Advertisement

ஜெ., புகழ் பாடி வெற்றி பெற முடியுமா!

ஜெ., புகழ் பாடி வெற்றி பெற முடியுமா!ஏ.எம்.ஏ.ராஜேந்திரன், காளையார்கோவில், சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: எந்த திட்டத்தையும் அறிவிக்கக்கூடிய முழு உரிமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. அந்த அடிப்படையில், '5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. வங்கியில் கணக்கு வைத்துள்ள விவசாயிகளுக்கு, இந்த பணம், மூன்று தவணையில் வரவு வைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

'வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு, 2,000 ரூபாய் வழங்கப்படும்' என, மாநில அரசும் அறிவித்துள்ளது. தமிழகத்தில், வறுமைக்கோட்டிற்குள் கீழ் வசிப்போரை கணக்கு எடுத்து, ௧௩ ஆண்டுகள் ஆகி விட்டன. எங்கள் ஊராட்சியில், 5௦௦க்கும் அதிகமானோர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர். அதற்கான அளவு கோல், இதுவரை அறிவிக்கப்படவில்லை.

வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்போர் குறித்த, கணக்கை, புதிதாக எடுக்க வேண்டும். இவ்வளவு ஆண்டுகள், அறிவிக்காத மத்திய, மாநில அரசுகள், தேர்தல் நெருங்கும்போது, உதவித் தொகை வழங்குவதாக அறிவித்து இருப்பது, பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. தமிழக அரசின் நிதி நிலை மிக மோசமாக உள்ளது. 2006ல், 57 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக இருந்த, நிதிச்சுமை, 2019ல், 4 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு வட்டியாக மட்டும், 30 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. வட்டி கட்டும் அரசு, கடனை வாங்கி, மக்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

வட்டியாக செலுத்தும் தொகையை பயன்படுத்தி, எத்தனையோ தொழிற்சாலைகள் அமைக்கலாம். அவற்றின் மூலம், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தரலாம்; குடிநீர் பற்றாக்குறையை போக்க, புதிய திட்டங்களை தீட்டலாம். அதை விடுத்து, ஜெயலலிதா புகழ் பாடி, மீண்டும், லோக்சபா தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறலாம் என, அ.தி.மு.க., கனவு கண்டு வருகிறது; பலிக்கமா... பார்க்கலாம்!

***

நல்லோருக்கு ஓட்டளிக்க வேண்டும்!கே.சிங்காரம், தலைவர், நகர காங்கிரஸ், நாமக்கல்லிலிருந்து எழுதுகிறார்: தமிழக அரசின் கடன் சுமை, 4 லட்சம் கோடி ரூபாயை தாண்டி விட்டது. ஓட்டு அரசியலுக்காக, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இலவச பொங்கல் பொருட்களுடன், ௧,௦௦௦ ரூபாய் தரப்பட்டுள்ளது. தற்போது, வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்போருக்கு, ௨,௦௦௦ ரூபாய் வழங்கப்படுகிறது.

கடந்த, 2016ல், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், பஸ் கட்டணம், 70 சதவீதமும், சொத்து வரி, 50 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்களுக்கு, 100 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள், குடிநீர் கட்டணத்தை இரு மடங்காகி விட்டன. புதிய மின் இணைப்பு பெற, இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வளவு வரிகளையும், மக்கள் தலையில் சுமத்தி, இலவச அறிவிப்புகளால், மக்களை தமிழக அரசு ஏமாற்றுகிறது.

'கஜா' புயலால், 'டெல்டா' மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாத, பிரதமர், மோடி, தோல்வி பயத்தால், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு, மூன்று தவணைகளாக, 6,000 ரூபாய் அளிப்பதாக அறிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில், மத்திய, மாநில அரசுகள் உதவித்தொகை என்ற பெயரில், முதற்கட்டமாக, பணத்தை வாரி இறைத்து உள்ளன. இந்த நிலைப்பாட்டால், மக்களின் வாழ்வாதாரம் உயரப் போவதில்லை.

நெசவாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஜவுளி ஏற்றுமதி இல்லாத நிலையால், பொருளாதார மந்த நிலை நிலவுகிறது. பல லட்சம் பட்டதாரிகள் வேலையின்றி தவிக்கின்றனர். டாஸ்மாக் வருமானத்தை பெருக்குவதில், மாநில அரசு முழு மூச்சுடன் செயல்படுகிறது. கடந்தாண்டு, 28 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக பெருமிதம் கொண்டுள்ளது. குடியாலும், இலவசத்தாலும், மக்களை திசை திருப்பி, ஓட்டு பெற, ஆளும் கட்சியினர் முயற்சிக்கின்றனர். நாட்டில் நல்லோர் யார் என்பதை முடிவு செய்து, மக்கள் ஓட்டளிக்க வேண்டும்!

***

அருமையான தீர்ப்பு!எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் முதல்வர், ஜெயலலிதா உள்ளிட்ட, நால்வர் மீது, தொடரப்பட்டிருந்த, சொத்துக் குவிப்பு வழக்கில், சிறப்பு நீதி மன்ற நீதிபதி, குன்ஹா, 'குற்றவாளிகள் அனைவருக்கும், தலா நான்காண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம்' என, தீர்ப்பளித்தார். அந்த மனு மேல் முறையீட்டில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த குமாரசாமி, 'அனைவரையும் விடுவிக்கிறேன்' என, ஒரே ஒரு வரியில் உத்தரவிட்டார்.

அந்த விடுதலையை எதிர்த்து, உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டில், நீதிபதி, குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்து, தண்டனை உறுதி செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக, இந்த வழக்கை இழுத்தடித்து, ஒருவழியாக, தண்டனை வழங்கப்பட்டுள்ளது; ஒரு வழக்கையே இப்படி சவ்வாக இழுக்கின்றனர். அப்படி இருக்கையில், நீதியரசர், கிருபாகரன் சமுதாய அக்கறையால், வரலாற்று சிறப்புமிக்க ஆலோசனைகளை வழங்கியுள்ளார்... மின் வாரியத்தில் உதவி பொறியாளர்கள் நியமனம் தொடர்பாக நடந்த மோசடி குறித்து வழக்கு விசாரணை, மதுரை, உயர் நீதிமன்ற கிளையில் நடந்தது.

வழக்கை விசாரித்த, அவர், 'அரசிடம் சம்பளம் பெற்று, லஞ்சம் வாங்கும் அலுவலர்கள் மீது, தேசத் துரோக வழக்கு பதிய வேண்டும்; அவர்களை துாக்கில் போட வேண்டும்; சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்' என, அறிவுரைகளை கூறியுள்ளார். அவர் விசாரித்து கொண்டிருக்கும், இந்த வழக்கிற்கே, அந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி ஒரு புரட்சியை உண்டாக்கி இருக்கலாமே!

அப்படி ஒரு தீர்ப்பை வழங்கினால், அது, அடுத்து விசாரணையில் இருக்கும் பல ஊழல் வழக்குகளுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கும்! பல ஊழல் வழக்குகளில், குற்றவாளிகள் தப்புவதற்கு, நீதிமன்ற ஜாமினும், முன் ஜாமினுமே காரணமாக அமைந்து விடுகின்றன. நாட்டில் லஞ்சம் தான் ஒழியுமா... அரசிடம் சம்பளமும் பெற்று, லஞ்சம் வாங்கியபடியே பணியாற்றும் அலுவலர்கள் தான் திருந்துவரா?

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7)

 • K.n. Dhasarathan - chennai,இந்தியா

  நீதியரசர் கிருபாகரன் அந்த லஞ்சம் வாங்கிய பெருச்சாளிகளுக்கு தூக்கு தண்டனை அளித்திருந்தால் நீதித்துறைக்கே ஒரு மரியாதை கிடைத்திருக்கும். குன்ஹா நீதிபதி இடத்தை தாண்டி எங்கோ போயிருப்பார். எந்த நீதிபதி அந்த சரித்திர தீர்ப்பு வழங்குவாரோ , பொறுமையுடன் காத்திருக்கோம்.

 • karutthu - nainital,இந்தியா

  வேலை செய்யும்போது வருமானவரி கட்டுகிறவன் வேலையில் இருந்து ஒய்வு பெற்றவுடன் எப்படி வறுமைக்கோட்டிற்கு கீழ் வந்துவிடுகிறான் இதை அரசு கண்டுபிடிக்குமா அல்லது கண்டுக்காத விட்டிடுமா ???

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  அதுதான் ஆயிரம், ஐந்நூறு. வாங்கும் நாலு பேரைப் பிடித்து சட்டுப்புட்டென்று இரண்டாண்டு 'கொடுத்து' முடிக்கிறார்களே அவ்வளவுதான் இவர்கள் வீரம். '

 • venkat Iyer - nagai,இந்தியா

  எஸ்.ராமு அவர்கள் கூறியது போல நீதியரசர் திரு.கிருபாகரன் அவர்கள் இதுபோல நீர்நிலை ஆக்கிரமிப்பு பிரச்சனைகளிலும் ,கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணையாக இருப்பதை அறிந்து,ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்திற்கு கண்டனங்களை தெரிவித்து,ஆக்கிரமிப்பின் விவரங்களை கேட்டு அரசிற்கும்,மாவட்ட நிர்வாகத்திற்கும் பல முறை கெடு தேதி கொடுத்து ஆட்சேபங்களையும்அரசின் மெத்தனம் போக்கையும் கண்டித்து நீதியரசர் தெரிவித்து இருந்தார்.ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அதனை செவிமெடுக்கவில்லை..கடவுள்தான் இதற்கு கண் திறந்து வழிகாட்ட வேண்டும்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இன்றைக்கு தமிழ்நாட்டில் நேர்மையான அரசியல்வாதிகள் நல்லகண்ணுவும் சங்கரய்யாவும் மட்டும் அவர்களையே தோற்கடித்தவர்கள் நம் சனங்கள்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  அந்த ஆறாயிரம் ரூபாயில் பாதி டாஸ்மாக் கடைக்கு உறுதி இன்னும் வேலைக்குப்போகாமல் இலவச அரிசி செலவுக்கு காசு மக்களை சோம்பேறியாகும் திட்டம் இது விவசாயிகளுக்கு உண்மையான உர மானியம் விளைபொருளுக்கு நியாயமான விலை குளிர்பதன கிட்டங்கிகள் இதேமாதிரி உருப்படியாக செலவுசெய்யமாட்டார்களா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement