Advertisement

எல்லாமே புதிது...

லோக்சபா தேர்தல் வேகம் அதிகரித்துள்ள நிலையில், தினமும் எழும் புதுப்புது கருத்துகள் இதுவரை, 16 லோக்சபா தேர்தல்களில் காணப்படாத பல சிறப்புகளையும், புதுமைகளையும் கொண்டிருக்கிறது.பொதுவாக இதுவரை, மத்தியில் கூட்டணி அரசுகள் அமைந்திருந்தாலும், முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் காலத்திற்குப் பின், பல்வேறு கருத்து மூலங்களை கொண்டிருக்கிறது.

அதன் பின்னணியைப் பார்த்தால், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியில், கூட்டணி அமைச்சர்கள் சிக்கிய வழக்குகள், அதன் பின்னணிகளில் காங்கிரஸ் தலைமைக்கு சம்பந்தமில்லாத தனி விஷயம் என்பது, ஓர் அம்சம். மற்றது, அன்று பல்வேறு துறைகளில் இருந்த அமைச்சர்கள், இன்று தங்கள் கட்சிக்கான கொள்கை வகுப்போராக உருமாறும் போது, இதுவரை இந்தியா நடந்து வந்த பாதையில், பொதுவான ஏற்றம் கண்டதற்கு, சொந்தம் கொண்டாடுவதை மட்டும் கொள்கையாக வைத்திருப்பது வேடிக்கையானது.

ஏனெனில், பா.ஜ., தலைமையிலான வலுவான ஆட்சி, தன் பதவிக்காலம் முழுவதையும் கடந்திருப்பதும், அதில் பிரதமர் மோடி, தன் தனித்துவத்தை பல சமயங்களில் பறைசாற்றுவதும், ஜனநாயகத்திற்கு முரணானது என்ற கருத்தை தேர்தல் பிரசாரமாக்க, மற்ற எதிர்க்கட்சிகளுக்கு ஓர் அஸ்திரமாக மாறிவிட்டது.

பொருளாதார வளம் என்ற பார்வையில், மொத்த வளர்ச்சி என்ற வார்த்தை, எல்லாராலும் பிரயோகிக்கப்படுகிறது. அதற்கான குறியீட்டு சொல், ஜி.டி.பி. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட்ட கொள்கை குறிப்பில், இதுவரை பேசப்பட்ட, 7.4 சதவீதம், 7.2 சதவீதமாக குறைகிறது.இதை வைத்து, இந்த மத்திய ஆட்சியில், வளர்ச்சி சதவீதம் குறைந்தது என்று, அடுத்ததாக எதிர்க்கட்சிகள் பேசலாம்.

அதேசமயம், வராக்கடன் விஷயத்தில், அதிகப் பணத்தைப் பெற்று, சுமையாக மாறும் சூழ்நிலைகளை, வங்கிகள் கையாளும் நிலை மாறப் போகிறது. இதன் முடிவுகள், பெரும்பாலான மக்களுக்கு சம்பந்தப்பட்ட விஷயமல்ல.ஆனால், ரிசர்வ் வங்கி அறிவித்த ரொக்க கையிருப்பு வட்டி விஷயத்தில், மேலும், 25 அடிப்படை பாயின்டுகள் குறைப்பு, பலராலும் வரவேற்கப்படும். அதேசமயம், வங்கிகள் தரும் வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்றவற்றில், இவை எந்த அளவு எதிரொலிக்கப் போகிறது என்பதை, எந்த அளவு கட்சிகள் ஆர்வமாக ஆராயும் என்பதை மதிப்பிட முடியாது.

இவை ஒருபுறம் இருக்க, அதிக அளவு மக்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள், ஆளுவோர் மீது கூறும் குற்றச்சாட்டு, தனிப்பட்ட அளவில் எந்தெந்த தொகுதியில் எதிரொலித்து, அது ஓட்டு வங்கியாக மாறப்போகிறது என்பதையும், தேர்தல் முடிவுகள் தான் காட்டும்.

அதேசமயம், காங்கிரஸ் அறிவித்த தேர்தல் அறிவிப்பில் உள்ள, 'நியாய்' திட்டம், மக்களுக்கு அள்ளித்தரும் திட்டம். அதற்கான அரசு திரட்டும் நிதி, எவரெல்லாம், 2.5 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருக்கின்றரோ, அவர்கள் மீது சொத்து வரி, 2 சதவீதம் விதித்து சேகரிக்கப்படும் என்ற விளக்கம் இருக்கிறது.

அதைவிட, 50 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வருமானம் கொண்டிருப்பவர்கள் மீது, 50 சதவீத வருமான வரி விதிக்கப்படும் என்ற கருத்தை ராகுலோ, அவரைச் சார்ந்திருக்கும் முன்னாள் அமைச்சர்களோ விவரிப்பரா என்பதற்கு பதில் கிடைக்காது.இதை விட, அரசுத் துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், ஏற்கனவே அதிக பணியாளர் சுமையைக் கொண்டிருக்கிறது என்பது பழைய தகவல்.

இந்த நிறுவனங்களில், காலியாக உள்ள, நான்கு லட்சம் இடங்களை, உடனடியாக நிரப்புவதாக காங்கிரஸ் அறிக்கை கூறுவது, மற்றொரு புரட்சியாகும்.இதேபோல், அரசியல் பதவிகள் உட்பட, எல்லா இடங்களிலும் பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு என்ற உறுதிமொழி, காலம் காலமாக கேட்டு புளித்துப் போன விஷயம்.
ஆனால், வயநாட்டில் போட்டியிடும் ராகுல், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, அவரது சகோதரி பிரியங்கா கூறிய கருத்து, ஆராயத்தக்கது. ஓரங்கட்டப்பட்ட மூத்த தலைவர் அத்வானி, பிரதமரின் குரு என்று கூறும் ராகுலுக்கு, ஆர்.எஸ்.எஸ்., கொள்கைப்படி, 'காவிக்கொடி தவிர யாரும் குரு கிடையாது' என்பது, அறியப்படாதவிஷயமாகி இருக்கிறது.

மூன்றாவது கூட்டணியாக, சந்திரபாபு, மம்தா சேர்ந்தால், மம்தா பிரதமர் என்ற மாயத் தோற்றம் அதிகமாக பேசப்பட்ட காலம் என்ன ஆனது என்பதை, மீடியா விவாதங்கள் அலசலாம். இவைகளை விட, பணவீக்கம் தொடர்ந்து குறைந்திருப்பதும், விலைவாசி அதிகரிக்காதிருப்ப தையும், இந்தியாவின் ஒட்டுமொத்த கவுரவம் குலையாமல், ஓங்கியிருக்கிறது என்பதும், மக்களிடம் சென்றடைந்த தகவலா என்பதற்கும், எளிதாக விடை கிடைக்காது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement