்டங்கள், தேர்ச்சியில் முதல் இடங்களைப் பிடிப்பது மாறி, திருப்பூர், ஈரோடு, பெரம்பலுார் மாவட்டங்கள், முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன. இதில், திருப்பூர் தொழில் நகரம், ஈரோடு, பெரம்பலுாரில் அதிக அளவு விவசாயம், சிறு குறு தொழில்கள் உள்ளன. இதில் வாழும் குடும்பங்களில் உள்ள இல்லத்தரசிகளில் பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் பலர் உண்டு.ஆகவே, பிளஸ் 2 தேர்வு பின்னணியில், மாணவ - மாணவியர் படிக்கும்போது கண்காணித்து, சீரான திசைக்கு மாற்றும் ஆற்றல்மிக்க குடும்பங்கள் அதிகரித்து வருவது, இதன் அறிகுறி எனலாம். கிருஷ்ணகிரி, விழுப்புரம் மட்டும் அல்ல, வேலுாரும் பின் தங்கியிருக்கிறது. இதுகுறித்து ஆய்வு தேவை. மிகவும் முன்னேறியதாக கருதப்படும் பாண்டிச்சேரியும், 91 சதவீதம் மட்டுமே தேர்ச்சி கொண்டிருக்கிறது.வழக்கமான நடைமுறையில் உள்ள கேள்வித்தாள் தயாரிப்பில் இருந்து, சற்று மாறுபாடான பாடத்திட்ட பின்னணிக் கேள்விகள் என்பது, சதம் அடிக்கும் வாய்ப்பைக் குறைத்திருக்கிறது. அதனால், சில சிறப்பு அந்தஸ்துடன் இருந்த தனியார் பள்ளிகளில், சதம் அடிப்பது குறைந்திருக்கிறது. அதன் எதிரொலியாக, சென்ற ஆண்டு, 1,907 ஆக இருந்த சதம் அடித்த பள்ளிகள் எண்ணிக்கை, 1,281 ஆக குறைந்திருக்கிறது.அதேபோல் எல்லா பாடங்களும், 100 மதிப்பெண் என்ற மாற்றம் இனி, 'ரேங்க்' என்ற மற்றொரு தடையை, மாணவ - மாணவியர் மீது சுமத்தாது. இது, மேற்படிப்பு போட்டியில் சரியான சூழ்நிலையை உருவாக்கும்.இதனால், மேற்கல்வி பயிலும் பலர், தங்களுக்கு ஆர்வம் மிக்க, அதிக வாய்ப்புகளை உருவாக்கும் பட்ட அல்லது பட்டய படிப்புகளை தேர்வு செய்ய முடியும். பொறியியல் படிப்பில், 'கட் - ஆப்' மதிப்பெண் குறையும் பட்சத்தில், பல புதிய படிப்புகளை தேர்வு செய்யும் முன்பாக, அதனால், அடுத்த மாற்றத்திற்கு, மாணவ - மாணவியர் தாக்குப் பிடிப்பரா என்பதை, எளிதில் பெற்றோர் முடிவு செய்யலாம்.தவிரவும், இத்தடவை பொறியியல் கவுன்சிலிங்கை, தொழில்நுட்பக் கழகம் நடத்த முன்வந்திருக்கிறது. அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா, அப்பல்கலையின் கல்வித் தரத்தை முன்னேற்ற, அதிக முயற்சிகள் எடுத்து வருவது, இதற்கு ஒரு காரணம்.மேலும், பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பம், இணையதளப்பதிவு மூலம் நடக்கிறது. கிராமப்புற பள்ளி மாணவர்கள், இதற்கான வசதிகளை உரிய ஏற்பாட்டுடன் தயார் செய்வதுடன், அவர்கள் மொபைல் எண் இணைப்பும், இந்தக் கவுன்சிலிங் முடிவடைவது வரை தெளிவாக இருந்தால், பிரச்னைகள் குறையும்.அதைவிட, பொறியியலில் புதிது புதிதாக, அவசரப்பட்டு அரசுக் கல்லுாரிகளில் அல்லது சில தனியார் கல்லுாரிகளில் ஆர்வத்தில் சேர்ந்தால், அந்தப் படிப்பை முறையாக முடித்த பின், என்ன வேலை கிடைக்கும் என்பதையும், ஓரளவு முடிவு செய்து கொள்ள வேண்டும்.அதேபோல், பி.காம்., பட்டப்படிப்புக்கு இருக்கும் ஆர்வம், கணிதம், இயற்பியல் போன்ற படிப்புகளுக்கு, மாணவ - மாணவியரிடம் காணோம். இது, சரியானது அல்ல. பி.காம்., படித்த அனைவரும், 'சி.ஏ.,' என்ற, கணக்கு தணிக்கை படிப்பில் வெற்றி பெறுவதற்கு, 'பகீரத முயற்சி' தேவை. எல்லாருக்கும், வங்கி வேலை கிடைக்காது.ஏற்கனவே, பள்ளிகளில் ஆசிரியர்கள் பலர், தங்கள் கல்வித் தகுதியை அதிகரித்து, மேல்வகுப்பு ஆசிரியர்களாக மாறியது உண்டு. அதற்கான காலம், இனி முடிவடையும். ஏனெனில், இனி முதுகலைப் பட்டப்படிப்பு படித்த பலர், பள்ளி ஆசிரியருக்கான தேர்வை எழுதி, போட்டியில் இடம் பிடிக்கலாம். மேலும், பல்வேறு தொழில்களில், குறிப்பிட்ட திறன் தேவையுடன், 'டிஜிட்டல் திறன்' அவசியமாகும்.இச்சூழ்நிலையில், மேற்படிப்பில் அதிக முன்னேற்றம், வெற்றி காணும் போது, நம் மாநில இளைஞர்கள், ஆந்திரா, கர்நாடக மாநிலத்தவர்களுடன் ,அதிக அளவு போட்டியிட வேண்டி வரும். மொத்தத்தில், அதிக போட்டி, அதிக அளவு திறன் மேம்பாடு ஆகிய எல்லாவற்றுடன், தயார் நிலைக்கு ஆளாக வேண்டிய காலத்தில், இவர்கள் அடியெடுத்து வைக்கின்றனர் என்பதை, தெளிவுப்படுத்த வேண்டியது அத்தியாவசியமாகும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement