Advertisement

கல்வியை பகடைக் காயாக்காதீர்!

வி.ஆர்.குமார், பாலக்காடு, கேரளாவிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியல்வாதிகளின், 'தேர்தல் அரசியலில்' சிக்கி, 'நீட்' தேர்வுக்கு படிக்க வேண்டுமா, வேண்டாமா என, குழம்பி போய் உள்ளனர், மருத்துவராகும் கனவில் உள்ள மாணவர்கள். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய அளவில் நடக்கும், நீட் தேர்வு மூலம், மருத்துவப் படிப்பிற்காக, மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மற்ற மாநிலங்களில், சத்தமில்லாமல், இந்த தேர்வு முறை நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் தான், நீட் தேர்வில், அரசியல் ஆதாயம் காண்கின்றன, கட்சிகள்.

தமிழகத்திலும், நீட் முறையில், 'மெரிட்' படி, மாணவர்கள் தேர்வாகி, கல்லுாரிகளுக்கு நன்கொடை தராமல், எம்.பி.பி.எஸ்., படித்து வருகின்றனர். தற்போது, தேர்தல் நேரம் என்பதால், கட்சிகள் அதை, தேர்தல் கோஷமாக மாற்றியுள்ளன. அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'தமிழகத்திற்கு, நீட் தேர்வுக்கு, விலக்கு கேட்கப்படும்' என, அறிவித்தது. தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'நீட் தேர்வு, ரத்து செய்யப்படும்' என அறிவித்தது. நீட் தேர்வு குறித்து, மத்திய அரசு தான், முடிவு எடுக்க வேண்டும். பா.ஜ., தேர்தல் அறிக்கையில், இது பற்றி எதுவும் கூறவில்லை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், 'நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மாநிலங்களில், நுழைவுத் தேர்வு நடத்தப்படும்' என, அறிவித்துள்ளது.

காங்கிரசின் கூட்டணி கட்சியான, தி.மு.க.,வின் கோரிக்கையே, 'நுழைவுத் தேர்வு வேண்டாம்' என்பது தான். நீட் வருவதற்கு முன், தமிழகத்தில், மருத்துவ படிப்பிற்கு நுழைவுத் தேர்வு இருந்தது. அதை நீக்கியது, தி.மு.க.,ஆட்சி தான். அறிவிக்கப்பட்டபடி, இந்தாண்டிற்கான, நீட் தேர்வு, மே, 5ல், நிச்சயம் நடக்கும். ஆனால், எழுதிய நீட் தேர்வுப்படி, ஜூனில் அட்மிஷன் நடக்குமா என்பது தான், புதிர். ஏனெனில், மத்தியில், காங்., ஆட்சி அமைந்தால், நீட் தேர்வை ரத்து செய்யும். இந்த விவகாரம், இப்போதே சிந்தனையில் ஓடுவதால், தேர்வுக்கு படிப்பதில், மாணவர்கள் குழம்பி போய் உள்ளனர்.

'எப்படியும், நீட் தேர்வு எழுதி, வெற்றி பெற வேண்டும்' என, பள்ளிக்கு செல்வது போல், பயிற்சி மையங்களில், லட்சக்கணக்கான ரூபாய் கட்டணம் செலுத்தி, ஓரிரண்டு ஆண்டாக, மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களும், தொடர்ந்து படிப்பதா, பணத்தை செலவு செய்வதா என்ற, தவிப்பில் உள்ளனர். மாணவர்களே... சமூகத்திற்கு, ஆரோக்கியமான எதிர்காலம் அமைய வேண்டும் என்ற, உன்னதமான குறிக்கோளுடன் நீங்கள், மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறீர்கள்.

தேர்தல் அரசியலுக்காக, நீட் தேர்வில், தி.மு.க.,வும், காங்கிரசும், உங்கள் கண்ணைக் கட்டி, கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகின்றன. இந்தக் கண்கட்டை அவிழ்த்து, தெளிவான பார்வைக்கு தயாராகுங்கள் மாணவர்களே! உங்கள் கல்வியை பகடையாக்கி, ஓட்டு அள்ளத் துடிக்கும், இந்த பசப்பாளர்களை நம்பாதீர்கள். உங்கள் அறிவை மேம்படுத்த செய்யும், அருமையான சந்தர்ப்பத்தைத் தட்டிப் பறிக்கும், இந்த பசப்பு கட்சிகளுக்கு, ஓட்டுப் போடப் போகிறீர்களா... சிந்தியுங்கள்!

***

வாக்காளர்களே, நல்ல முடிவு எடுங்கள்!ம.கதிர்மணி, மாச்சம்பாளையம், கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எதற்கெடுத்தாலும், பிரதமர் மோடியை குற்றம்சாட்டுவது, திட்டித் தீர்ப்பது, தற்போது, 'பேஷனாகி' விட்டது. அவரது ஆட்சிக்கு முன், இந்தியாவில் நிகழாத கெட்ட சம்பவங்கள் எல்லாம், மோடி ஆட்சியில் தான் நடப்பது போல, மண்ணை வாரித் துாற்றி சிலர், மனம் குளிர்ந்து வருகின்றனர். அவர்கள் கூற்றுபடி, 2014, மே 26க்கு முன், இந்திய பிரஜைகள் அனைவருமே, வசதி படைத்தோராக இருந்தனர். பெட்ரோல் விலை, லிட்டர், 10 ரூபாய்க்கு விற்றது.

மும்பை தெருக்களில், தள்ளுவண்டி வியாபாரம் செய்து வந்த, அம்பானியும், அதானியும், மோடி ஆட்சியில் தான், தொழிலதிபர்களாக மாறினர். சீனா மற்றும் பாக்., நாடுகளின் அதிபர்கள், இந்தியாவுடன் நட்புறவு கொண்டிருந்தனர். காஷ்மீர் பிரச்னை ஏற்படவில்லை; பயங்கரவாதிகள், தங்கள் கைகளில், அமைதி புறாக்களுடன் காட்சியளித்தனர். வெளிநாட்டு வங்கிகளில், இந்தியர்களின் கறுப்பு பணம் பதுக்கப்படவில்லை.

விவசாயிகள் தற்கொலையே செய்யவில்லை. தண்ணீர் பிரச்னை இன்றி, தமிழக விவசாயிகள், முப்போகம் விவசாயம் செய்து, மகிழ்ந்து வாழ்ந்தனர். இது போன்ற, எண்ணற்ற கட்டுக் கதைகளை, பொய் வியாபாரி கள், அவிழ்த்து விடுகின்றனர். இதையெல்லாம், நாம் நம்ப வேண்டும் என, சமூக வலைதளங்களில், பிரசாரம் செய்கின்றனர். வாக்காளர்கள், உண் மை என்ன என்பதை உணர்ந்து, இந்த தேர்தலில், நல்ல முடிவெடுப்பர் என்பது நிச்சயம்.

***

சாதனைகளை சொல்லக் கூடாதா?முனைவர் ரா.நரசிம்மன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிரதமர் நரேந்திர மோடியின், வாழ்க்கை வரலாற்று படத்தை வெளியிடுவதற்கு, தேர்தல் ஆணையம், தடை செய்துவிட்டது; இதன் நியாயம், புரியவில்லை. ஊர் ஊராக சென்று, தெருமுனை மேடைகளில், அரசியல்வாதிகள் பங்கேற்று, எதிர்க்கட்சி தலைவர்களை அவமதித்து, அவதுாறாக பேசலாம்; ஆனால், ஓர் அரசியல்வாதி குறித்த படம், வெளியிடக் கூடாது என்பது, எவ்வாறு சரியாகும்?

அந்த படத்தை, அரசு, 'டிவி'யான, துார்தர்ஷனில் ஒளிபரப்ப, தடை விதிக்கலாம். ஆனால், தனியார் திரையரங்குகளிலும், 'டிவி'களிலும் ஒளிப்பரப்ப, ஏன் தடை விதிக்க வேண்டும்? தெருமுனைகளில், நம் விருப்பமின்றியே, அரசியல்வாதிகள் சத்தம் போடுகின்றனர். அதை தேர்தல் ஆணையம், தடுப்பதில்லை. வாக்காளர்ககளை வற்புறுத்தி, யாரும், திரையரங்கிற்கு அழைத்து செல்ல முடியாது. ஆனால், திரையரங்களில் படத்தை வெளியிட, தடை விதித்துள்ளனர்.

அதேபோல, 'விண்வெளி ஆயுத சாதனையைக் கூட, பிரதமர் அறிவிக்கக் கூடாது' என, சிலர் கூறுகின்றனர். நிதித் துறை, ரயில்வே, சுகாதாரம், உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து, எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்யலாம். ஆனால் ஆளுங்கட்சி, ஆட்சியின் சாதனையை சொல்லக் கூடாதா? தேர்தல் ஆணையத்தின், 'நேர்மை'யான நடவடிக்கைகள், வாக்காளர்களுக்கு புரியவில்லையே!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Ramesh - coimbatore,இந்தியா

    நல்லவர்களுக்கு வோட்டளிப்போம் நம் தொகுதியில் போட்டியிடும் ஒரு சில நல்லவர்களை நமக்கு தெரியும். ஆனால் வாக்குச்சாவடியில் கடைசி நிமிடத்தில் மன சஞ்சலம். நான் இவருக்கு வோட்டு போடுவதால் இவர் என்ன ஜெயித்துவிடவா போகிறார் ? எதற்கு என் வோட்டை வீண் செய்ய வேண்டும் என்று ஜெயிக்கிற கட்சிகளுக்கு நம்ம வோட்டை போட்டு விட்டு வந்து விடுகிறோம். இது சரியா ? பகவத் சிங்கும் வாஞ்சி நாதனும் பிரிடிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து தங்கள் உயிரை பணயம் வைத்தபோது, தங்கள் தியாகத்தால் மறுநாள் ஆங்கிலேயர் நாட்டை விட்டு ஓடி விடுவார்கள் என்று நினைத்தா போராடினார்கள்? தங்கள் போராட்டத்தால் ஆங்கிலேயருக்கு பெரிய நஷ்டம் எதுவும் ஏற்பட போவதில்லை என்பது அவர்களுக்கு தெரியாதா ? ஆனால் நடந்தது என்ன? அவர்களை போன்ற தனி மனிதர்களின் எதிர்ப்புதானே மாபெரும் சுதந்திர போராட்ட எழுச்சியாக மாறி இன்று நாம் சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டிருக்கிறோம். நாம் நல்லவர்களுக்கு போடும் வோட்டினால் இன்று அவர்கள் ஜெயிக்காமல் போகலாம். அடுத்த தேர்தலிலும் இதே நிலை தொடரலாம். ஆனால் உங்கள் முயற்சிக்கு எந்த பலனும் இருக்காது என்று நினைக்கிறீர்களா ? அரசியல் கட்சிகள் எப்படி வேட்பாளர்களை தேர்தெடுக்கிறார்கள்? அவர்களுக்கு என்று உள்ள வோட்டு வங்கியை பற்றி அவர்கள் பெரிதும் கவலைபடுவது இல்லை. ஒரு கழுதையை நிறுத்தினாலும் அவர்கள் சின்னத்தில் அவர்களுடைய வோட்டு வங்கி விழுந்து விடும். அரசியல் கட்சிகள் எண்ணமெல்லாம் மற்ற வாக்குகளை எப்படி கவரலாம் என்பதில்தான் இருக்கும். நல்லவர்களுக்கு தொடர்ந்து வோட்டு எண்ணிக்கை அதிகரித்து வந்தால், நிச்சயம் அரசியல் கட்சிகள் அதை அலட்சியம் செய்ய இயலாது. இந்த வோட்டுகளை கவர, நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து நிறுத்த முயல்வார்கள். இன்று அரசியலில் நல்லவர்கள் மிக குறைவாக இருப்பதே அவர்களால் எதுவும் உருப்படியாக செய்ய முடியாமல் போக காரணம். நல்லவர்கள் அதிகரித்தால் நிச்சயம் அரசியல் சாக்கடை நிலை மாறும். நீங்களும் நானும் அரசியலில் நிற்கும் துணிவு கிடையாது. குறைந்தபட்சம் நிற்கும் நல்லவர்களுக்காவது வோட்டு போட்டு நம்ம கடமையை செய்வோமே. இது மிக அவசியம். நம் பிள்ளைகள் IAS/IPS படித்துவிட்டு என்ன செயகிறார்கள் ? நாம் தேர்தெடுக்கும் தகுதியற்ற அரசியல்வாதிகளுக்குதானே சல்யூட் அடிக்கிறார்கள் இந்த நிலை மாற வேண்டாமா ? வரும் தேர்தலில் நல்லவர்களை அடையாளம் கண்டு அவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும், தனியாக நின்றாலும் தயங்காமல் வோட்டளிபோம்.

  • venkat Iyer - nagai,இந்தியா

    நீட் தேர்வு மாணவர்களின் அறிவுத்திறனை பரிசோதிக்கும் தேர்வாகும். மருத்துவர்களுக்கு இருக்க வேண்டிய மனநிலையை கண்டுபிடிக்கும் தேர்வாகும். ஒரு வேளை தமிழகத்தில் நீட் தேர்வு இல்லாமல் மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், அத்தகைய மாணவர்களிடம் மருத்துவம் பார்க்காமல் இருப்பது நல்லது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement