Advertisement

இந்தியாவின் பொறுமைக்கு எல்லை இருக்கிறது...

இந்திய - பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி, பாகல்கோட் என்ற இடத்தில் இருந்த, 'ஜெய்ஷ் -இ - முகமது' பயங்கரவாதிகள் முகாமை, இந்திய விமானப்படை அதிகாலை நேரத்தில், குண்டு வீசித் தாக்கி அழித்தது, வரலாற்றில் இடம் பெறும்.பயங்கரவாத சக்திகள் ஆளுமையை அனுமதிக்கும் பாகிஸ்தான் ராணுவம், அதன் செயலை ஆதரிக்கும் பிரதமர் இம்ரான் அரசுக்கு இது, இந்தியா தந்த பதிலடி எனலாம். ஜம்மு - காஷ்மீரில், புல்வாமா பகுதியில், ரிசர்வ் படை சென்ற வாகன வரிசையில் நுழைந்து, வெடிகுண்டு நிரம்பிய கார் மூலம் நம் வீரர்கள், 40 பேரை அழித்த செயலுக்கு, இது முதல்கட்ட பாடம் எனலாம்.இதை சற்று தாமதமாக, இந்திய ராணுவம் செய்திருக்கிறது அல்லது வேறு விதமாக, பொறுமை நடவடிக்கை மூலம் பதிலளிக்கலாம் என்ற யோசனைகளை அடுக்கடுக்காக கூறும் பலரும், அரசின் இந்த முடிவை பாராட்ட, அரைகுறை மனதுடையவர்கள் எனலாம்.அதிகபட்ச தொல்லையைத் தரும் பயங்கர சக்திகள் அச்சம் கொள்ள வைக்க, சில அதிரடி அவசியம். பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஒரு பகுதியாக தொடர்வதும், ஜம்மு - காஷ்மீரில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மத ஆதரவு அடிப்படையில் செயல்படுவதை, மதச்சார்பு என்ற பார்வையில் தவறாக ஆதரித்த காலம், இதனால் முடிவடைந்தது.'எனக்கு நாடு முதன்மையானது; அதற்கு எந்த பாதகமும் வராமல் பாதுகாப்பேன்' என்று, இந்த அதிரடி தாக்குதலுக்குப் பின், பிரதமர் மோடி தெரிவித்த கருத்து, அவரது இயல்பான சுபாவத்தைக் காட்டுவதாகும். சுதந்திரத்திற்கு முன், சர்தார் படேல் கொண்டிருந்த சில கருத்துகளை, அவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் பிரதிபலிக்கிறாரோ என்ற கருத்து எழுகிறது.வியட்நாம் போர், மத்திய கிழக்கு மோதல்கள் ஆகியவற்றில், அமெரிக்க ராணுவ வீரர் யாராவது மரித்துப் போனால், அமெரிக்கா பழி தீர்ப்பது, அதன் வலிமையைக் காட்டும்; அதுவரை ஓயாது. அமெரிக்காவில், குண்டு வீசி அழிவைக் கொண்டு வந்த பயங்கரவாதி ஒசாமாவை, பாகிஸ்தான் அபாதாபாதில் தேடிக் கண்டறிந்து கொன்ற அமெரிக்க செயலை உலகம் ஆதரித்தபோது, பாக்., மவுனமாக இருந்தது வரலாறு.இத்தாக்குதலால், ஏற்கனவே பல தாக்குதலை தொடர்ந்த பயங்கரவாதி மசூத் அசார், தற்போது பாலகோட்டில் முகாம் நடத்தி, பயிற்சியாளர்களை அனுப்பும் செயலை செய்திருக்கிறான். அந்த படைக்கு தலைமைப் பயிற்சியாளராக இருந்த, யூசுப் அசார் உட்பட, 300 விஷமிகள் தீர்த்துக் கட்டப்பட்டது, உலகின் பார்வைக்கு வெளியாகி உள்ளது.அத்துடன், விமானப் படை போர் விமானங்களான, 'மிராஜ் 2000' மூலம், 40 நிமிடங்கள் புரிந்த சாகசம், டில்லியில், 'தேசிய போர் விமான நினைவிடம்' அமைந்த மறுநாள் நிகழ்ந்திருக்கிறது. புல்வாமா சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் பயங்கரவாத சக்திகள், அடுத்தடுத்த இம்சைகள் தர திட்டமிட்டிருந்ததை, வெளியுறவுச் செயலர் கோகலே, உலகின் மிகப்பெரும் ஐந்து நாடுகள், அண்டை நாடுகளான இலங்கை உட்பட சில நாடுகளுக்கு நடந்ததைத் தெரிவித்த செயல், நம் துாதரகச் செயல்பாடுகளில் மேலோங்கிய அணுகுமுறை.தவிரவும், புல்வாமா சம்பவத்தில், வீர மரணம் அடைந்த நம்மவர்கள் குடும்பத்தின் துயரை பொறுக்காத இந்தியர்கள் மனம், இதனால் சிறிது ஆறுதலடையும். தற்போது, விமானப் படைக்கு, 'சல்யூட்' என்ற ராகுலும், அந்த வீரர்களின் சாகசத்தை பாராட்டிய மம்தாவும், தன் உண்ணாவிரதத்தை கைவிட்டு கெஜ்ரிவால் பிரதிபலித்திருப்பது, வரவேற்கத்தக்கது.ஏனெனில், ஐதராபாத், எம்.பி., ஒவைசி, இத்தாக்குலை வரவேற்று பாகிஸ்தானை சாடியது, 'இந்தியர் அனைவரும் ஒரு குலத்தினர்' என்பதையும், அதிலும் அவர், 'பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னாவுடன் செல்லாமல், இங்கு வாழ்கிறோம்' என்று கூறியது, மனம் திறந்த பேச்சு எனலாம்.தற்போது நடந்த இத்தாக்குதல் அல்லது பாகிஸ்தான் உளவு பார்த்த சிறிய, 'ட்ரோன்' விமானம் வீழ்த்தப்பட்டது, தொடரும் இந்திய - எல்லைப் பாதுகாப்பு கோட்டை தாண்டி, பாக்., விமானம் குண்டு வீசியது ஆகியவை, இருநாடுகளுக்கு இடையே போர் வரும் அடையாளமல்ல.மாறாக, பாக்., பிரதமர் இம்ரான், இனியாவது ஏதாவது செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியிருக்கிறது. மேலும், பாக்., முன்னாள் அதிபர் முஷாரப், 'இந்தியா மீது, பாக்., ஒரு அணுகுண்டு வீசும் தவறைச் செய்தால், அந்த நாடே, இந்திய ராணுவத்தின் பதிலடியில் நிர்மூலமாகும்' என்ற கருத்து அழுத்தமானது. இதுவரை நாம் காத்த எல்லையற்ற பொறுமையை, உலக சமுதாயம் புரிந்து கொள்ள, நமது நீண்ட கால ராஜதந்திரமாக உருமாறியிருப்பதைக் காட்ட, இந்த அதிரடித் தாக்குதல் உதவிஇருக்கிறது எனலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    உங்களின் தலையங்கம் தேசப்பற்றுள்ள நடுநிலையாளரின் சிந்தனையோடு சிறப்பாக உயர்வாக தெரிகிறது எனக்கு. நான் மலரில் மட்டுமே தொடர்ந்து எழுதி கொண்டிருக்கிறேன் எனது கருத்தாக அந்த நேரத்தில் எனது மன எண்ணமாக. நான் எழுதுவது சரிதானா என்பதில் எனக்கு பல நேரங்களில் தடுமாற்றம் இருக்கும். அதை யாருடைய கருத்துக்களுடன் ஒப்பு நோக்கி உணர்வது என்பதை அறிந்து கொள்ள பண்பானவர்கள் தீப்பற்றுள்ளவர்களுடன் உரையாடி தெளிவு பெறவேண்டும் என்று எனது தந்தை சொல்வார். தெளிவு பெறுவதற்கு உங்கள் தலையங்கத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். சிறப்பாகவும் மன திருப்தியாகவும் உணர்கிறேன். நன்றி மலரே.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement