Advertisement

'பாடம்' கற்பிக்க வேண்டும்!

'பாடம்' கற்பிப்பிக்க வேண்டும்!


எஸ்.மங்கையர்கரசி, நெய்வேலி, கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: காங்., தலைவர் ராகுல், இந்த லோக்சபா தேர்தலில், அமேதி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இரண்டிலும் வெற்றி பெற்றால், ராகுல், எந்த தொகுதியை ராஜினாமா செய்வார்?வேட்பாளர், இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று, ஒன்றை ராஜினாமா செய்தால், அது, அவரை நம்பி ஓட்டளித்த மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகாதா?இது ஒருபுறம் இருக்க, ராஜினாமா செய்த தொகுதிக்கு, மறுதேர்தல் நடத்த ஆகும் செலவை, அந்த வேட்பாளர் ஏற்பாரா? அந்த செலவும், பாமர இந்தியனின் தலையில் தானே விழும். ராகுல், தன் பராக்கிரமத்தை காண்பிக்க, தேர்தல் களம் தான் கிடைத்ததா?இரு தொகுதிகளில் போட்டியிட்டவர்களில், பல உதாரணர்களைக் காட்டலாம். இத்தனை நாட்களாக, இது குறித்து, வாக்காளர்களாகி நாம் வாயே திறந்ததில்லை.இனி, இரு இடங்களில் நிற்கும் வேட்பாளர்களை, இரு தொகுதிகளின் மக்களும் நிராகரிக்க வேண்டும். அது தான், அவர்களுக்கு சரியான பாடமாக அமையும்.

வாக்காளர்கையில் முடிவு!
டி.என்.சுவாமிநாதன்,சிதம்பரம், கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தி.மு.க.,வினர், இத்தனை நாள், ஹிந்து மதத்தை நையாண்டி செய்துவிட்டு, தற்போது, தேர்தலுக்காக, 'நாங்கள், ஹிந்து மத விரோதிகள் அல்ல' என, சப்பைகட்டு கட்டுகின்றனர்.கருணாநிதி முதல், ஸ்டாலின் வரை, இதுவரை என்னவெல்லாம் பேசினர் என்பது, ஓட்டுப் போடப் போகும், ஒவ்வொரு ஹிந்துவுக்கும் தெரியும்.கடவுளை நம்பும் மனிதர், தீமை செய்ய அஞ்சுவார். 'பிறருக்கு கெடுதல் செய்தால், பாவம் சேரும்' என, பயப்படுவார். தவறு செய்பவர் கூட, சபரிமலைக்கோ, பழனிக்கோ, மாலை போட்டால், விரத நாட்கள் முடியும் வரை, புனிதத்தை கடைபிடிப்பர்.நாத்திகவாதிகள் அப்படி அல்ல; பழி, பாவங்களுக்கு அஞ்ச மாட்டார்கள். அவர்களின் செயலில், சுயநலமே மேலோங்கி இருக்கும்.'நாத்திகவாதியான, கருணாநிதியின் வீட்டிற்கு, புட்டப்பர்த்தி சாய்பாபா வந்தார்' என, பெருமைப்படும், தி.மு.க.,வினரே... அவர், தமிழகத்தின் தாகம் தணிக்க, ஆந்திராவில் இருந்து, தண்ணீர் கொண்டு வர, ஏற்பாடு செய்தார் என்பதை, புரிந்து கொள்ளுங்கள்.நாத்திகம் பேசும் அரசியல்வாதிகள், தமிழகத்திற்கு, என்ன நன்மை செய்தனர்? தன் பிறந்த நாளுக்கு கூட, உண்டியல் வைத்து, தொண்டர்களிடம் பணம் வசூலித்து, குடும்பத்தையும் வளர்த்தனர்.'எந்த பாவச் செயலும் செய்யலாம்; யாருக்கும் அஞ்ச மாட்டேன்' எனும், தி.மு.க.,வினர், நேர்மையான ஆட்சியை எப்படி தருவர்?கடந்த, தி.மு.க., ஆட்சியில் நடந்த ஊழல், கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு போன்ற, மக்கள் விரோத செயல்கள் மீண்டும் தலை துாக்க வேண்டுமா என்பதை, வாக்காளர்கள் முடிவு செய்ய வேண்டும்.

கருப்பு பணம்முழுவதுமாகஒழியவில்லை!

வி.எம்.சந்தோஷம், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: லோக்சபா தேர்தலையொட்டி, இந்தியா முழுவதும், கணக்கில் வராத, 5,500 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை, தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.பிரதமர் மோடி, 2016ல், 'கருப்புப் பணத்தை மீட்டெடுக்கும் வகையில், பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, அறிவித்தார்; இது, நாட்டில் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியது.கருப்பு பணம் பதுக்கி வைத்திருந்த சிலர், ஆங்காங்கே சிக்கினர். பலர், கருப்பு பணத்தை, துண்டு துண்டாக வெட்டி, மூட்டையில் கட்டி, ஆற்றில் வீசினர்.ஆனால், கருப்புப் பணம் முழுவதுமாக அழிக்கப்படவோ, மீட்கப்படவோ இல்லை என்பதற்கு, தேர்தல் பறக்கும் படை, பறிமுதல் செய்துள்ள பணமே சாட்சி.இன்னும், கோடிக்கணக்கான ரூபாய் கருப்புப் பணம், சிலரிடம் பதுங்கி இருக்கிறது. அவற்றை மீட்க, மத்திய அரசு, என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?


மக்கள் மறக்காதிருக்கவேண்டும்!

மு.நாச்சியப்பன், காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: 'தேர்தல் நேரத்தில், உச்சகட்ட முறைகேடுகள், தமிழகத்தில் தான் நடக்கின்றன' என்பது, வேதனையான செய்தி; இது தான், தமிழகத்திற்கு, திராவிடக் கட்சிகள் இரண்டும் தந்த பரிசு.முன்னாள் முதல்வர், பக்தவத்சலம், 'தி.மு.க., ஒரு விஷக் கிருமி' என்றார்; தி.மு.க.,வை பின்பற்றி வந்த, அ.தி.மு.க.,வும், விஷக் கிருமி தான்.பிரசாரத்தில் பொய்களை கூறி, தேர்தலில் என்று, காமராஜர் தோற்கடிக்கப்பட்டாரோ, அன்றே, தமிழகத்திற்கு கேடு காலம் துவங்கி விட்டது. அன்றிலிருந்து, பல மோசமான காரியங்களுக்கு, தமிழகம் முன்னுதாரணமாகி விட்டது. இது தான், கருணாநிதியும், ஜெயலலிதாவும், தமிழகத்திற்கு தந்த நன்கொடைகள்.தமிழகம், பல ஆண்டுகள், கட்சிகள் கையில் இருந்தும், இன்னும், எதிலும் தன்னிறைவு இல்லை. குறிப்பாக, நீர் மேலாண்மையில், தமிழகம், ஒரு அடி கூட, முன்னேறவில்லை.ஊழல், வாரிசு அரசியல், அதிகார துஷ்பிரயோகம் என அனைத்திலும், இரண்டு கழகங்களும், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை, மக்கள் மறக்காதிருக்க வேண்டும்.


நம் சந்ததிக்குஅளிக்கும் பரிசு!

கோ.வெங்கடேசன், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டதிலிருந்து எழுதுகிறார்: 'இந்தியாவில், தேர்தல் நடத்துவது சவால் தான்' என்ற, தேர்தல் கமிஷனின் கூற்று, ஏற்கத்தக்கது தான்.அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில், இரண்டு அல்லது மூன்று கட்சிகளே உள்ளன. ஆங்கிலமே, பொது மொழியாக உள்ள நாடுகள் அவை.ஆனால், நம் இந்தியா, பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள், கலாசாரங்களை உள்ளடக்கிய, 120 கோடி மக்கள் தொகை உடைய, மிகப் பெரிய ஜனநாயக நாடு. இதில், எண்ணற்ற கட்சிகள் உள்ளன.காங்கிரஸ், பா.ஜ., ஆகிய, இரு கட்சிகள் மட்டுமே, தேசியக் கட்சிகள். கம்யூனிஸ்ட் கட்சியையும் ஓரளவு கூறலாம். மற்றவை, மாநிலக் கட்சிகளே. இவை, போலி நாத்திகவாதம், போலி மதசார்பின்மை, மொழி வெறி ஆகியவற்றை, அடித்தளமாகக் கொண்டவை.இக்கட்சிகள், கொள்ளையடித்த பணத்தில், சிறு துண்டைத் தான், ஓட்டுக்கு பணம் என, மக்களுக்கு பிச்சையிடுகின்றன.ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்தல், கொள்ளையடித்தல் போன்றவற்றில், இக்கட்சியினர் காட்டும் முயற்சியில், 1 சதவீதமாவது, நாட்டின் முன்னேற்றத்தில் காட்டியிருந்தால், நாம் முன்னேறியிருப்போம். வாக்காளர்களே... நல்லவர்களை, ஆட்சி பொறுப்பில் அமர வையுங்கள்; அது தான், நம் சந்ததிக்கு, நாம் அளிக்கும் விலை மதிப்பில்லா சொத்து.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement