Advertisement

நதிகளை இணைப்பது சாத்தியமே!

நதிகளை இணைப்பது சாத்தியமே!

ஜெ.ஜெரால்டு மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி, 'நதிகளை இணைப்பது சாத்தியமில்லை. ஒரே மாநில நதிகளை மட்டும் தான், இணைக்க முடியும்' என, கருத்து கூறியுள்ளார்.தற்போதைய வறட்சி சூழலில், நதிகள் இணைப்பு, மிக அவசியமானது. அதற்கு அரசியல்வாதிகள், இடையூறு ஏற்படுத்தக் கூடாது.கடந்த, 2002ல், ஜனாதிபதியாக, அப்துல் கலாம் பொறுப்பேற்ற உடன், நதிகள் இணைப்பில் முனைப்பு காட்டினார். அவரின் அறிவுறுத்தலின் படி, அப்போதைய பிரதமர், வாஜ்பாய், தனி குழு அமைத்தார்.அந்த குழு, 'நதிகள் இணைப்பை, இரண்டு பிரிவுகளாக மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்திற்கு, 5 லட்சம் கோடி ரூபாய் செலவாகும்' என, அறிக்கை சமர்ப்பித்தது.இத்திட்டத்திற்கு, நாடு முழுவதும், பலர் ஆதரவு தெரிவித்தனர். செல்வந்தர்கள் பலரும், நிதி அளிக்க முன் வந்தனர். நடிகர் ரஜினி, 1 கோடி ரூபாய் தருவதாக, அறிவித்தார்.நதிகள் இணைப்பு திட்டம், இன்று வரை, பேச்சளவில் மட்டுமே உள்ளது. ஒரு மாநிலத்தில் வறட்சி; இன்னொரு மாநிலத்தில், வெள்ளம் என்ற நிலையை மாற்ற வேண்டுமானால், நதிகளை இணைப்பது தான், ஒரே தீர்வு.இத்திட்டம் குறித்து, மாநில முதல்வர்கள் கூட்டம் நடத்தினால், அனைவரும் ஒத்துழைப்பர்.நம் மக்கள், 'முடியாது' என நினைத்திருந்தால், இந்தியாவிற்கு சுதந்திரமே கிடைத்திருக்காது. எனவே, இந்திய மக்கள் அனைவரும், ஒருமித்த கருத்துடன் ஒத்துழைத்தால், நதிகளை இணைப்பது சாத்தியமே!

மக்களுக்குமரியாதைகொடுங்கள்!பொன்.கருணாநிதி, கோட் டூர், பொள்ளாச்சி, கோவையிலிருந்து எழுதுகிறார்: அரசு அலுவலகத்திற்கு வரும் மக்களை, நாற்காலியில் உட்கார வைத்து பேசும் நாகரிகம், பல உயர் அதிகாரிகளிடம் இல்லை என்பது, உண்மை. மக்கள் வரிப்பணத்தில் தான், ஊதியம் பெறுகிறோம் என்பதை, அவர்கள் மறந்து விடுகின்றனர்.தமக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களை, நிற்க வைத்து பேசினால் தான், கவுரவம் என, சில அதிகாரிகள் நினைக்கின்றனர்.ஊழியர் சங்கப் பிரதிநிதிகள், நாற்காலியில் உட்கார்ந்து பேசுவதை, அவர்கள் விரும்புவதில்லை. எனவே, சங்கப் பிரதிநிதிகள் வரும்போது, இவர்கள் நின்றபடியே பேசுவர். அதிகாரி நிற்கும் போது, நாம் உட்காருவது அநாகரிகம் என, சங்க பிரதிநிதிகளும் நின்றபடியே பேசுவர்.மக்களிடம் அநாகரிகமாக நடக்கும், அதே அதிகாரிகள், அலுவகத்திற்கு வரும் ஒப்பந்ததாரரை வரவேற்று, உட்கார வைத்து, மகிழ்ச்சியுடன் பேசுவர். காரணம், 'கமிஷன்' என, அவர்கள் வழங்கும் லஞ்சம்.வட மாநிலத்தில் இருந்து, இங்கு வந்து பணியாற்றும் அலுவலர்களில் பலர், மனித தன்மையோடு நடந்து கொள்கின்றனர்.தற்போது வேளாண் துறை செயலராக உள்ள, ககன்தீப் சிங் பேடி, தன்னை சந்திக்க வருவோரை வரவேற்று, உட்கார வைத்து, பிரச்னையை பொறுமையோடு கேட்டு, அதற்கு உடனடி தீர்வு வழங்குகிறார்.இன்று பணியில் உள்ள, ஐ.ஏ.எஸ்., அலுவலர்களில் இறையன்பு, சகாயம், உதயசந்திரன் போன்ற சிலர், மக்களை மதித்து, அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்கின்றனர்.அதே போல, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அலுவலர்களான முத்துகுமாரசாமி, தீனபந்து, சிவகாமி போன்ற பலர், பணிக் காலத்தில், மக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர்.அரசு அதிகாரிகளே... மக்கள் தான், உங்கள் எஜமான்; அவர்களுக்கு, உரிய மரியாதையை கொடுங்கள்.

'கீப் இட் அப்''தினமலர்!'எஸ்.மூர்த்தி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: கடந்த, ஏப்., 7ல், இதே பகுதியில், 'சபாஷ் போடலாம் உங்களுக்கு' என்ற கடிதம் வெளியானது. மறுநாள், மதுரை வாசகர் ஒருவர், 'அனைவரும் சபாஷ் போடுவோம்' என, தன் கருத்தை பதிவு செய்திருந்தார்.கொள்ளை அடிப்போர், ஏமாற்றுக்காரர்கள், இன்று அதிகரித்து விட்டனர். அவர்களை, சட்டத்தின் வழியே தண்டிக்க முடியாமல் போவதை நினைத்து, மக்கள், மனம் வெதும்பி கிடக்கின்றனர்.திருடனுக்கும், கொள்ளையனுக்கும், எதற்கு மரியாதை அளிக்க வேண்டும்?சட்டத்தை ஏமாற்றி, கொள்ளையடிக்கும் ஆசாமியும், சாதாரண, '420' பேர்வழிகளும் ஒன்றே... அவன்களை, ஒருமையில் குறிப்பிடுவதில் தவறே இல்லை. அனைத்து திருடன்களும், 'அவன்... இவன்'கள் தான்!கொள்ளையனை, ஒருமையில் குறிப்பிட்டு வரும் செய்தியை படிக்கும்போது, நமக்குள், ஒரு ஆத்ம திருப்தி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.'கீப் இட் அப், தினமலர்!'

அரசு பள்ளிகளிலும்கூட்டுக் குழுஅமைக்கப்படுமா?வி.எம்.சந்தோஷம், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியத்தால், 'கல்வியில் புதுமை' என்ற தலைப்பில் அறிவிக்கப்பட்ட செய்தியைப் படித்ததும், கல்வியாளர் என்ற முறையில் மகிழ்ச்சி அடைந்தேன்.நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும், 22 ஆயிரம் பள்ளிகள், 4,500 கல்வி மாவட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.இத்திட்டத்தில், ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், 'கூட்டு கல்வி குழு' அமைக்கப்படும். ஒரு குழுவில், ஐந்து பள்ளிகள் இடம் பெற்றிருக்கும்.அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், தேவையான வசதிகள் இருக்காது. எனவே, வசதிகள் நிரம்பப் பெற்ற பள்ளிகளில் உள்ள ஆய்வகம், நுாலகம், மைதானம், கல்வி உபகரணங்கள், கலை அரங்கு உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ளலாம்.இதனால், அனைத்து மாணவர்களின், கற்றல் திறன் மேம்பட்டு, அவர்கள், சிறந்த கல்வியைப் பெறுவர். இந்த வசதி, நம் பள்ளிகளில் இல்லையே என்ற குறை இருக்காது.வசதிகள் நிரம்ப பெற்ற பள்ளியில், தங்கள் குழந்தையைச் சேர்க்க, பெற்றோர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. அத்துடன், கட்டணக் கொள்ளையும் கட்டுப்படுத்தப்படும்.ஏனெனில், எங்கு சேர்ந்தாலும், அனைத்து கற்றல், கற்பித்தல் வசதிகளையும், இக்கூட்டுக் குழு பகிர்வு மூலம் நிறைவேறப்படும்.இப்படிப்பட்ட கூட்டுக்குழு, கல்வி முறையை, தமிழக அரசின் தொடக்கப் பள்ளி முதல், மேனிலைப் பள்ளி வரை அமல்படுத்த, நம் இடைநிலைக் கல்வி வாரியம் அனுமதி வழங்கலாம்.தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில், கற்றல், கற்பித்தலுக்கு போதிய வசதிகள் இல்லை. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழக அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறன் உயரும்.

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • Bhaskaran - Chennai,இந்தியா

  லஞ்சம் வாங்கியவனுகளுக்கு மரியாதை எதுக்கு சிலவங்கிகள் கடன்வாங்கிக்காட்டாதவர்களின் படத்தை நாணயம் தவறியவர்கள் என்று நாளிதழ்களில் விளம்பரப்படுத்துவதுபோல் இங்ரஹபடத்தில் உள்ள அயோக்கியர்கள் லஞ்சம் வாங்கி கையும் களவுமாகப்பிடிப்பட்டவர்கள் என்று கட்டம்கட்டி அனைத்துநாளிதழ்களும் வெளியிட்டால் ஓரிரு ஆண்டுகளில் மானம் உள்ளவர்கள் லஞ்சம் வாங்கமாட்டார்கள்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமியும் மக்களின் குறைகளை தன்னால் இயன்றவரை தீர்த்துவைக்க முயற்சி செய்கிறாரவாழ்த்துக்கள்

 • S Jagannathab - Chennai,இந்தியா

  Despite hectic effort by Election commission to achieve 100% voting, it is sad to see that even so the called literate constituencies like Chennai South and Chennai Central have not touched the 60% mark due to indifferent attitude of people. The EC should seriously consider bringing in sui legislation for imposing fines on those who have not voted and denying Govt concessions and subsidies to them till such time they vote in in the subsequent election

 • venkat Iyer - nagai,இந்தியா

  திரு.பொன்.கருணாநதி அவர்கள் தங்களுக்கு தெரிந்த நேர்மையாகவும்,மக்களை மதிக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கூறியுள்ளார்.தற்போது இருக்கும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஜயராகவன் தன்னுடைய நேர்மையினால் மூன்று ஆண்டுகளில் மூன்று மாவட்டங்களுக்கு மாற்றலாகியுள்ளார். திருவள்ளூர்,மதுரை இப்போது தண்ணி இல்லாத நாடான இராமநாத புரத்திற்கு மாற்றல் ஆகியுள்ளார்.இவர் மக்கள் குறை தீர்க்கும் நாளில்,பணியை சரியாக செய்யாத அரசு ஊழியர்களை விலாசி தள்ளிவிடுவார். முதியோர் பென்ஷன் நின்று போன முதியவர்கள் முறையிட்டால் ,சம்மந்தப்பட்ட ஊழியர் ஒரு வழி ஆக்கிவிடுவார். அரசு ஊழியர்களுக்கு எதிரி,மக்களின் ஆட்சியர் என்ற பெயர் அவருக்கு உண்டு. அமைச்சர்களின் அச்சுறுத்தலுக்கு எதற்கு பயப்பட வேண்டும் என்று துணிந்து கேட்கின்றார்.ஆனால் நமது அரசியல்வாதிகள் நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது நடத்தும் போர் எல்லையற்றது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement