Advertisement

படிப்பு தராத அனுபவத்தை பயணம் தரும்!

சென்னையைச் சேர்ந்த ஆசிரியர், ஸ்ரீலதா தேவி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவள் நான். எங்கள் ஊரில், திருமணத்திற்கு முன், பெண்களை அதிகம் வெளியில் அனுப்ப மாட்டார்கள். என் சிறு வயதிலேயே, அம்மா இறந்து விட்டார். அப்பாவிடம், எங்கேயாவது ஊருக்கு போகலாமா என கேட்டால், 'திருமணத்திற்கு பின் போகலாம்' என்பார். பிளஸ் 2 படிக்கும் போதே, திருமணமாகி விட்டதால், அதன் பின், ஆசிரியர் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி முடித்தேன்.

திருமணத்திற்கு பிறகும், ஊரை சுற்றி பார்க்கும் ஆசை நிறைவேறவில்லை. வேலை விஷயமாக கணவர், வெளிநாடு போனார். 2004-ல், அரசுப் பள்ளியில் எனக்கு வேலை கிடைத்தது. வேலைக்கு சென்றதுடன், 'ரன்னிங், ஸ்விம்மிங், ட்ரெக்கிங், சைக்கிளிங்' என, எல்லா குழுக்களிலும் என்னை இணைத்துக் கொண்டேன். அப்போது தான், விளையாட்டு வீரர்களை நம் வீட்டிற்கு அழைத்து விருந்தோம்பல் செய்யும், 'கவுச் சர்பிங்' ----குழுவிலும் சேர்ந்தேன். வெளியூர், வெளி நாடுகளிலிருந்து, அந்த குழுவைச் சேர்ந்த யாராவது நம் ஊருக்கு வந்தால், நம் வீட்டில் இடவசதி இருந்தால், அவர்களை தங்க அனுமதிக்கலாம். நட்புரீதியான உபசரிப்பு அது. அப்படி சில நண்பர்களுக்கு என் வீட்டில் இடம் கொடுத்தபோது, நிறைய நாடுகளை பற்றி தெரிய வந்தது.

என் மகன், மகள் ஓரளவுக்கு வளர்ந்ததும், முழுவீச்சில் பயணம் செய்ய ஆரம்பித்தேன். முதலில், தமிழகம் முழுக்க போனேன். அடுத்து, ஐதராபாத், டில்லி, மும்பை போனேன். பெரும்பாலும் தனியாக தான் பயணம் செய்கிறேன். திடீரென, பயணம் செய்யலாம் என, தோன்றினால், கோயம்பேடு போய், பஸ் ஏறி விடுவேன். தனியாக பயணம் செய்யும் பெண்கள், தொழில்நுட்ப விஷயத்தில், 'அப்டேட்டட்' ஆக இருக்க வேண்டும். அந்த வகையில் எனக்கு மொபைல் போனும், 'கூகுள் மேப்'பும் கைகொடுக்கின்றன.

ஒருமுறை திருச்சி சென்ற போது, நடு ராத்திரியில் பஸ் போய் சேர்ந்தது. அந்த நேரம் அறை தேட முடியாது என்பதால், அடுத்தடுத்து பஸ்களில் ஏறி, வேறு வேறு இடங்களில் இறங்கி, விடியும் வரை சுற்றி, மறுபடியும் திருச்சி வந்தேன். அதன் வாயிலாக, கிளம்பும் நேரம் மட்டுமல்ல; போய் சேரும் நேரத்தையும் முன்கூட்டியே உறுதிப்படுத்துவதன் அவசியம் புரிந்தது.

ஓய்வு காலத்துக்கான விஷயங்களில், பயணத்தை சேர்க்க வேண்டாம். உடலில் தெம்பு இருக்கும் போதே, ரசித்து அனுபவிக்க வேண்டிய பேரின்பம், பயணம். இந்த உலகத்தில் எந்த மூலைக்கும் தனியாக போய் வந்துவிட முடியும் என்ற தைரியம், வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை பயணம் கொடுக்கும். அதேபோல், படிப்பு கொடுக்காத அனுபவத்தை, பயணங்கள் கொடுக்கும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement