Advertisement

மெஜாரிட்டி அரசே நல்ல தீர்ப்பு!

மெஜாரிட்டி அரசே நல்ல தீர்ப்பு!

அருணாச்சலமூர்த்தி, புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: ஒவ்வொரு, மாநில கட்சி தலைவர்களுக்கும், பிரதமர் ஆசை வந்து விட்டது. 'குறைந்தபட்சம், 30 லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற்றாலே போதும். நாம் தான் அடுத்த பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யும் இடத்தில் இருப்போம்' என, மார்தட்டி கூறுகின்றனர்.அந்த வகையில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தாவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான, மாயாவதியும் உள்ளனர்; இது, ஜனநாயகத்திற்கு, பலவீனத்தை தான் ஏற்படுத்தும்.கடந்த, ௧௯௯௬ல் நடந்த, லோக்சபா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அன்று, பா.ஜ., - ௧௬௧, காங்கிரஸ் - ௧௬௦ இடங்களை வென்றது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற, பா.ஜ., ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. ஆனால், மெஜாரிட்டி நிரூபிக்கப்படாததால், 13நாட்களில், வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.பின், காங்கிரஸ் ஆதரவில், தேவகவுடா பிரதமராக, 18 மாதங்கள் இருந்தார். காங்கிரசின் சூழ்ச்சியால், அவர் பதவி இறங்கினார். காங்கிரஸ் ஆதரவில், ஐ.கே.குஜ்ரால் பிரதமர் ஆனார். அவரையும், காங்கிரஸ் காலை வாரியதால், அவர் ஆட்சியும் கலைந்தது.இப்படி, இரண்டு ஆண்டுகளில், மூன்று பிரதமர்களை நாடு சந்தித்தது. அப்படி ஒரு நிலைமை மீண்டும் வராமல் இருக்க வேண்டும். அப்படி வந்தால், 1996 ல், நடந்த குதிரை பேர அரசியலை தான், மக்கள் எதிர்கொள்ள வேண்டும்.தற்போது, ஏழு கட்டங்களாக, லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. மொத்தமுள்ள, 543 லோக்சபா சீட்டுகளுக்காக, 90 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். பா.ஜ., கூட்டணி அணிக்கும், காங்கிரஸ் கூட்டணி அணிக்கும் இடையே தான் பலமான போட்டி உள்ளது.மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு, தனி மெஜாரிட்டி பெற, 274 எம்.பி.,க்கள் தேவைப்படுகின்றனர். நிலையான ஆட்சி, மத்தியில் ஏற்பட வழி வகை காண வேண்டும். தொங்கு பார்லிமென்டை, எக்காரணம் கொண்டும், மக்கள் ஏற்படுத்தி விடக்கூடாது. எந்த கட்சியாக இருந்தாலும், மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் வகையில், மக்கள் தீர்ப்பளிக்க வேண்டும்.அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மட்டுமே, தேசத்தின் வளர்ச்சியும், பாதுகாப்பும் ஸ்திரத்தன்மையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை!

கூட்டணியில்சாதித்தவர்வைகோ தான்!

கே.வி.பி.சியாமளநாதன், சிவகங்கையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் பிரதமர், ராஜிவ், படுகொலைக்கு பின், தமிழகத்தில் நடந்த, 1991 சட்டசபை தேர்தலில், 1991ல், மகத்தான வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தார், அப்போதைய, அ.தி.மு.க., பொதுச்செயலர், ஜெயலலிதா!அப்போது, சட்டசபையில் பேசும்போது, 'ராஜிவை கொன்ற, விடுதலைப்புலிகள் தலைவர், பிரபாகரனை, சட்டசபைக்கு கொண்டு வந்து துாக்கிலிட வேண்டும்' என, ஆவேசமாக பேசினார். 1994க்கு பின், ம.தி.மு.க.,வின் பொதுச்செயலர், வைகோ, பகிரங்கமாக, விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசினார். ஜெயலலிதாவிற்கும், வைகோவிற்கும், விடுதலைப்புலிகளின் விஷயத்தில், ஏழாம் பொருத்தமாகவே இருந்தது.விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைபாடு உள்ள கட்சியாக இருந்த, அ.தி.மு.க.,வுடன், 2006ல், கூட்டணி வைத்தார், வைகோ. அந்த தேர்தலில், ம.தி.மு.க.,விற்கு, 6 எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்தனர்.இப்படி, அரசியலில் எதிரும், புதிருமாக செய்து பழக்கப்பட்டவர், வைகோ. அவர் பேச்சை எல்லாம், தமிழர்கள் யாரும் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை.இன்று, தி.மு.க.,வின் கூட்டணியில், ஒரு சீட்டை பெற்று, லோக்சபா தேர்தலை சந்திக்க உள்ளார். 'விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கே, இரண்டு சீட்; ஆனால், வைகோவிற்கு ஒரு சீட்' என, பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.ஆனால், வைகோவிற்கு தான், ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது. திருமாவளவன் கட்சியினர், இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் தான், எம்.பி.,யாக முடியும். ஆனால், வைகோவிற்கு, ஜூனில், ராஜ்யசபா, எம்.பி., சீட் தயாராக உள்ளது. ம.தி.மு.க., தோற்றாலும், ராஜ்யசபா சீட்டால், அவரது கட்சி திருப்தி பட்டு கொள்ள முடியும்.தி.மு.க., கூட்டணியை பொறுத்தவரை, சாதித்தவர், வைகோ என்றால் மிகையாகாது!


அவலங்களைதீர்ப்பாராகவர்னர், புரோஹித்!

ஜி.சண்முகம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: பல்கலைகளில், பட்டமளிப்பு விழா மற்றும் துணை பட்டமளிப்பு விழா என, ஆண்டுக்கு, இரு முறை நடத்தப்படுவது வழக்கம். மாநில கவர்னர், பல்கலையின், வேந்தர் என்ற முறையிலும், அந்தந்தப் பல்கலையின் துணைவேந்தர்களும், நிகழ்ச்சியில் பங்கேற்பர்.அனைத்து கல்லுாரி மாணவர்களும், பல்கலை பட்டமளிப்பு விழாவில், பெற்றோருடன் பங்கேற்று, பட்டங்களை பெறுவர். ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து, வீட்டு சுவரை அலங்கரிப்பர்.மேலும், இந்த விழாக்கள், பட்டம் பெறும் மாணவர்களின் மனதில் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தின. பட்டமளிப்பு விழாவில் நிகழ்த்தப்படும் உரைகள், ஒருவித எழுச்சியையும் உருவாக்கின.நாளடைவில், இணைப்பு கல்லுாரிகளின் எண்ணிக்கை மற்றும் மாணவர்கள் சேர்க்கையும், பல மடங்கு பெருகி விட்டன. தற்போது, பல்கலையின் பட்டமளிப்பு விழாக்களில், முனைவர் பட்டம் பெறுவோரும், சிறப்பு நிலையில் தேர்ச்சி பெற்று பரிசு மற்றும் பதக்கங்கள் பெறும் மாணவர்கள் மட்டுமே, நேரில் அனுமதிக்கின்றனர்.மற்ற மாணவர்களுக்கும், அவர்கள் நேரில் வராமலேயே பட்டங்கள் வழங்கப்பட்டு விடுகின்றன. இந்த மாணவர்களும், பட்டங்களை பெற்று, மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும்.ஆனால், இதில் தான் பிரச்னை எழுகிறது... இரண்டாம் தர, மூன்றாம் தர வரிசை கல்லுாரிகள் பெருகி விட்டன. இக்கல்லுாரிகளில், உள்கட்ட அமைப்பு வசதிகள் இருக்காது; தகுதிமிக்க ஆசிரியர்கள் போதிய எண்ணிக்கையில் இருக்க மாட்டார்கள்.இக்கல்லுாரி மாணவர்கள், பல்கலை தேர்வுகளில் மிகச் சொற்ப விகிதத்திலேயே தேர்ச்சி பெற்று இருப்பர். இதனால், பட்டமளிப்பு விழாக்களில் மாணவர்களை அனுமதிப்பதில், இக்கல்லுாரிகளுக்கு ஆர்வம் இல்லை.உயர் கல்வி துறையில், பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வரும், கவர்னர், பன்வாரிலால் புரோஹித், இது போன்ற, அவலங்களை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!lll

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • venkat Iyer - nagai,இந்தியா

    திரு.சியாமலநாதன் கூறியது போல வைகோ ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு ஒரு இடம் பெற்றாலும்,மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பிகளுக்கு இருக்கும் மதிப்பும்,அதிகாரமும் ராஜ்ய சபா எம்.பிக்கு கிடையாது. தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து,அங்கு நடக்கும் பல்வேறு அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் தனி அந்தஸ்தினை பெற்று உள்ளார்கள்.அது ராஜ்ய சபா எம்பியால் முடியாது.ராஜ்ய சபா எம்.பி பதவி ஒரு மதிப்பு மிக்க பதவி. அவ்வளவுதான் அவர்கள்,ராஜ்யசபாவில்.கவலை ஈர்ப்பு தீர்மானத்தினை கொண்டுவரமுடியும்.எல்லாம் பாராளுமன்ற உதவியுடன் மட்டுமே செயல் வடிவம் கொண்டு வர முடியும்.அனுபவம் மிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள்,ஓய்வு பெறும் காலங்களில் மக்கள் முன் வெற்றி பெருவது கடினம்.புதிய பாராளுமன்ற உறுப்பினர்களால்,பொது பிரச்சனைகளை தக்க தருணத்தில் கேள்வி எழுப்புவதில் அவர்களுக்கு ,கட்சி கட்டுப்பாடு என்ற வகையில் சுதந்திரமாக கேட்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.இதோடு ,முன் அனுமதி கட்சியிலும்,பாராளுமன்றத்திலும் சமர்பிக்க வேண்டும்.ராஜ்ய சபாவில் கேள்விகளை கேட்டட பின்னர் பாராளுமன்றத்திலும் அதனை வைத்து கேள்வி கேட்கும் போதுதான்,கேள்வி முக்கியத்துவம் பெரும்.எது எப்படி இருந்தாலும்,வைகோ தனது கட்சியில் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால்,அவர் ராஜ்யசபா எம்.பி பதவிக்கு திமுக வில் எந்த மூஞ்சியை வைத்து கேட்பார் .தொண்டர்கள், எம்.எல்ஏ மற்றும் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் சும்மாவா பார்த்து கொண்டு இருப்பார்கள்.அதோடு சீனியர் ராஜ்யசபா எம்.பி ஆக இருந்து பதவி சுகம் அனுபவித்தவர்கள் சும்மா இருப்பார் களா?.வைகோவிற்கு இது தொல்லைதான். ஜெயித்தால்தான் எல்லாம்.ஸ்டாலின்,இதனை எல்லாம் கணக்கு பண்ணிதான் வைத்து இருப்பார்.பாராளுமன்ற தேர்தலில் மக்கள் செல்வாக்கை பல்வேறு கோணங்களில் பார்க்கத்தான் போகின்றோம்.ஒரு கட்சி வேட்டியை கட்டிய தொண்டர் தனக்கு இலவச மது கிடைக்காததால்,தனது குடும்பத்தினையே எதிர் கட்சிக்கு ஓட்டு போட வைத்த சம்பவமும்,வேறு கட்சியை சார்ந்தவர்கள்வீட்டிலிருந்து கார் வைத்து அழைத்து சென்ற கட்சிக்கு குடும்பமே ஓட்டு போட்டு இருக்கின்றது.இதெல்லாம் அன்றைய நேரத்தில் உண்டான மனமாற்றம்தான். பார்ப்போம்.இது கூட உறுப்பினரின் வெற்றியை திருப்பிவிடும்.வைகோ மற்றும் திருமா இவர்களின் உண்மையான செல்வாக்கு என்ன என்பதை ஆவலாகத்தான்ஒவ்வொரு வாக்காளரும் பார்க்க இருக்கின்றோம்.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    தமிழக அரசியலில் அடிக்கடி அணிமாறி கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டவர்கள் மருத்துவர் ஐயாவும் வைகோவும் அதிலும் கட்சியை எதற்காக ஆரம்பித்தாரோ அதை மறந்த மானமுள்ளராஜதந்திரி வைகோதான்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement