Advertisement

குறை காணுவதில் தவறில்லை...

தமிழகத்தில், ஐந்து தொகுதிகளில் மட்டும் போட்டியிடும், பா.ஜ., அதன் அகில இந்திய தேர்தல் அறிக்கை மற்றும் அதில் உள்ள அம்சங்கள் பற்றி விளக்குவதற்கு, இத்தேர்தல் காலம் போதாது. அதேபோல், காங்கிரஸ் கட்சியும், அதன் தேர்தல் அறிக்கையில் முதல் தடவையாக, விவசாயிகள் உட்பட பலருக்கு, வங்கிகளில் நிதி தருவதாகக் கூறியிருப்பதை விளக்க, காலம் போதாது. ஆனால், இவை இரண்டும் தேசிய கட்சிகள்; அதிக மாநிலங்களில், வேட்பாளர்களை களமிறக்கிய கட்சிகள். அதே சமயம், நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, பாகிஸ்தான் தரும் தொந்தரவு, ஓயாத ஒன்று.
காஷ்மீர், சுற்றுலா தலம் என்பது, பலருக்கு தெரியும். ஆனால், அங்கே அம்மாநிலத்தவரைத் தவிர யாரும், ௧ சென்ட் நிலம் கூட வாங்க முடியாதபடி, விசேஷ சட்டம், 35ஏ இருக்கிறது. அது மட்டும் அல்ல, காஷ்மீர் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதி என்பதை, தினமும் சொல்லியாக வேண்டிய அவல நிலை இருக்கிறது. உலக அரங்கில், இன்னமும் சில நாடுகள், காஷ்மீர், இந்தியாவுடன் இணைந்த அங்கமாக, தங்கள் உலக வரை படத்தில் வெளியிடாத நிலை இருக்கிறது.
காஷ்மீர் இணைந்த பகுதி என்பதை நிர்ணயிக்க, சுதந்திரம் அடைந்த காலத்தில், ஏற்பட்ட மோதல்கள் ஏராளம். மன்னர், ஹரிசிங்கிடம், அதற்கான முறையான ஒப்புதல் பெற்று, சமஸ்தான இணைப்பை ஊக்குவித்த, சர்தார் படேல் முயற்சி, வரலாற்றில் இடம் பெற்றது. இன்றும், இந்தியா பல மாநிலங்களாக சிதறும் என்ற கருத்து கொண்ட சிலர், காங்கிரஸ் கட்சியில் உள்ளது துரதிர்ஷ்டம். இந்தியாவின் பெடரல் தத்துவம் என்பதும், இக்கருத்தும் முற்றிலும் வேறுபட்டது. பா.ஜ., தேர்தல் அறிக்கையில், அம்மாநிலத்திற்கு விசேஷ அந்தஸ்து தரும் அரசமைப்பு சட்ட விதி, 370ஐ அகற்றுவது, அதேபோல், அங்கு மற்ற மாநிலங்களில் உள்ளது போல், எவரும் நிலபுலன் வாங்க வசதி தேவை என்பதை, பா.ஜ., தேர்தல் அறிக்கை வலியுறுத்துகிறது.
இது எதற்காக என்றால், அக்கட்சியை நிறுவிய பெரிய தலைவர், சியம பிரசாத் முகர்ஜி, 'ஒரே நாட்டில் இரண்டு பிரதமரா? ஒரே நாட்டில் இரு தேசிய கொடிகளா?' என்ற கேள்வியை எழுப்பியவர். அதை எதிர்த்து, அம்மாநிலத்தில் அவர் போராட்டம் நடத்திய போது, சிறையில் அடைக்கப்பட்ட காலத்தில், மர்மமாக இறந்தார். அது, அன்றைய ஜம்மு - காஷ்மீர் முதல்வர், ஷேக் அப்துல்லாவால் மூடிமறைக்கப்பட்டது. அதே சமயம், பாகிஸ்தான் ஆதரவாக செயல்பட்ட, முன்னாள் முதல்வர், ஷேக் அப்துல்லாவை காங்கிரஸ் அரசு கைது செய்ய நேரிட்டது வரலாறு.
இன்றும், பா.ஜ.,தேர்தல் அறிக்கை, அந்த ஷரத்து நீக்கத்தை வலியுறுத்தும் போது, ஷேக் அப்துல்லா பேரன், முன்னாள் முதல்வர், பரூக் அப்துல்லா, 'காஷ்மீர் இந்தியாவுடன் இருக்காது' என்கிறார். அதை, காங்கிரஸ் தலைவர்கள் கண்டிக்காதது, அவர்கள் இந்த விஷயத்தில் காட்டும் மெத்தன செயல். பா.ஜ., மத்தியில், தனிப் பெரும்பான்மை ஆட்சி பெற்ற கட்சி; அடுத்த தேர்தலிலும், வெற்றி பெற முனையும் கட்சி என்ற முனைப்பில், தேசிய பாதுகாப்பு என்ற தங்கள் கருத்தை முன்வைக்கும் போது, இதை பெரிதுபடுத்த என்ன இருக்கிறது?
ஆகவே, இன்றைய தேர்தல் சூழ்நிலையில், பா.ஜ., தேர்தல் அறிக்கையில், பெட்ரோலில், கரும்புச் சக்கையில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால், 10 சதவீதம் கலப்பது, 1,400 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற சூழ்நிலையை ஏற்படுத்துவது என்ற தகவல் உள்ளது. அதைவிட, கடந்த, நான்கு ஆண்டுகளில் அசுத்தமான கங்கையை, 25 சதவீதம் துாய்மைப்படுத்திய இந்த அரசு, தண்ணீர் தேவை, அதன் பயன்பாடு குறித்த முழு அணுகுமுறைத் திட்டத்தையும் கூறியிருக்கிறது. தவிரவும், இந்த, நான்கு ஆண்டுகளில், முத்ரா கடனுதவி திட்டத்தில், பொதுத் துறை வங்கிகள் இதுவரை, 70 ஆயிரம் கோடி ரூபாய்களை தந்திருக்கின்றன.
இது, வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம், இதன் பயனாளிகள், எந்த அளவு மாத வருமானம் ஈட்டும் திறன் பெற்றிருக்கின்றனர் என்ற தகவல் தொகுப்பை, மீண்டும் மோடி ஆட்சி வந்தால் வெளியிடலாம். அதனால், திரும்பத் திரும்ப, ராமர் கோவில் கட்டுவது அல்லது ஜம்மு - காஷ்மீர் குறித்த நேரு கால குளறுபடிகளைத் தீர்க்க விரும்பும், பா.ஜ.,வின் அடிப்படைகளை, அக்கட்சி இப்போது மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் வரவில்லை. மோடி மற்றும் கட்சித் தலைவர், அமித் ஷா ஆகிய இருவர் மட்டுமே முக்கியத்துவம் பெற்றதாகக் கூறுவது, மற்ற கட்சிகளில் உள்ள வாரிசுத் தலைமை, அவர்கள் வைத்திருக்கும் அபார பணம் போன்று, இது குறை காணும் அம்சமாக இருக்கலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement