Advertisement

அயோத்தி வழக்கு அடுத்த நகர்வு!

அயோத்தி வழக்கில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, கோகோய் தலைமையிலான பெஞ்ச், 'மத்தியஸ்தம்' என்ற சமரசப் பேச்சை நடத்த தீர்ப்பளித்திருக்கிறது.

இது, இந்த வழக்கின், 70 ஆண்டுகால இழுத்தடிப்பில், அடுத்த நகர்வு என்று கருதலாம்.ராம ஜென்ம பூமி என்பதை, 'ராம்லாலா' என்று அழைப்பர். அயோத்தியில் உள்ள இந்த புனித இடம், இன்றைய பைசாபாத் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இதற்கு முன் இந்த வழக்கு, அயோத்தியில் உள்ள ஐகோர்ட்டில் வெளிவந்த போது கூட, சமரச முடிவுகளை எடுக்க அறிவித்தது உண்டு.

ஆனால், அன்றைக்கு உள்ள சூழ்நிலைகளை விட, இன்று முற்றிலும் மாறிய சூழ்நிலை உள்ளது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், அயோத்தியில், ராமர் பிறந்த இடத்தில் அமைந்த பாபர் மசூதி குறித்த சர்ச்சை உண்டு. பாபர் என்பவர், நம்மை படையெடுத்து வென்றவர் என்பது, கி.பி., 15ம் நுாற்றாண்டில் இருந்து தொடரும் வரலாறு.இப்போது கூட, இத்தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் பெஞ்சில் உள்ள நீதிபதி வைத்தியநாதன், 'இப்பிரச்னை, இரு மதம் சார்ந்த மக்களுக்கு இடையே நீண்ட நாளாக உள்ளது' என்றிருக்கிறார்.

அதற்கு, தலைமை நீதிபதி கோகோய், 'பாபர் செய்தது என்ன? அவர், நாட்டில் ஊடுருவி, ஆட்சியைப் பிடித்தவர் என்ற பதிவுகள் தேவை இல்லை' எனக் கூறியிருக்கிறார்.அயோத்தியில் சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலம் குறித்த வழக்கில், சன்னி வக்பு போர்டு, நிர்மோகி அகாரா என்ற சாதுக்கள் சங்கம், ராம்லால் என்ற மூன்று அணி சொந்தம் கொண்டாடுகிறது. ஆகவே, இதில் யாருக்கு, இந்தச் சொத்து என்பதை வைத்தே, வழக்கு தொடர் இழுபறியாகக் காரணமானது.

ஆனால், ராமன் என்பவன், மரியாதைக்குரிய மாமனிதன். அவன் வாழ்ந்தானா என்பது அர்த்தமற்றது. தமிழ், மிகப் பழம்பெரும் கலாசாரச் செழுமை கொண்டது. சிலப்பதிகாரத்தை இயற்றிய புத்தமதத் துறவி இளங்கோ அடிகள், கண்ணகி துயருற்றபோது, அவளுக்கு அறிவுரை கூறும் கருத்துக்களில், ராமன், நளன் ஆகியோர் பட்ட வாழ்வுத் துயரத்தை கூறுகிறார்.

அதில், 'மெல்லிடை சீதையுடன் வனம் புகுந்து வாழ்ந்த மாமன்னன் ராமன்' என்று கூறி, அதை, 'நீ அறிய மாட்டாயா... அது நெடுமொழி' என்று கூறி, ராமன் இந்நாட்டின் போற்றத்தக்க வகையில் ஆண்ட மாமனிதன் என்பதை சிறப்பாக கூறியிருக்கிறார். ஆகவே, நீண்ட வரலாற்றை, நம்பிக்கையை, கதையாக திரிப்பது சரியல்ல.

இப்போது சுப்ரீம் கோர்ட், இந்த சமரசப் பேச்சில், ஓய்வு பெற்ற நீதிபதி கலிபுல்லா, வாழுங்கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மற்றும் தலைசிறந்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை நியமதித்திருக்கிறது. இவர்கள் மூவரும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.இவர்கள், இது குறித்த சமரசப் பேச்சுகளை முடிக்க, எட்டு வார காலம் தரப்பட்டிருக்கிறது. இது,

இந்த வழக்கு விசாரணை, கிடப்பில் போய்விட்டதோ என்ற சந்தேகத்தைக் குறைக்கும் முதல் முயற்சி எனலாம்.சமரசப் பேச்சுக்களை, சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையிடுவதுடன், நான்கு வாரத்தில் முதற்கட்ட அறிக்கையையும் பெறும். அத்துடன், இப்பேச்சு அனைத்தும் பதிவு செய்யப்படுவதுடன், அவை மீடியாவில் அவ்வப்போது இடம் பெறுவதை, கோர்ட் அனுமதிக்கவில்லை.

ஏனெனில், சமரசப் பேச்சு நடத்தும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஆன்மிகத் துறவி. ராமர் பிறந்த இடம் அயோத்தி என்றும், அதை புனிதமாகவும் கருதுபவர். பல்வேறு சமரசப் பேச்சுக்களை, உலக அளவில் நடத்திய அனுபவம் உடையவர். அதனால், அவர் பங்கேற்பதை முதற்கட்டமாக, ஒவைசி போன்ற இஸ்லாமிய தலைவர்கள் ஆதரிக்கவில்லை. வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு, 'இச்சமரச பேச்சு சவாலான விஷயம்' என்று கூறியிருக்கிறார்.

ஆனால், பகுஜன் சமாஜ் மாயாவதி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிலர், கோர்ட் முடிவை ஆதரித்திருக்கின்றனர். அயோத்தியில் கோவில் கட்ட ஏற்கனவே, 'ஸ்ரீராம்' என்ற பெயர் பொறிக்கப்பட்ட புனித செங்கல் ஏராளமாக குவிக்கப்பட்டிருப்பதுடன், அதற்கான பணிகளையும், விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் செய்திருக்கின்றன.

அயோத்தி என்பது, இந்நாட்டு மக்களின் நம்பிக்கை கேந்திரமாகும். காசி, காஞ்சி, மதுரா, அயோத்தி ஆகியவை, பல வரலாற்று சீரழிவுகளில் அழிந்திருக்கின்றன. நம் மதுரையும், அதற்கு விதிவிலக்கல்ல.

ஆனால், அரசியலமைப்பு சட்டம் அல்லது ஜனநாயக நெறிமுறைகள் என்ற கருத்தில், சமுதாயத்தில் இணைந்து வாழ விரும்பாத சிலர் எழுப்பும் குரலால், தொடர் சிக்கல் நீடிக்காதிருந்தால் சரி.அதே சமயம், இச்சமரச முயற்சிகள், லோக்சபா தேர்தல் முடிவடைந்த பின்னால் வரும் அறிகுறிகளையும் கொண்டிருக்கிறது என்று யூகிக்கலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement