Advertisement

தமிழரின் இப்போதைய தலையெழுத்து!

தமிழரின் இப்போதைய தலையெழுத்து!
எம்.கலைவாணி, அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., தலைமையில், இரண்டு மெகா கூட்டணிகள், தேர்தலை சந்திக்க தயாராகி விட்டன. இரு கட்சிகளும், சந்தர்ப்பவாத கூட்டணி என, விமர்சித்து வருகின்றன.அன்று, தி.மு.க.,வையும், ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்த வைகோ, இன்று, ஒரு, எம்.பி., சீட்டுக்காக, அவர்கள் காலடியில் விழுந்து விட்டார்.அன்று, அ.தி.மு.க.,வையும், அதன் அமைச்சர்களையும், மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் வசை பாடினர், அன்புமணி, ராமதாஸ். இன்று, ஏழு லோக்சபா சீட்டுடன், ஒரு, ராஜ்யசபா சீட்டையும் பெற்று, அ.தி.மு.க.,வின் கூட்டணிக்கு சென்று விட்டனர்.சட்டசபைக்கான, இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, எந்த சமரசத்துக்கும், அ.தி.மு.க., - தி.மு.க., தயாராகி விட்டன. மத்தியில், ஒருவேளை மீண்டும், பா.ஜ., ஆட்சி அமையும் பட்சத்தில், அ.தி.மு.க., ஆதரவால் வெற்றி பெற்றால், அன்புமணி, மத்திய அமைச்சராவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.அதே போல், மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்து விட்டால், தி.மு.க., சார்பில், அமைச்சர்கள் பட்டியல் அளிப்பதில் தயங்க மாட்டார்கள்.இரண்டு கூட்டணியினரும், 'சூடு, சொரணை இருக்கிறதா...' என, ஒருவரை ஒருவர் மாறி மாறி கேட்டுக் கொள்கின்றனர். இது, மல்லாந்து படுத்து, வானத்தை பார்த்து உமிழ்வதை போலிருக்கிறது.தலைமைகளுக்கு, சூடு, சொரணை இருக்கிறதோ, இல்லையோ, இரண்டு கட்சியிலும் மானம் ரோஷம் உள்ள உண்மை தொண்டர்கள் உள்ளனர். பதவி, தோளில் கிடக்கும் துண்டு மாதிரி; அதை எப்ப வேண்டுமானாலும் துாக்கி எறிந்து விடலாம்.கொள்கை, இடுப்பில் கட்டும் வேட்டி மாதிரி; எந்த சூழ்நிலையிலும் நழுவ விடக்கூடாது. திராவிட கட்சிகளை உருவாக்கிய, பெருந்தலைகள் அன்றே உதிர்த்த தத்துவங்கள், இவை. ஆனால், திராவிட பாரம்பரியத்தில் வந்த, இரு கழகத் தலைவர்களும், தோளில் அணியும் துண்டை பாதுகாப்பதற்காக, இடுப்பு வேட்டியை துாக்கி எறியக் கூட, கூச்சப்படாதவராகி விட்டனர்!


அணி மாறுகிறதா70 தொகுதிகளின்ஓட்டுகள்!
எஸ்.காதர்பாட்ஷா, பேகம்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: உத்தர பிரதேசத்தில், பல ஆண்டுகளுக்கு முன் இழந்த, புகழையும், ஆட்சியையும் மீட்க, காங்கிரஸ் தலைவர், ராகுலும், அவரது சகோதரி பிரியங்காவும் போராடி வருகின்றனர். உ.பி., கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள, பிரியங்கா, வாக்காளர்களை நேரில் சந்தித்து, காங்கிரசிற்கு வலு சேர்த்து வருகிறார்.பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான, மாயாவதியும், சமாஜ்வாதி கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான, அகிலேஷும் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திக்கின்றனர். கூட்டணியில், காங்கிரசை சேர்க்காமல், கழற்றி விட்டதால், வேறுவழியின்றி, பிரியங்காவை முழுக்க முழுக்க நம்பி, கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மாயாவதி - அகிலேஷ் யாதவ் கூட்டணியால், மாநிலத்தை ஆளும், பா.ஜ.,விற்கும் பெரும் பின்னடைவு ஏற்படும் என கருதப்பட்டது. காஷ்மீரில், பயங்கரவாதிகள் தாக்குதலில், 40 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வீரமரணமடைந்ததும், அதற்கு பதிலடியாக, எல்லை தாண்டி பாகிஸ்தானில், பயங்கரவாதிகளின் முகாம்களை, இந்திய விமான படை அழித்ததும், அங்கு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.மக்கள் மத்தியில், பா.ஜ.,விற்கு எழுச்சி ஏற்பட்டுள்ளது; குறிப்பாக, பிரதமர் மோடி மீதான நம்பிக்கை கூடியுள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி, பா.ஜ.,வும் முழுவீச்சில், பிரசாரத்தில் இறங்கியுள்ளது. இதனால், அகிலேஷ் - மாயாவதியின் கூட்டணியின் வெற்றி கணக்கும் மாற வாய்ப்புள்ளது.'ராகுல், சோனியா தொகுதிகளில், தங்கள் கூட்டணி வேட்பாளர்கள் யாரும் நிற்க போவதில்லை' என, மாயாவதி அறிவித்துள்ளார். இது, காங்கிரசின் மீது ஏற்பட்டுள்ள கனிவாக இருந்தாலும், பா.ஜ., மற்றும் தங்கள் கூட்டணிக்கு எதிராக மக்கள் திரும்பி, காங்கிரசுக்கு அந்த ஓட்டுகள் சென்று விடக்கூடாது என, மாயாவதி கருதுகிறார்.உ.பி.,யை பொறுத்தவரையில், பா.ஜ.,விற்கு, 30 சதவீத ஓட்டுகளும், அகிலேஷ் - மாயாவதி தரப்பிற்கு, 60 சதவீத ஓட்டுகளும் உள்ளன. அங்குள்ள, 80 தொகுதிகளில், 70க்கும் மேற்பட்ட தொகுதிகளை, மாயாவதி தலைமையிலான கூட்டணியே வெல்லும் என, கருதப்பட்டது. எல்லை தாண்டி பாகிஸ்தானில், இந்திய விமான படை தாக்குதலுக்கு பின், அந்நிலை மாறி வருகிறது!


விலைமதிக்கமுடியாத ஓட்டைவிற்று விடாதீர்!
அ.முஹம்மது அசன்பாவா, மேட்டுப்பாளையம், கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: ஜனநாயக முறைப்படி, தேர்தல் நடந்தேற வேண்டும்; பணநாயகமாக மாறி விடக் கூடாது; அதற்கு, வாக்காளர்கள் ஆளாகி விடக்கூடாது.யாரை தேர்ந்தெடுத்தால், தொகுதிக்கு, நகரத்துக்கு, கிராமத்துக்கு, வார்டுக்கு, நன்மை கிடைக்கும் என்பதை, சிந்தித்து செயலாற்றுவது தான், புத்திசாலித்தனம்.மது, பணம், பிரியாணியை கொடுத்து, வாக்காளரின் உரிமையை, அரசியல்வாதிகள் பறிக்க நினைப்பர். அவர்களிடம், எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.ஓட்டுக்காக, வீடு தேடி பணம் தர முயற்சிப்பர். விலைமதிக்க முடியாத ஓட்டை காசுக்காக விற்று விடாதீர். அப்படி விற்றால், உரிமைகள் மறுக்கப்படும். நல்ல சாலைகள் கிடைக்காது; தெருவிளக்குகள் எரியாது; பஸ் ஸ்டாண்ட் வசதிகளை எதிர்பார்க்க முடியாது.எதற்கெடுத்தாலும் லஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும். அரசியல்வாதிகளில், ஏமாற்றுவோர் இருக்கத் தான் செய்வர். ஏமாறுவோர் இருக்கும் வரை, ஏமாற்றத்தான் செய்வர். லஞ்சம் கொடுப்போர் இருக்கும் வரை, லஞ்சம் வாங்குவோரும் இருக்கத் தான் செய்வர்.சிலர் சிலரை சில காலம் ஏமாற்றலாம்; பலர், பலரை பல காலம் ஏமாற்றலாம். ஆனால், யாரும் யாரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.ஐந்தாண்டுக்கு, ஒரு முறை தேர்தல் வருவதை நினைத்து, ஓட்டுச் சாவடிக்கு செல்லுங்கள். கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் நினைவில் வைத்து, நியாயமானோ

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    வீரம் பேசி வெத்து வெட்டாகப்போன வைகோவை மக்கள் காமெடி பீஸ் ஆகா தான் பார்க்கின்றனர் காசு அதிகம் கொடுப்பதுயார் அவர்களுக்கே வாக்கு என்னும் எண்ணம் வேரூன்றிவிட்டது தமிழன் விலையாகிப்போய்ஆண்டுகள் பல ஆகிவிட்டது

  • venkat Iyer - nagai,இந்தியா

    திரு.அசன்பா அவர்களே,நீங்கள் நகர்ப்புறத்தில் இருக்கின்றீர்களா?.கிராம புறங்களில் சரியான வேலை வாய்ப்பு இல்லாததால்,,மது பிரியர்கள் ஒரு குவார்ட்டரு க்காக எந்த வேலையையும் செய்ய காத்திரு க்கின்றார்கள்.தேர்தலில் வாக்கு அளிப்பதாக கூறி அனைத்து கட்சி உடன் பிறப்புகளிடத்தும்,சென்று மதுவை அருந்தாமல் இருக்க மாட்டார்கள்.தமிழகத்தில் குடி மகன்களின் வளர்ச்சி ஆண்டுக்கு 12% வளர்ச்சி உள்ளது.அப்படி சில மாதங்களில் குறைந்தால் அவர்களிடம் பணம் இல்லை என்று பொருள். வாக்களிப்பு, குடிமகன்களால் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. எனது பூர்விக கிராமத்தில் ,எதிர்கட்சி தொண்டர்களுக்கு,அந்த கட்சி தேர்தல் நாள் எதுவும் கவனிக்க வில்லை என்று ஆளும் கட்சி அவர்களுக்கு மது கொடுத்தது என்ற நிலையில்,கடைசி நிமிடத்தில் வாக்குகளை ஆளும் கட்சிக்கு போட்டதை பேச்சு வாக்கில் என்னிடம் தெரிவித்தனர். உண்மையில் அரசியல் வாதிகளிடமும் எவ்வித கொள்கை பிடிப்பு இல்லை.தொண்டர்களிடமும் சரியான கொள்கை பிடிப்பு இல்லை.இந்திய பொது மக்கள்தான் பாவம்.

  • venkat Iyer - nagai,இந்தியா

    எம் கலைவாணி சபாஷ்.வெளுத்து வாங்கிவிட்டார். தொடர்ந்து இவர்களை விமர்சிக்க வேண்டியதில்லை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement