Advertisement

புதிர்களுக்கு விடை வரலாம்!

நாட்டின், 17வது லோக்சபா தேர்தல், ஏப்., 11ல் முதல்கட்டமாக துவங்கி, ஏழு கட்டங்களில், மே 19ம் தேதியுடன் முடிவடைகிறது.


அடுத்த லோக்சபா கூட்டத் தொடர் துவங்க, அதற்குப் பின் சில நாட்கள் இருப்பதால், புதிய அரசு பதவியேற்பு எளிதாக அமையும்.வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில், 90 கோடி மக்கள் ஓட்டளிப்பது என்பது, மிகப் பிரமாண்ட முயற்சி. அந்தக் காலத்தில் இருந்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுந்தரம், அதற்குப்பின் சேஷன், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர், தேர்தல் கமிஷன் அதிகாரங்களை சிறுகச் சிறுக அதிகரித்த போதும், பணப்புழக்க விஷயத்தில், இன்னமும் அரசியல் கட்சிகள் சாதுர்யம் வேறுவிதமாக இருக்கிறது.


மே.வங்கம், பீஹார் போன்ற மாநிலங்களில், பல கட்டங்களில் தேர்தல் நடக்கிறது. மிக அதிகபட்சமாக, 80 தொகுதிகள் கொண்ட, உ.பி.,யும் அப்படியே.தமிழகத்தில், ஏப்., 18ல் ஒரே கட்டமாக, தேர்தல் நடக்கும் போது, 'மினி' சட்டசபைத் தேர்தல் போல, 18 சட்டசபை தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க., ஆட்சியின், 'மெஜாரிட்டி' பலத்திற்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது என்பது போல, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் தலைமைக்கும் இது சவாலாகும்.


அதேபோல், ஜம்மு - காஷ்மீரில், பல கட்டங்களில் நடக்கும் ஓட்டுப்பதிவுக்கு, அதிக பாதுகாவலர்கள், கெடுபிடிகள் இருக்கின்றன. அங்கு, சட்டசபைத் தேர்தல், இப்போது நடக்கவில்லை. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இன்று, மோசமான சூழ்நிலை உள்ளது. பாகிஸ்தானில் உள்ள பாலக்கோட்டில், இந்திய விமானப்படைத் தாக்குதலுக்குப் பின், காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சிகள் நடத்திய பரப்புரைகள் சரியல்ல.


தேசியவாதத்தை பிரதமர் மோடி ஆதரித்து, அதன்மூலம் பொருளாதார வளத்தின் முக்கியத்துவத்தை மையப்படுத்தாத வகையில், இத்தேர்தல் பிரசாரத்தை திசை திருப்புவதாகவும், அறிஞர்களில் ஒரு சாரார் கூறுகின்றனர்.அன்றைய காலத்தில் இந்திரா, வங்கிகள் தேசிய மயம், ஏழ்மை ஒழிப்பு என்ற கருத்தில், நேருவுக்கு சமமாக இருந்த மொரார்ஜி தேசாய், எஸ்.கே.படேல் உட்பட, பலரை ஓரங்கட்டினார்.அன்றே மொரார்ஜி தேசாய், வங்கிகள் தேசிய மயம் முடிவில், 'ஒரு தெருவில், 10 அஞ்சல் நிலையம் போல ஆகலாம்' என்றார். முடிவில், வாராக்கடன் சுமையுடன், வங்கிகள் மாறின. வேறு உலக நாடுகள் வரிசைக்கு, நம் நாடு உயரவில்லை.ஆனால், புல்வாமா தாக்குதலுக்கு தொடர்பான பலர், இப்போது காஷ்மீரில் நடக்கும் மோதல்களில் இரையாகின்றனர். அவர்களுக்கு உதவும் பண பல சக்திகள் முடக்கப்பட்டிருக்கின்றன.


இந்த தேசியம் இப்போது தேவையா, வேண்டாமா என்ற கேள்விகளுக்கு விடை தேவை. இத் தேர்தல் பிரசாரத்தில், யாரும் நம் வீரர்கள் சாதனையை வைத்து, அந்தந்த மாநிலங்களில் ஓட்டுக் கேட்கக்கூடாது என்ற, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் கோரிக்கை சரியானதே. அவர் முன், ராணுவ வீரராக இருந்தவர். அதே மாநிலத்தில் உள்ள, கிரிக்கெட் வீரர் சித்து போல, பாகிஸ்தானின் இம்ரான் நண்பர் அல்ல.இத்தேர்தலில், மஹாராஷ்டிராவில், மூத்த தலைவர் பவார் போட்டியிடவில்லை.


அதேபோல், பா.ஜ.,வில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும் ஒதுங்கலாம். ஆளும், பா.ஜ.,வில், 70 வயதுக்கு குறைந்தவர்களுக்கு, 'சீட்' தரும் பேச்சு வரவேற்கத்தக்கது.மேலும், பரந்துபட்ட நாட்டில், ஏதாவது ஒரு விழா அங்கொன்றும் இங்கொன்றும் நடப்பதைக் காரணம் காட்டி, அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியை மாற்றுவதை விட, ஜனநாயகம் காக்க விரும்பும் மக்கள், தேர்தல் நாளன்று எப்படியும், தங்கள் ஓட்டுகளை பதிவு செய்வதில் அக்கறை காட்ட வேண்டும்.


ஏனெனில், 60 முதல், 70 சதவீதம் ஓட்டுப் பதிவு ஆனாலும், 32 சதவீதம் ஓட்டுகளைப் பெற்ற முதல் வேட்பாளர், எம்.பி.,யாகலாம். இதனால் அவர், 68 சதவீத மக்கள் ஆதரவைப் பெறவில்லை என்பது மறந்து போகும்.போட்டியிடும் கட்சிகளில், அதிக சதவீதம் பெறும் கட்சிக்கு, விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் தரலாம் என்றும், அதை சபையின் பாதி எண்ணிக்கையை நிரப்பவும், எஞ்சியவற்றை தற்போதைய முறையில் அமலாக்க யோசனை வந்தது.


தேர்தல் சீர்திருத்தம் மேற்கொள்ள, காங்கிரஸ் கட்சியின் நீண்ட ஆட்சிக் காலம் தவறியது. பாஜ., கட்சியில், சீட் தரும் நடைமுறைகளில், கண்காணிப்பு அதிகரிக்கும். இந்த அமைச்சரவையில், சிறப்பாக பணியாற்றிய ரவிசங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான், விஜய்கோயல் போன்ற ராஜ்யசபா, எம்.பி.,க்கள் களமிறக்கப்படலாம்.அதேபோல், இத்தேர்தலுக்குப் பின், சிவசேனா, அகாலிதளம், மற்ற மாநிலக் கட்சிகள், அதிக சீட்டுகள் பெறுவது எளிதல்ல. மிகப்பெரிய காங்கிரஸ் இயக்கம், ராகுல் தலைமையில், 125 சீட்களைப் பெறும் வாய்ப்பு, எந்தெந்த தொகுதிகளில் உள்ளன என்பதை மதிப்பிடுவதும் சரியானதாகும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement