Advertisement

கொளுத்தும் வெயில் கற்றுத் தரும் பாடம்!

ஒரு பக்கம், மொத்தம் உள்ள லோக்சபா தொகுதிகளில், ஆறில் ஒரு பங்கு ஓட்டுப்பதிவு முடிந்தாலும், இன்னமும் ஒரு மாதத்திற்கு மேல், முழு முடிவுகள் வர காத்திருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில், 18ம் தேதியுடன், தேர்தல் களேபரம், கிட்டத்தட்ட முடிந்து விடும். அதற்குப் பின், எஞ்சிய நான்கு சட்டசபை தொகுதிகளின் ஓட்டுப்பதிவு, தனியாக நடக்கிறது. சில முக்கிய விஷயங்கள் இத்தேர்தலில் அதிகம் அலசப்படாவிட்டாலும், இந்த நுாற்றாண்டின் செழுமைக்கு உத்தரவாதம் தரும் வகையில், அடுத்த ஆட்சி மத்தியில் அமைய வேண்டியது அவசியம். ஏனெனில், சித்திரை மாதம் முதல் வாரத்தில், நம் மாநில தேர்தல் முடிந்து விடுவதால், கொளுத்தும் வெயில், அதற்கு பின் இன்னமும் தீவிரமாகும் போது, அதிக பரப்புரைக்கு வேலை இல்லை.
ஆனால், இத்தேர்தல் முடிவுற்ற பின், தமிழக அரசு, சில விஷயங்களில் தன் அணுகுமுறையை, தெளிவாக்க வேண்டிய கட்டாயம் வந்து விடும். இப்போதைக்கு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில், வழக்கத்தை விட, 2 முதல், 4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகமாக இருக்கிறது. குமரி உட்பட, சில தென்கோடி மாவட்டங்களில், ஆறுதல் மழை பெய்திருக்கிறது. இருந்தாலும், கட்சிகளின் தலைவர்களின் வெயில் நேர பிரசார கூட்டங்களில், பெரும்பாலான நாற்காலிகள் காலியாக உள்ளன. இவை ஒரு பக்கம் இருந்தாலும், முதல் தடவை ஓட்டளிக்கும் இளைஞர்கள் முதல், 40 வயது உள்ளவர்கள் வரை, ஜனநாயக உணர்வுடன் இத்தேர்தலில் ஓட்டளிப்பது நிச்சயம் என்பதால், வெயிலை அவர்கள் பொருட்படுத்த வாய்ப்பில்லை.
தமிழகம் சந்தித்த, 88 சதவீத மழை அளவு குறைவை அடுத்து, தேர்தல் காலம் மட்டும் அல்ல, அதற்குப் பின்னும், நம் மாநிலத்தில் ஒரு நிரந்தர அணுகுமுறை தேவை. பள்ளிகளில் மற்றும் அரசு கட்டங்களில் ஓட்டுச் சாவடி அமைவதால், குடிநீர் தேவைக்கான முன்னேற்பாடுகளை செய்தால் நல்லது. வெயில் உக்கிரம் அதிகமாக இருப்பதாலும், தமிழகத்தின் பல பகுதிகளில், போதிய மழையின்றி இருப்பதாலும், அரசுப் பள்ளிகளில், விடுமுறை கால பாடத்திட்ட வகுப்புகள் கிடையாது என்பதை, கல்வித்துறை அறிவித்து இருக்கிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், ஏப்., 19ல் வெளியாவதை, இத்தேர்தல் தடுக்கவில்லை.
இது ஒரு நல்ல முடிவு என்றாலும், கணவன், மனைவி இருவரும் வேலை பார்க்கும் சிறிய குடும்பங்கள், இத்தகவலை ரசிக்க மாட்டார்கள். அந்த அளவு மாறி விட்டது சமுதாயம். இவை எதற்காக என்றால், இன்றைய மின் தேவை, தமிழகத்தில் மாதத்திற்கு, 17 ஆயிரம் மெகாவாட் என்ற போது, வளர்ச்சி அதிகரிப்புக்கு ஏற்ப, இதன் தேவை அதிகரிக்குமே தவிர, குறையாது. மேலும், இத்தடவை தேர்தல் பரப்புரையில், பல வேட்பாளர்கள் தண்ணீர் பிரச்னை குறித்து பேச முன்வந்திருக்கின்றனர்.
சமீபத்தில், பருவகால மழை குறித்து, 'ஸ்கை மெட்' என்ற பருவநிலை அறிவிப்பு நிறுவனம், பருவமழை சுமாராகத்தான் இருக்கும் என்றது. ஆனால், அக்கருத்து, முற்றிலும் சரியானது அல்ல என்பதை, இந்திய வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தொடர் வறட்சிக்கு வாய்ப்பிலை என்பது, அதன் மையக் கருத்து. மிகப் பெரிய ஆறுகளில், அணை அமைத்து, மக்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ததும், அதை, 'நவீன கால இந்தியாவின் கோவில்கள்' என்று, நேரு வர்ணித்ததும் உண்டு. நாகரிகம் மற்றும் மக்கள் வாழ்வு, தண்ணீர் வசதி நிறைந்த இடத்தைச் சுற்றி அமைந்திருப்பதும் வரலாறாகும். ஆனால், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து, அதிகம் பேசப்படும் இந்நேரத்தில், பெரிய அணைகளில் வண்டல் தேங்கி, அணை வலுவிழந்து, நிலநடுக்கம் வந்தால் என்னாகும் என்ற கவலையும் அதிகரித்திருக்கிறது. மேலும், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில், நிலத்தடி நீரைச் சுரண்டி விட்டோம். ஆகவே, நாம் தேர்வு செய்யும் பிரதிநிதிகள், தண்ணீர்த் தேவை, மாசுபடாத சூழ்நிலையில் ஏரி, குளங்கள் பாதுகாப்பு, அதிக தண்ணீரை வீணாக்காத சேமிப்பு உணர்வு ஆகியவற்றை தெளிவாக அறிந்து, அதற்கேற்ப அரசை வழிநடத்த முன்வர வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது.Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement